“தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்” – நடிகர் விஷாலுக்கு இயக்குநர் சேரன் எச்சரிக்கை..!

“தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்” – நடிகர் விஷாலுக்கு இயக்குநர் சேரன் எச்சரிக்கை..!

நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இன்று மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இன்று மதியம் 3 மணிக்கு இயக்குநர் சேரன் தலைமையில் தயாரிப்பாளர்களில் ஒரு சிலர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நடிகர் விஷால் உடனடியாக தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும், இல்லாவிடில் தாங்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்தின் உள்ளே இருந்து கொண்டே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர்.

விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இயக்குநர் சேரன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று விஷாலுக்கு எழுதியுள்ள கடிதம் இது :

“கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் 2.12.2017 அன்று ஊடகங்களுக்கு ஒரு முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளீர்கள்.

அந்த செய்தி நீங்கள் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்கப் போவதாகவும், இன்று வேட்புமனு தாக்கல் செய்வதாகவும் அறிவித்திருக்கிறீர்கள். இந்த அறிவிப்பு தயாரிப்பாளர்களாகிய எங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை தந்தது.

அந்த அதிர்ச்சிக்கு காரணம்., நீங்கள் அரசியலில் புகுவதோ.. ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நிற்பதோ அல்ல..

1230 உறுப்பினர்களை கொண்ட வருடத்திற்கு 500 கோடி முதலீடு செய்யும் தொழிலாகிய தமிழ்த் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் நீங்கள் துளிகூட தயாரிப்பாளர்களின் பிரச்னையையோ, அவர்களின் எதிர்காலத்தையோ நினைக்காமல் சிறுபிள்ளைத்தனமாக ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருப்பது… ஒட்டு மொத்த தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல், உங்களை மட்டுமே உயர்த்திக் கொள்ள இந்த சங்கத்தின் தலைவர் பதவியை பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றே தெரிகிறது.

தயாரிப்பாளர் சங்கம் என்பதும் தயாரிப்பாளர்களும் என்றுமே எந்த அரசாங்கம் பதவிக்கு வருகிறதோ அதைச் சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

ஏனெனில் திரைத் துறைக்கான மானியங்களாகட்டும், வரிச் சலுகை வரிக் குறைப்பாகட்டும், டிக்கெட் விலை நிர்ணயிக்க அனுமதியாகட்டும், திரைத் துறையின் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் பைரசி, திருட்டு DVDs, Online Piracy, திருட்டுத்தனமாக Cable TV ஒளிபரப்பு போன்ற அனைத்துக்கும் நாம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அரசு சார்ந்தே இயங்க வேண்டிய கட்டாயம்.

அப்படியிருக்க தாங்கள் அவ்வப்போது அரசியல்வாதிகளை, அமைச்சர்களை மிரட்டும் தொனியில் ஊடகங்களில் பேசுவதும், அரசியலில் குதிக்கப் போவதாக கொடுக்கும் அறிவிப்புகள், இப்போது சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவிப்பு ஆகியவையெல்லாம் அனைத்து கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகும்.

எதிர்காலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  தயாரிப்பாளர்களுக்கும் சங்கத்துக்கும் எவ்விதமான ஒத்துழைப்பும் கொடுக்க முடியாத, மறுக்கும் சூழலை உருவாக்கும். இதனால் நமது தயாரிப்பாளர்கள் நிலை மட்டுமல்லாமல் நமது திரையுலகமே ஒட்டு மொத்தமாக முடங்கும், அழியும் நிலைக்கு தள்ளப்படும்.

தமிழ்த் திரையுலகம் என்பது வெறும் 1230 தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல. அந்த தயாரிப்பளர்களை நம்பி இருக்கும் 24 சங்கங்களின் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என ஆரம்பித்து போஸ்டர் ஒட்டுபவர்கள்வரை சுமார் 10 லட்சம் பேரின் வாழ்க்கை இதில் அடங்கியுள்ளது என்பது உண்மை. இது உங்கள் கவனத்திற்கு வராமல் போனது எப்படி எனத் தெரியவில்லை..

மேலும் நீங்கள் இதுவரை அதாவது தயாரிப்பாளர் சங்க தலைவராக ஆன 8 மாத காலத்தில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே செய்து முடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நீங்கள் இடைத் தேர்தலில் போட்டியிடுவதால் சங்கத்தின் வேலைகளை கவனம் செலுத்த முடியாது.

எனவே தயாரிப்பாளர்கள் அனைவரின் நலனை கருத்தில் கொண்டும் உங்கள் இயலாமையை கருத்தில் கொண்டும் தயவு செய்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை உடனேயே ராஜினாமா செய்யுங்கள் என்று அனைத்து தயாரிப்பாளர்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.

இதற்கு நீங்கள் உடனடியாக முடிவு எடுக்கவில்லையெனில், உங்கள் மீது அனைத்து தயாரிப்பாளர்களின் சார்பாகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்…” என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் தான் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், சேரனின் செயல் ஏற்கத்தக்கது அல்ல என்றும் கருத்து தெரிவித்தார்.

இதனால் இப்போதுவரையிலும் தயாரிப்பாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

Our Score