C.R. கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘செயல்.’
இந்தப் படத்தில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், ‘சூப்பர் குட்’ சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், தீனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகியிருக்கிறார்.
ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், நடனம் – பாபா பாஸ்கர், ஜானி, கலை – ஜான் பிரிட்டோ, தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பி.ரவி, தயாரிப்பு – C.R.ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர்.
மகேஷிண்டே பிரதிகாரம் மாதிரியான டைப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் இது. பொது இடத்தில் தன்னை அடித்த ஹீரோவை அதே இடத்தில் அடித்துத் துவைத்து பழி வாங்க துடிக்கிறார் வில்லன். அதனை செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் கதைச் சுருக்கம்.
ஹீரோ ராஜன் கேரளாவில் ஒரு ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் வேலை செய்பவர். சொந்த ஊர் சென்னைதான். அவருடைய அம்மா ரேணுகா வீட்டு வாசலிலேயே கையேந்தி பவன் நடத்தி பிழைப்பு நடத்தி வருகிறார்.
ஒரு நாள் தற்செயலாக தங்கசாலையில் இருக்கும் மார்க்கெட் பகுதிக்கு வருகிறார் ஹீரோ. அந்த மார்க்கெட்டில் மிகப் பெரிய தாதாவாக வலம் வருபவர் தண்டபாணி. இவர்தான் அங்கே மாமூல், தண்டல் எல்லாம் வசூலிப்பவர். ஹீரோ உச்சா போன இடத்தில் காசு கேட்க.. அது இலவசம்தானே என்று ஹீரோ பதில் சொல்ல.. அடிதடியாகிறது.
இடையில் அடிக்க வந்த தாதா தண்டபாணியை வெளுத்து வாங்குகிறார் ஹீரோ. குப்பையை தொட்டியில் வீசுவதை போல வில்லனை குப்பைத் தொட்டியில் வீசி விட்டு சர்வசாதாரணமாக செல்கிறார் ஹீரோ.
மார்க்கெட்டில் அத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்க தான் அடி வாங்கிய சம்பவத்தை நினைத்து நினைத்து குமுறுகிறார் வில்லன் தண்டபாணி. இனிமேல் மார்க்கெட்டில் தன்னை யாரும் மதிக்க மாட்டார்களே என்றெண்ணி கலவரமாகிறார்.
அவர் நினைப்பது போலவே மார்க்கெட்டில் காறித் துப்புகிறார்கள். போதாக்குறைக்கு இந்தச் சண்டை காட்சி யூடியூபிலும் பரவி மானத்தை வாங்குகிறது. அவருடைய குருநாதரான திமிங்கலத்திடம் போய் ஆலோசனை கேட்கிறார்.
உன்னை அடிச்சவனை அதே இடத்துக்குத் தூக்கிட்டு வந்து மக்கள் முன்னாடியே வைச்சு அடி. அப்பத்தான் அவங்க உன்னைப் பார்த்தா பயப்படுவாங்க என்கிறார் குரு. இதையேற்றுக் கொண்டு ஹீரோவைத் தேடுகிறார் வில்லன்.
ஹீரோவோ ஆலப்புழையில் தான் பள்ளியில் இருந்தே காதலித்து வந்த ஹீரோயினை பார்த்தவுடன் காதலாகி அவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்தக் காதலும் பலவித மோதல்களுக்குப் பிறகு ஓகேவாகி நிற்கிறது.
இந்த நேரத்தில் வில்லன் போனில் ஹீரோவை சென்னைக்கு அழைக்கிறார். தனக்கு வேலையிருப்பதாகச் சொல்லி எஸ்கேப்பாகிறார் ஹீரோ. ஹீரோவை சென்னைக்கு அழைத்து வருவதற்காக முனீஸ்காந்தையும், சூப்பர் குட் சுப்ரமணியையும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கிறார் வில்லன்.
