full screen background image

காளி – சினிமா விமர்சனம்

காளி – சினிமா விமர்சனம்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  சார்பில் தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகிய நான்கு நாயகிகள் நடித்துள்ளனர்.

மேலும், வேல ராமமூர்த்தி, யோகிபாபு, ஆர்.கே.சுரேஷ், ஜெயப்பிரகாஷ், நாசர், மதுசூதனன் ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – கிருத்திகா உதயநிதி, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், இசை – விஜய் ஆண்டனி, கலை இயக்கம் – எம்.சக்தி வெங்கட்ராஜ், சண்டை இயக்கம் – ஆர்.சக்தி சரவணன், நடன இயக்கம் – பிருந்தா, உடை வடிவமைப்பு – கவிதா, ரோஹித், உடை – கே.சாரங்கன், தயாரிப்பு நிர்வாகி – ஆர்.ஜனார்த்தனன், நிர்வாகத் தயாரிப்பு – எம்.சிவக்குமார், தயாரிப்பு மேலாளர் – கே.மனோஜ்குமார், பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், அருண் பாரதி, தமிழணங்கு, பாடகர்கள் – நிவாஷ் ரகுநந்தன், ஜானகி ஐயர், ஹேமச்சந்திரா, சங்கீதா, தீபக், ஜெகதீஷ், ஒலி பொறியாளர்கள் – எஸ்.சந்திரசேகர், ஆர்.ஜனார்த்தனன், கே.சக்திவேல், ஒலிக் கலவை – ரஹமத்துல்லா, கிராபிக்ஸ் – கலரிஸ்ட் – ராஜராஜன், ஒலி  வடிவமைப்பு – விஜய் ரத்தினம், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா-டி ஒன், விஷூவல் எபெக்ட்ஸ் – R Art Works – ரமேஷ் ஆச்சார்யா, ரியா, கார்வன்ஸ் ஸ்டூடியோ, புகைப்படம் – முத்துவேல், பப்ளிசிட்டி டிஸைனர் – கபிலன் செல்லையா, கிப்சன், டிஜிட்டல் பார்ட்னர் – விவோ.

பெண் இயக்குநரான கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ படத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் இது.

தன் உண்மையான தாய், தந்தையைத் தேடியலையும் ஒரு மகனின் கதைதான் இத்திரைப்படம்.

அம்மா செண்டிமெண்ட்டுக்கு தமிழ்ச் சினிமாவில் எப்போதுமே தனி மவுசு உண்டு என்பதால்தான் இதிலும் அநியாயத்திற்கு அம்மா செண்டிமெண்ட்டை கையில் வைத்துக் கொண்டே திரைக்கதையை அளந்திருக்கிறார்கள்.  

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பரத் ஸ்பெஷலாட்டி ஹாஸ்பிட்டல் என்ற பெயரில் மிகப் பெரிய மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் விஜய் ஆண்டனி என்னும் பரத். இவருடைய சொந்த மருத்துவமனைதான் அது.

28 வயதான விஜய் ஆண்டனிக்கு சமீப நாட்களாக ஒரு கெட்ட கனவு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு பாம்பு ஒன்று வயல் ஓரமாகக் கட்டப்பட்டிருக்கும் மாட்டினை கொத்த வர.. மாடு அதைப் பார்த்து மிரண்டு போய் கயிற்றை அவிழ்த்துவிட்டு ஓடுகிறது. எதிரில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒன்றைரை வயது சிறுவனை அந்த மாடு முட்ட வர.. அந்தச் சிறுவனின் தாய் சிறுவனைக் காப்பாற்ற இடையில் ஓடி வர.. மாடு அந்த தாயை தூக்கி வீசுகிறது.

இந்தக் கனவு அடிக்கடி தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதால் மிகுந்த மன சஞ்சலத்தில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த நேரத்தில் திடீரென்று விஜய் ஆண்டனியின் அம்மாவுக்கு கிட்னி பெயிலர் ஆகிறது. அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய கட்டாயம் என்பதால் விஜய் ஆண்டனி தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன் வருகிறார்.

இப்போதுதான் ஒரு உண்மையை விஜய் ஆண்டனியிடம் சொல்கிறார் அவரது தந்தை. விஜய் ஆண்டனி அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை இல்லையென்றும், வளர்ப்பு பிள்ளைதான் என்றும், தாங்கள் ஒரு அனாதை இல்லத்தில் இருந்து அவரை தத்தெடுத்து வளர்த்ததாகவும் சொல்கிறார். விஜய் ஆண்டனி அதிர்ச்சியாகிறார். ஆனாலும் அம்மா, அப்பா மீதான பாசம் அவருக்குக் குறையவில்லை.

