பல புதிய திறமைசாலிகளை இசைத் துறைக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருபவர் இசையமைப்பாளர் D.இமான்.
திறமைசாலிகளை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து தன் பாடல்களில் பயன்படுத்திக் கொள்கிறார் இமான். சமீபத்தில் ஒரு குக்கிராமத்தில் பாடல்களை பாடி பிரபலமடைந்த கண் தெரியாத கலைஞரான குருமூர்த்தியை, தேடிக் கண்டுபிடித்து தன் படத்தில் பாடல் பாடச் செய்ததன் மூலம் அவரது வாழ்நாள் கனவை நனவாக்கியுள்ளார் இமான்.
இதையடுத்து தற்போது இந்திய அளவில் மிகப் பிரபலமான பாடகரும், இசையமைப்பாளரான ஷங்கர் மாகாதேவனின் புதல்வர் சிவம் மகாதேவனை, தமிழில் பாடகராக அறிமுகப்படுத்துகிறார் இமான்.
நடிகர் ஜீவா நடிக்கும் ‘சீறு’ படத்தில் கவிஞர் விவேகாவின் வரிகளில் எழுதிய பாடலைப் பாடி ஒரு பாடகராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார் சிவம் மகாதேவன்.
வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே.வேலன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை ரியா சுமன் நடித்திருக்கிறார். நடிகர் நவ்தீப் வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – K.சம்பத் திலக், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், பாடல்கள் – கவிஞர் விவேகா, எழுத்து, இயக்கம் ரத்தன் சிவா.
இசையமைப்பாளர் D.இமான் இது பற்றி பேசும்போது, “இசைக்குப் பெயர் போன குடும்பத்தில் ஒருவரை அறிமுகப்படுத்துவதும் அவருடன் வேலை பார்ப்பதும் பெருமைமிகு தருணமாகும். தந்தையின் அடியொற்றி சிலர் வாய்ப்பு பெறுவார்கள்.
ஆனால் சிவம் இயல்பிலேயே நல்ல குரல் வளம் படைத்தவர். தனித் திறமை என்பது அவரது ஆத்மாவில் கலந்திருக்கிறது. தமிழக இசைத் துறை அவரது குரலை கொண்டாடும். எனது ஆசை, என்றாவது ஒரு நாள் ஷங்கர் மகாதேவன் மற்றும் அவரது மகன்கள் சித்தார்த், சிவம் ஆகிய மூவரையும் என் இசையில் பாட வைக்க வேண்டுமென்பதாகும். அதுவும் கூடிய விரைவில் நனவாகும்..” என்றார் நம்பிக்கையுடன்..!
இந்த ‘சீறு’ திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.