வந்த காமெடியன்கள் இருவரும் படாதபாடுபட்டு ஹீரோவை சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால் வந்தவுடனும் பலவித வேலைகள் இடையிடையே குறுக்கே வர வில்லனின் சபதம் நிறைவேறாமலேயே போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் குறித்த நாளில் அந்த பழி வாங்கல் சம்பவம் நடக்காவிட்டால் மார்க்கெட் வில்லனின் கையைவிட்டுப் போகும் அபாயம் ஏற்படுகிறது. கொலை வெறியாகிறார் வில்லன். ஹீரோவோ தனது ஹீரோயினுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இனிமேல் என்ன என்பதுதான் இதற்குப் பின்னான திரைக்கதை.
புதுமுகம் ராஜன் தேஜேஸ்வருக்கு இதுதான் முதல் படம் என்பதால் நடிப்பைப் பற்றி அதிகம் விமர்சிக்க வேண்டாம். சண்டை, நடனம் இவற்றில் நன்கு தேறியிருக்கிறார். நடிப்பில்தான் இன்னமும் கொஞ்சம் கவனம் எடுத்து வேறு வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அதில் கிளிக்கானால்தான் எதையும் சொல்ல முடியும்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் இருக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றாற்போல் கதை, திரைக்கதைக்கு ஏற்றாற்போலவே நடித்திருக்கிறார். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். வசன உச்சரிப்பில் வீசும் மலையாள வாடையை அடுத்தப் படத்தில் அறவே அகற்றிவிட்டால் நல்லது.
ரொமான்ஸ் காட்சிகளில் வழிகிறார். கொஞ்சுகிறார். கெஞ்சுகிறார். மிரட்டல் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இன்னும் கொஞ்சம் அப்பாவியாய் உங்களுக்கு என்னங்க வேணும்.. நான் எதுக்கு நடுராத்திரில சுடுகாட்டுக்கு வரணும் என்பதை போலவே சில காட்சிகளில் நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
அறிமுக ஹீரோயின் தருஷி அழகாய் இருக்கிறார். கவர்ச்சி காட்டவில்லை. ஆனால் கவர்வதை போன்ற தோற்றத்தில் இருக்கிறார். நடிப்பென்று பார்த்தால் தேறியிருக்கிறார். மேலும், மேலும் நடித்தால் பார்க்கத் தயார்.
ஹீரோவின் அம்மாவான ரேணுகா சாதாரணமாகவே ஒரு லட்சம் கொடுத்தால் 4 லட்சத்திற்கு நடிப்பார். இதிலும் அப்படியே..! நிமிடத்தில் குணத்தை மாற்றிக் கொண்டு நடிக்கும் வித்தையை இதிலும் கொஞ்சம் காட்டியிருக்கிறார். நன்று.
வில்லனாக நடித்திருக்கும் சமக் சந்திராதான் படத்தின் உயிர்நாடி. அவருடைய பதைபதைப்பும், கோபமும், ஆத்திரமும்தான் படத்தை நகர்த்திக் கொண்டேயிருக்கின்றனர். எதற்கெடுத்தாலும் 100 டெசிபல் ஒலியில் கத்தியபடியே பேசும் முட்டாள் அடியாட்களை வைத்துக் கொண்டு ஹீரோவை சண்டைக்கு இழுக்கும் காட்சிகளிலெல்லாம் காமெடியானவை. ஆனால் வெறுமனே புன்னகைக்க மட்டுமே வைத்திருக்கின்றன என்பது சோகமான விஷயம்.
இன்னொரு குறிப்பிடத்தக்க நடிப்பை வில்லனின் மனைவியாக நடித்திருக்கும் வினோதினி காட்டியிருக்கிறார். பொங்கித் தீர்க்கும் மனைவியின் இயல்பான பேச்சில் இயல்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார் வினோதினி. தாலி விஷயத்தை போனில் சொல்லி அதைக் கொண்டு வந்து கொடுத்திட்டு போய்த் தொலை என்று மிரட்டல் விடுக்கும் காட்சியில் நம்மையும் மீறி சிரிக்க வைத்திருக்கிறார். பாராட்டுக்கள்.