அம்மா வீடு திரும்பிய பின்பும் அந்தக் கெட்ட கனவு அவரைவிடாமல் துரத்தியபடியே இருக்க.. தன்னுடைய சின்ன வயது வாழ்க்கையிலே ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அதனால்தான் இந்தக் கெட்ட கனவு தன்னைத் துரத்துவதாக நினைக்கிறார் விஜய் ஆண்டனி.

இதனால் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு தனது பூர்வீகம் பற்றி அறிய விரும்பி சென்னை வருகிறார் விஜய் ஆண்டனி. தன்னை அந்த அனாதை இல்லத்தில் கொடுத்துவிட்டுச் சென்றவர் பார்வதி என்றும், அவருடைய ஊர் கடம்பனூர் என்றும் தெரிகிறது.

அந்த ஊருக்குச் செல்கிறார். அங்கேயிருக்கும் ஒரு பெரியவர் பார்வதிதான் விஜய் ஆண்டனியின் தாயார் என்றும் அவர் மாடு முட்டி இறந்துவிட்டதாகவும் சொல்கிறார். தனது தந்தை யார் என்று அறிய முற்படுகிறார் விஜய் ஆண்டனி. அவருடைய தந்தை அருகில் இருக்கும் கனவுக்கரை என்னும் ஊரில் இருக்கலாம் என்று அந்தப் பெரியவர் சொல்கிறார்.

இதனால் கனவுக்கரை ஊருக்குச் செல்லும் விஜய் ஆண்டனி தான் யார் என்பதை சொல்லாமலேயே தனது தந்தை யார் என்பதை அறிய முற்படுகிறார். இதற்காக அதே ஊரைச் சேர்ந்த யோகி பாபுவின் உதவியோடு முதலில் கிளினிக் ஒன்றைத் துவக்குகிறார்.

அந்த கிளினிக்கிற்கு வரும் கிராமத்து மக்களிடத்தில் பார்வதி என்ற பெண்ணைப் பற்றி விசாரிக்கிறார். ஏதும் தெரியவில்லை. அவருடைய முதல் சந்தேகம் ஊர் பண்ணையாரான மதுசூதனன் மீது விழுகிறது. அவருடைய காதல் கதையைக் கேட்ட பின்பு அது பார்வதியில்லை என்று தெரிகிறது.

இதற்கடுத்து வேல ராமமூர்த்தி மீது சந்தேகம் வந்து அந்தக் கதையில் திரையில் விரிகிறது. இந்தக் கதையின் முடிவிலும் அந்த ஹீரோயின் இறந்துவிடுவதால் இதுவும் பார்வதியில்லை என்பது ஊர்ஜிதமாகிறது. கடைசியாக அந்த ஊர் பாதிரியாரான ஜெயப்பிரகாஷ் மீது சந்தேகம் வருகிறது. இந்தக் கதையும் திரையில் விரிகிறது.

கடைசியில் யார்தான் விஜய் ஆண்டனியின் உண்மையான அப்பா..? இறந்து போன பார்வதியின் உண்மைக் கதை என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை..!

விஜய் ஆண்டனி தனக்கு செட்டாகும் கேரக்டர்களில் மட்டுமே தான் நடிப்பதாக முதல் படத்தில் இருந்தே சொல்லி வருவதால் அவருடைய நடிப்பு வித்தியாசமாக இருக்கும் என்றெல்லாம் எண்ணாமல் படத்திற்கு வந்தால் படத்தை ஒரு திரைப்படமாக எண்ணி பார்த்துவிட்டு வரலாம்.

ஒரே மாதிரியான வசன உச்சரிப்பு, முக பாவனைகள்.. இவற்றுடன் 10 படங்களைத் தாண்டிவிட்ட விஜய் ஆண்டனியின் திறமையை நினைத்து ஆச்சரியப்படுகிறோம். அப்படியும் படத்தை ஓட வைத்துவிடும் திறமையும் இவர் தேர்வு செய்யும் இயக்குநர்களுக்கும், தேர்வு செய்யும் கதைக்கும் உண்டு. அத்தகைய கதைத் தேர்வுக்காகவும் விஜய் ஆண்டனியை பாராட்டலாம்.

இந்தப் படத்தில் இடையில் வரும் மூன்று கதைகளிலும் விஜய் ஆண்டனியே சின்ன வயது நாயகர்களாக நடித்திருக்கிறார். கொஞ்சம் மேக்கப்பில் கவனம் செலுத்தி மாற்றியிருந்தால் கவன ஈர்ப்பு பெரிதாக இருந்திருக்கும்.

