full screen background image

ராதாரவி மீது சமந்தா, டாப்ஸி, ராணா, குஷ்பூ, சாந்தனு, ரஞ்சனி, கமல்.. கடும் பாய்ச்சல்..!

ராதாரவி மீது சமந்தா, டாப்ஸி, ராணா, குஷ்பூ, சாந்தனு, ரஞ்சனி, கமல்.. கடும் பாய்ச்சல்..!

நடிகை நயன்தாரா பற்றி ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா மேடையில் நடிகர் ராதாரவி பேசிய பேச்சுக்கான கண்டனங்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து குவிந்து வருகின்றன.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் எச்சரிக்கையை அடுத்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் ராதாரவியை வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

tfpc-radharavi-condemn-letter

அந்த அறிக்கையில், “சமீபத்தில் நடைபெற்ற ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் திரையுலகின் மூத்தக் கலைஞரான நடிகர் திரு.ராதாரவி அவர்கள் அத்திரைப்படத்தின் கதாநாயகியான செல்வி நயன்தாரா அவர்களை மிகவும் கொச்சைப்படுத்திப் பேசியும், மேலும் மற்ற நடிகைகளையும் கொச்சைப்படுத்துவதுபோல் இரட்டை அர்த்த வசனத்துடன் பேசியது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

திரு.ராதாரவி திரைத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தும் சக கலைஞரை தகாத வார்த்தைகளால் பேசுவது ஒட்டு மொத்த சினிமாத் துறைக்கும் மற்ற மூத்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

திரைத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கும் திரு.ராதாரவி அவர்கள் நகைச்சுவை என்ற பெயரில், கை தட்டலுக்காக இது போன்ற கொச்சையான பேச்சுக்களை பேசி வருகிறார்.

அது திரைத்துரை மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் அவரது மேன்மையை குறைப்பது மட்டுமல்லாமல் திரு.ராதாரவி மேல் உள்ள மதிப்பையும், மரியாதையும் குறைக்கிறது. அது மட்டுமின்றி திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீரழிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செயலுக்காக நடிகர் திரு.ராதாரவி அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து கொள்கிறது…” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளரான எஸ்.எஸ்.துரைராஜும், ராதாரவி பேசிய அதே மேடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராதாரவிக்கு முன்பாகவே துரைராஜ் பேசி முடித்துவிட்டார். இருந்தும் ராதாரவி பேசிய பின்பு அவர் எழுந்து வந்து மைக்கைப் பிடித்து ராதாரவியைக் கண்டித்திருக்கலாம். ஆனால் அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் எழுந்து போய்விட்டு இப்போது அறிக்கை மூலமாகக் கண்டித்திருக்கிறார் துரைராஜ்.

samantha-15

நடிகை சமந்தா ராதாரவியின் இந்தப் பேச்சுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது இது :

“அய்யோ பாவம் ராதாரவி அவர்களே…

உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும்பாடு இருக்கிறதே..! நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள். உங்கள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள்…” என்று கிண்டல் செய்திருக்கிறார் சமந்தா.

rana-daggubati-1

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராணா, ராதாரவியின் இந்தப் பேச்சுக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது இது :

“ஒரு மிகச் சிறந்த நடிகையை பற்றி ராதாரவி அருவருப்பான கருத்துகள் கூறியதைக் கேட்டேன். உங்கள் கருத்துகள் உங்கள் அருவருப்பான குணத்தை காட்டுகிறது. பல கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்த அவரது திறனைக் காட்டுகிறது. இந்த சமூகத்துக்கு அவமானம் நீங்கள்…” என்று கோபத்தைக் காட்டியிருக்கிறார் ராணா.

kamalhasan-6

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தபோது, நயன்தாரா – ராதாரவி விவகாரம் குறித்தும் பேசினார்.

கமல்ஹாசன் இது பற்றி பேசும்போது, “நயன்தாரா எங்கள் கலையுலகத்தைச் சேர்ந்தவர். அவரை மரியாதையோடு நடத்த வேண்டிய முதற்கடமை எங்களுக்கு இருக்கிறது. ஒரு சாதாரண ஆண் மகனுக்கே அந்தக் கடமை இருக்கும் நிலையில், இவர் ஒரு கலைஞராக இருந்து கொண்டு இப்படிப் பேசியது வருத்தத்துக்கு உரியது. அவரைக் கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள் என நான் நினைக்கிறேன்..” என்றார்.

