நட்பை பற்றிய கதைக்கு தமிழ்த் திரையுலகில் எப்பொழுதும் தனி மவுசு உண்டு. தாய்ப் பாசம், காதலை தொடர்ந்து அதிக அளவில் விவாதிக்கப்பட்ட கதை நட்புதான். ‘கப்பல்’ என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தின் மைய அம்சம் ‘நட்பு’.
ஐ ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் கார்த்திக் ஜி கிருஷ். இவர் இயக்குனர் ஷங்கரிடம் இயக்கம் பயின்றவர்.
படம் பற்றி கேட்டபோது நீண்ட சொற்பொழிவே ஆற்றிவிட்டார்..!
“நட்பு எல்லோரையும் கவரும் அம்சம். வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற இந்த காலக்கட்டத்தில் நட்பு மட்டுமே ஒரு பிள்ளையின் குணாதிசயத்தை, வளர்ந்த பின்னரும் தீர்மானிக்கிறது. தனக்கு மட்டுமே உரியவர் என்ற மனப்பான்மை எல்லா உறவிலும் தழைத்தாலும், நட்பில் அந்த உணர்வு மேலிடும்போது வரும் பிரச்சினையை விவாதிக்கும் படம்தான் இந்தக் ‘கப்பல்’.
வைபவ் என்னுடைய கதையின் நாயகன் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். ‘மங்காத்தா’ படத்தில் வைபவை பார்த்தபோதே இதை உறுதி செய்துவிட்டேன். அவரது மற்றைய படங்களில்கூட ஒரு நண்பனாக அவர் நடிக்கும் விதம் என்னை கவர்ந்தது. சோனம் பரீத் பஜ்வா என்னும் புதுமுகம் நாயகியாக அறிமுகம் ஆகிறார். அவர் இருக்கும் இடமெல்லாம் சந்தோசம் பொங்கும்.
’கப்பல்’ சிரிப்புக்கும், சந்தோஷத்துக்கும் உத்திரவாதம் அளிக்கும் படம். V.T.V. கணேஷ், கருணாகரன், அர்ஜுன் நந்தகுமார் மற்றும் ரோபோ ஷங்கர் கூட்டணியில் படத்தின் நகைச்சுவை பகுதி ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும்.
‘சூது கவ்வும்’. ‘தெகிடி’ ஆகிய படங்களுக்கு ஒளிபதிவாளராக பணியாற்றிய தினேஷ் கிருஷ்ணன், ’மூடர் கூடம்‘ படத்துக்கு இசையமைத்த நடராசன் ஷங்கர், ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆறுசாமி, பல்வேறு வெற்றி படங்களின் பட தொகுப்பாளர் ஆண்டணி, பாடலாசிரியர்களான கார்க்கி, கபிலன்… நடன இயக்குனராக தினேஷ் என்று பல திறமைசாலிகளின் சங்கமமாக இருக்கிறது இந்தக் ‘கப்பல்’.
இந்த படத்தில் இயக்குனராக என்னுடைய பங்கு மிக முக்கியம் என்பதை நான் அறிவேன். என் மேல் நம்பிக்கை வைத்து, எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் செந்தில், அருள்ராஜ், மற்றும் சுதன் ஆகியோரின் சினிமா பற்றிய நுண்ணறிவும் ஆர்வமும் என் பொறுப்பை பல மடங்கு அதிகமாக்கியிருக்கிறது.
திரைக்கதையெங்கும் தென்படும் நட்பு, படப்பிடிப்பிலும் எதிரொலித்தது. ‘நட்பு’ என்ற வார்த்தையில் இருக்கும் பலம், இந்தக் ‘கப்பல்’ படத்தின் வெற்றி பயணத்துக்கு உரம் சேர்க்கும்..” என்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி.கிருஷ்.
எதிர்காலம் சிறந்து விளங்க வாழ்த்துகள் ஸார்..!