ஷில்பா மஞ்சுநாத்துடனான காதல் போர்ஷனில் சின்ன வயது நாசராக விளையாடும் விஜய் ஆண்டனிதான் கொஞ்சம் ரசிக்க வைக்கிறார். இதற்கு தோதான இயக்கம், கலை இயக்கம், லொகேஷன்.. என்று பல காரணங்களும் உண்டு.

‘பத்திரிகையாளர்களுக்காக’ என்று சொல்லி ரொமான்ஸில் புகுந்து விளையாடியிருக்கும் விஜய் ஆண்டனி முதல்முறையாக ‘லிப் டூ லிப்’ கிஸ்ஸும் அடித்திருக்கிறார். இப்படி கிஸ் அடிக்கச் சொன்னது எந்தப் பத்திரிகையாளர் என்று விஜய் ஆண்டனியே சொன்னால் தெரிந்து கொள்வோம். சரி.. எங்க பெயரைச் சொல்லி வாழ நினைக்கிறார். வாழட்டும்..

ரோமியோ-ஜூலியட் நாடகம் என்று சொல்லி அம்ரிதாவுடன் அவர் ஆடும் ஆட்டமும், பாடல் காட்சியும் கொஞ்சம் எரிச்சலூட்டுகிறது. வேறு திரைக்கதை செய்திருக்கலாம். அவசரத்தனமாக அம்ரிதா செய்யும் வேலையினால் ஏற்படும் சோகம் விஜய் ஆண்டனியையும் தாண்டி ரசிகனைத் தொடவே இல்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.

ஜெயப்பிரகாஷ்-சுனைனா காதல் கதையில் இருக்கும் ஈரமும், காதலும்தான் படத்தின் ஹைலைட். ஆண்டாண்டு காலமாய் நீடித்திருக்கும் சாதி பாகுபாட்டையும் தைரியமாய் இதில் காட்டியிருக்கிறார் இயக்குநர். 30 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு என்றில்லை.. இன்றைக்கும் இது போன்ற சாதிய கொடுமைகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதை இயக்குநர் தனது செயலான மாமனாரிடம் எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

சுனைனா, அம்ரிதா, அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு ஹீரோயின்களில் அதிகம் கவர்பவர் ஷில்பாதான். வயதான வேல ராமமூர்த்தியால் கவர்ந்து வரப்பட்டு கட்டாய மனைவியாய் ஆக்கப்பட்டிருக்கும் அவருக்கே பிராக்கெட் போடுகிறார் கொள்ளைக்காரரான சின்ன வயது நாசர்.

இந்தக் கதையில் இருக்கும் அத்துமீறலையும் தாண்டிய காதலை ருசிகரமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா. இத்தனை தைரியசாலியாக இருக்கும் ஷில்பா ஏன் வேல ராமமூர்த்தியிடம் அடங்கிப் போயிருக்கிறார்.. எப்பவோ அவரை போட்டுத் தள்ளிவிட்டுப் போயிருக்கலாமே என்கிற கேள்வி எழாமல் இல்லை.

பாடல் காட்சிகளில் கிளாமரை சேலையிலேயே காட்டியிருக்கும் ஷில்பா சில வசனக் காட்சிகளில் விஜய் ஆண்டனியையும் சேர்த்தே காப்பாற்றியிருக்கிறார்.

ஷில்பாவுக்கு அடுத்து தேறியிருப்பவர் அம்ரிதா. மதுசூதனன்ராவின் கல்லூரி காதலியாக வருபவர்.. காதலை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்த்துவிட்டு பின்பு ஒரேயொரு நாடகத்தின் மூலமாய் காதலை ஏற்றுக் கொண்டு டூயட் பாடுவதும், இவரும் கடைசியாய் பரிதாபமாய் உயிரை விடுவதுமாய் கதையை நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார்.

அஞ்சலிக்கு இப்படியொரு சோகமான கேரக்டரா.. அதிகமான காட்சிகளே இல்லாமல்.. டூயட்டுகளும் இல்லாமல்.. காமாசோமா மருத்துவராக இவரைக் காட்டியிருப்பது ஒன்றுதான் படத்தில் மிகப் பெரிய மைனஸாக இருக்கிறது. நாட்டு மருத்துவராக இருக்கும் இவரே பொறுப்பில்லாத இளைஞியாகவும் காட்டப்படுவது இவரது கேரக்டரை சிதைத்துவிட்டது.

சுனைனா அமைதியான ஆனால் ஆழமான சிந்தனை கொண்ட பெண்ணாக தோன்றியிருக்கிறார். தன் ஒருத்தியால் நல்லாயிருக்கும் ஊரில் பிரச்சினை வேண்டாம் என்றும், ஜெயப்பிரகாஷின் வாழ்க்கையும் தடம் புரள வேண்டாம் என்று நினைத்து அவர் எடுக்கும் முடிவுதான் விஜய் ஆண்டனி இப்படி நாடு விட்டு நாடு வந்து தேடியலையும் காட்சிக்கான அடிப்படை காரணம்.