“அவரை திமுகவில் இருந்து நீக்கியுள்ளார்களே..?” என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, “பாராட்டுகள் தி.மு.க.விற்கு” என்றார் கமல்ஹாசன்.

santhanu bhagyaraj-1

ராதாரவியின் பேச்சு குறித்து நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இது:

“ராதாரவி ஒரு பெண்ணை மேடையில் அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. இப்படி பல சம்பவங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. ஆனால், நயன்தாரா அற்புதமான பெண்மணி, ஏன் அதற்கும் அப்பாற்பட்டவர். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வைத்தே அவரது வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் இங்கே கூச்சல் போடலாம். ஆனால், சரியானவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்…” என்று சொல்லியிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ்.

kushboo-2

ராதாரவியின் பேச்சு குறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இது :

தங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக் கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதைப் பற்றியெல்லாம் யாரும் பேசக் கூடாது. நயன் அகத்திலும், புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கை தட்டி ரசித்தவர்களும் திரைத் துறைக்கே அவமானச் சின்னங்கள்…” என்று குஷ்பூ கொந்தளித்துள்ளார்.

taapsee-1

நடிகை தாப்ஸி ராதாரவி பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இது :

“இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. நடிப்பதற்கான தகுதிகளைப் பற்றி விவரிக்க இவர் யார்..? இவரென்ன நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா..? இந்தத் துறையின் மிக வலிமையான நடிகையைப் பற்றி இவர் இப்படி பேசுவார் என்றால், மற்றவர்களைப் பற்றி இவர் எப்படி எல்லாம் பேசுவார்..?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார் தாப்ஸி.

anitha udheep-1

ராதாரவியின் பேச்சு குறித்து ‘90 ML’ படத்தின் இயக்குநரான அனிதா உதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இது :

“ராதாரவி இந்த இண்டஸ்ட்ரியில் தான் ஒரு மிகப் பெரிய ஆணாதிக்கவாதி என்றும் அப்படி இருந்தாலும்கூட தன்னை யாரும் கண்டுகொள்வதே இல்லை என்றும் கவலைப்பட்டிருக்கிறார். இப்படியிருந்தும்கூட எனது ஜூனியர்கள்தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்கள். நான் அவர்களை எப்படி முந்துவது என நினைத்து இதனை செய்திருக்கிறார்.

அதனால்தான் தென்னிந்திய சினிமாவில் ஒரு வெற்றிகரமான பெண்ணை மேடையில் கொச்சைப்படுத்தி அவமானப்படுத்துவதன் மூலம் ட்ரெண்டிங்கில் முந்த முயற்சி செய்திருக்கிறார் போலும்…” என்று தெரிவித்துள்ளார் அனிதா உதீப்.

ranjini-1

ராதாரவியின் பேச்சுக்கு ‘கடலோரக் கவிதைகள்’ நடிகை ரஞ்சனியும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பது இது :

“மூத்த நடிகரான ராதாரவி அண்ணனின் இந்த மோசமான வார்த்தைகளைக் கேட்டு பெரிதும் வருத்தப்படுகிறேன். பெண்கள் கமிஷனும், மனித உரிமை கமிஷனும் இந்த விஷயத்தில் ராதாரவி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பெண்களும், மாணவர்களும் பெரும் போராட்டம் நடத்திவரும் நேரத்தில் சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் படங்களுக்கான ஒப்பீடாக பொள்ளாச்சி விஷயத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். நீங்கள் மனிதர்தானா..? இது போன்ற சம்பவம் உங்களது குடும்பத்தில் நடந்திருந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா..?

இந்த நிகழ்ச்சியில் அவரது பேச்சை கை தட்டி ரசித்து, விசில் அடித்து ஊக்கப்படுத்தியவர்களையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை ஏன் தடுத்து நிறுத்தவில்லை. ஏன் மன்னிப்பு கேட்கவில்லை. இல்லை… இது அந்தப் படத்துக்கான விளம்பர ஸ்டண்ட்டா..?

மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கின்ற வகையில் பெண்கள் கமிஷனும், மனித உரிமை கமிஷனும் ராதாரவிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்…” என்று கோபக் கனலைக் கொட்டியிருக்கிறார் நடிகை ரஞ்சனி.

 

Our Score