நடிகர் ராதாரவி ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராவைக் கொச்சைப்படுத்தும்விதமாக பேசியதற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இது பற்றி அந்தச் சங்கத்தின் தலைவரான நடிகர் நாசர், நடிகர் ராதாரவிக்கு அனுப்பியுள்ள கண்டனம் மற்றும் எச்சரிக்கை கலந்த கடிதம் இதுதான் :
பெறுநர் :
திரு.ராதாரவி அவர்கள்,
எண்.9, 1-வது தெரு, போயஸ் ரோடு,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
அன்புடையீர் வணக்கம் ..!
சமீபத்தில் நடந்த ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய ‘இரட்டை அர்த்த’ வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது..! இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது..!
இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்..! இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..!
இது ஒட்டு மொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக் கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை..?
திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக் கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்..!
ஆனால் இது போன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக் கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை ..?
எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இது போன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ..!
அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ திரைத் துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி !
(M.நாசர்)
தலைவர்