இதனை தெளிவாகச் சொல்லியிருந்தாலும் கடைசியாக சுற்றி வளைத்து மூன்றாவது கதையில் சொல்லியிருப்பதால் அப்பாடா.. இப்போதாவது சொல்லி முடித்தார்களே என்ற ஏக்கப் பெருமூச்சுதான் வந்தது..

இப்போதைக்கு பல படங்களைக் காப்பாற்றி வரும் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் படத்தின் முற்பாதியை தாங்கிப் பிடித்திருக்கிறார். தனது டயலாக் டெலிவரியில் சிற்சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார். புன்னகைக்கவும் வைத்திருக்கிறார்.

வேல.ராமமூர்த்தியின் உடல் மொழியும், நடிப்பும்தான் அந்தக் கேரக்டருக்கே கெத்து சேர்க்கிறது. இவர் இது போன்று இன்னும் எத்தனை கேரக்டர்தான் நடிப்பார் என்று தெரியவில்லை. போரடிப்பதற்குள் மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜெயப்பிரகாஷ் தனது இயல்பான நடிப்பால் கொஞ்ச நேரம் வில்லன் இவர்தானோ என்று நினைக்க வைத்துவிட்டார். அந்த அளவுக்கு நடித்திருக்கிறார். மதுசூதனன் ராவும் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு கிராமத்துக் கதைகளையும், காட்சிகளையும் முழுமையாக படமாக்கியிருக்கிறது. கல்லூரி காலங்கள் மற்றும் அமெரிக்கா என்று சொல்லி இங்கேயே எடுக்கப்பட்டிருக்கும் சில காட்சிகளில்கூட ரிச்னெஸ் தெரிகிறது. காதல் காட்சிகளிலும், குளோஸப் காட்சிகளிலும் மெய் மறந்து பார்க்க வைத்திருக்கிறது கேமிராவும், கேமிரா கோணங்களும்தான். இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் தனித்தனி பாராட்டுக்கள்..!

விஜய் ஆண்டனியின் இசையில் ‘அரும்பே’ பாடல் மிக அருமை. மீண்டும், மீண்டும் கேட்க வைக்கும் இசையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ‘அம்மா அழுகிறேன்’ பாடல் அம்மா செண்டிமெண்ட்டை ரசிகர்களிடத்தில் உருவாக்குகிறது. ‘யுகம் நூறாய்’, ‘போராயோ’ பாடல்களும் கேட்கும் ரகம்தான்..

பெண் இயக்குநர் என்பதால் இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் இவரால் இயக்க முடியாது என்ற கேள்விக்கே இடம் கொடுக்காமல் ரொமான்ஸ் காட்சிகளை முழு ஈடுபாட்டுடன் இயக்கியிருக்கிறார் கிருத்திகா.

அம்ரிதா, ஷில்பாவுடனான காதல் காட்சிகளே இதற்கு சாட்சி. இதேபோல் சின்ன வயது நாசராக நடிக்கும் விஜய் ஆண்டனிக்கு வைத்திருக்கும் சண்டை காட்சிகளும் அபாரம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. சண்டை இயக்குநருக்கு ஒரு பாராட்டு..!

என்னதான் விஜய் ஆண்டனி அமெரிக்க மருத்துவர் என்றாலும்கூட டி.என்.ஏ. பரிசோதனைக் கூடத்தை அவர் ஒருவரே அக்குகிராமத்தில் அமைப்பது போலவும், அதில் அவர் ஒருவரே பரிசோதனை முடிவுகளை சோதனை செய்வது போலவும் காட்சியமைத்திருப்பது கொஞ்சம் ஓவரான ஹீரோத்தனம்..!

இதேபோல் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் மக்களை அழைத்து சோதிப்பதெல்லாம் சமீபமாக உருவானதுதான். போலியோ சொட்டு மருந்துக்கு சிறப்பு கேம்ப் அமைப்பது எந்தக் காலத்தில் இருந்து துவங்கப்பட்டது என்பதையும் இயக்குநர் கொஞ்சம் தெரிந்து கொண்டு திரைக்கதையில் இணைத்திருக்கலாம்தான்..!

நடிகர் விஜய் ஆண்டனியும், இயக்குநர் கிருத்திகா உதயநிதியும் மென்மேலும் இதைவிடவும் சிறந்த திரைப்படங்களை கொடுக்க வாழ்த்துகிறோம்.

ஒரு பொழுது போக்கு சினிமாவாக நினைத்தால், இத்திரைப்படம் அதற்குத் தகுதியான படம்தான்…!

Our Score