திரைப்படத் தொழிலில் அனுபவமில்லாமல்.. அது பற்றி எதுவுமே தெரியாமல் உள்ளே வந்து பெரும் பணத்தை ஒரே நேரத்தில் முதலீடு செய்துவிட்டு சம்பாதிக்கத் தெரியாமல் அனைத்தையும் இழந்து எத்தனையோ பேர் ஊரைவிட்டே ஓடியிருக்கின்றனர். சிலர் உலகத்தைவிட்டே மறைந்திருக்கின்றனர்.. அப்படியொரு சோகமான சம்பவம் நேற்று கோவையில் நடந்திருக்கிறது..!
கோவையைச் சேர்ந்தவர் 56 வயதான செல்வராஜ். திருமணமாகி 2 மகள்கள் உள்ளனராம். சினிமாவில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறியுள்ளார். முதலில் 2 படங்களை வாங்கி விநியோகம் செய்துள்ளார். பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் விட்டதை இதே இடத்தில்தானே பிடிக்க முடியும் என்பதற்காக புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துக் கொண்டிருந்த ‘ஒரு மழை, நான்கு சாரல்’ படத்தை பூஜையின்போதே வாங்கியிருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான், சொன்னபடி படத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவி்ட்டாராம்.
இந்தப் படத்தின் தயாரிப்புக்காக வாங்கிய கடனின்மேல் வட்டி மேல் வட்டி எகிறி.. நிம்மதியிழந்த நிலையில் நேற்று கோவைக்குச் சென்றவர் தனது குடும்பத்திற்கு உருக்கமான ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்..
செல்வராஜ் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது இதுதான். “நான் சினிமா துறை மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குடும்பத்துடன் சென்னை சென்றேன். முதலில் 2 படங்களை வாங்கி வினியோகம் செய்தேன். அதில் பெரும் நஷ்டம். மூன்றாவதாக ஒரு தயாரிப்பாளரிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டேன். இதற்காக லட்சணக்கணக்கில் கடன் வாங்கினேன். அதைத் திருப்பச் செலுத்த முடியாததால் 2 முறை தற்கொலைக்கு முயன்று பிழைத்துவிட்டேன். இந்த முறை உயிர் பிழைக்கப் போவதில்லை.
என் மனைவி மற்றும் 2 குழந்தைகளைவிட்டுப் பிரிய மனமில்லாமல் இருந்த நான் அவர்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு நான்தான் காரணம். என் மீது மிகுந்த பாசம் காட்டு எனது குழந்தைகளுக்கு கடன் தொல்லை தெரியாது. என் மீது சிறிதளவும் கோபம் காட்டாத என் அன்பு மனைவியை பிரியம மனமில்லாமல் புரிந்து செல்கிறேன். என் மீது மிகுந்த அன்பு, பாசம் வைத்துள்ள எனது மனைவி, குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்..” என்று கடிதத்தில் மிக உருக்கமாக எழுதியுள்ளார் செல்வராஜ்.
செல்வராஜ் மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கும் ‘ஒரு மழை நான்கு சாரல்’ படம் கடந்தாண்டு ரிலீஸாகிவிட்டது. இதில் இவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி தெரியவில்லை. தயாரிப்பாளர் ஏமாற்றியதால்தான் தனக்கு இத்தனை சிக்கல்களும் என்று கூறியிருக்கிறார்.
செல்வராஜ் தனது சங்கத்தின் மூலமாக இதனை அணுகினாரா என்றும் தெரியவில்லை. எப்படியிருப்பினும் ஒரு உயிர் போய்விட்டது என்பது சோகமானது.. புதிதாக வருபவர்கள் எந்த முன் அனுபவமும் இல்லாமல், சினிமா பற்றிய புரிதலே இல்லாமல் வெறும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு வந்து கோடம்பாக்கத்தில் குடியேறினால் கடைசியில் இந்த அப்பாவி செல்வராஜின் கதிதான் ஏற்படும்.
சினிமா என்பது கலைஞர்களில் கைகளில் இருந்து வியாபாரிகளின் கைகளுக்கு போனதன் விளைவுதான் இது..! இன்னும் எத்தனை, எத்தனை செல்வராஜ்கள் இதில் சிக்கப் போகிறார்களோ தெரியவில்லை..!