அந்தத் தாலி கொஞ்சம், கொஞ்சமாக காசாகும் இடங்களிலும் “ஏண்ணே.. அண்ணி கழுத்துல இந்த ஒரு தாலியைத்தான் கட்டினீங்களா…?” என்று ஒரு அடியாள் அப்பாவியாய் கேட்கும் இடத்தில் சிரிக்காமல் இருக்க முடியாது..!
வில்லனின் அடியாட்களாக நடித்திருப்பவர்கள், திமிங்கிலமாக நடித்திருக்கும் ஜெயபாலன் என்று ஒரு சிலரும் குறிப்பிடத்தக்க அளவில் பார்க்கும்வகையில் நடித்திருக்கிறார்கள்.
சின்ன பட்ஜெட் படம் என்றாலும் ஒளிப்பதிவு கலர், கலராக ரீல் விட்டிருக்கிறது. கேரளாவின் ஆலப்புழையை அங்குலம் அங்குலமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். சாலக்குடி, வாகமன் பகுதிகளில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகளில் கேமிரா ஏக ரகளை செய்திருக்கிறது.
சித்தார்த் விபினின் இசையில் ‘நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா’ என்ற பாடலும், ‘டே மாமா விட்டுத் தள்ளு.. இதுக்கேண்டா இவ்வளவு டல்லு’ என்ற பாடலும் கேட்கும் ரகம். பாடல்களைவிடவும் பாடல் காட்சிகள் அமர்க்களம்..!
இடைவேளைக்குப் பின்னான காட்சிகளிடையே வில்லனின் குடும்பப் பிரச்சினைகளையும் இழுத்து அதில் ஒரு செண்டிமெண்ட் காட்சிகளையும் சேர்த்து கச்சிதமாகத்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அப்படியிருந்தும் ஏதோ ஒன்று இடிக்குதே என்பதை போல படத்தில் மூழ்க முடியவில்லை. இதற்கு இயக்குநரே பொறுப்பேற்க வேண்டும்..!
இந்தப் படத்தை நகைச்சுவை கலந்த பொழுது போக்கு படமாக உருவாக்கத்தான் இயக்குநர் நினைத்திருந்தார் போல..! ஆனால் அவரது இயக்கத் திறமையில் இருக்கும் குறைபாடு காரணமாய் ஏராளமான நகைச்சுவைக்கான ஸ்கோப்புகள் படத்தில் இருந்தும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறொரு திறமையான இயக்குநரிடத்தில் இந்தப் படம் சிக்கியிருந்தால் விழுந்து, விழுந்து சிரித்திருக்கலாம்.
இதேபோல் வில்லன் கேரக்டருக்கு ரோபோ சங்கர் இல்லாவிடில் ஆனந்த்ராஜ் என்று காமெடியை வரவழைக்கக் கூடிய வில்லன்களை நடிக்க வைத்திருந்தால் படத்தின் ரிசல்ட்டும் வேறு மாதிரியாக இருந்திருக்கும்..! படத்தின் கேஸ்டிங்கில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.
இது சீரியஸ் படமா.. நகைச்சுவை படமா என்று பட்டிமன்றம் வைத்து பேசும் அளவுக்கு இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். இன்னும் கொஞ்சம் யோசித்து செய்திருந்தால் படத்தின் தற்போதைய மவுத் டாக்கே வேறு மாதிரியாக மாறியிருக்கும்..!
ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இன்னொரு சிறந்த படம் கிடைத்து அவர்களுக்கு நல்ல வழியைக் காண்பிக்கும் என்று நம்புகிறோம்..!
எப்படியிருந்தாலும், ஒரு முறை பார்க்கக் கூடிய திரைப்படம்தான்..!