சீறு – சினிமா விமர்சனம்

சீறு – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Vels Films International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி K.கணேஷ் தயாரித்துள்ளார்.

நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை  ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, சதீஷ், வருண், ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ரத்ன சிவா, இசை – D.இமான், ஒளிப்பதிவு – பிரசன்னா S.குமார், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – சம்பத் திலக், சண்டை இயக்கம் – கணேஷ் குமார், நடன இயக்கம் – ராஜூ சுந்தரம், பாடல்கள் – விவேகா, பார்வதி, தயாரிப்பு ஒருங்கிணைப்பு – விக்கி, உடைகள் – சரளா விஜய்குமார், ஒப்பனை – கார்த்திக், ஸ்டில்ஸ் – ஈ.ராஜேந்திரன், போஸ்டர் டிசைன் – டிசைன் பாயிண்ட், நிர்வாகத் தயாரிப்பு – கே.அஷ்வின் குமார், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, D One, தயாரிப்பு –  Dr.ஐசரி K.கணேஷ், தயாரிப்பு நிறுவனம் – Vels Films International. நேரம் : 2 மணி 4 நிமிடங்கள்.

மாயவரத்தில் தனியார் கேபிள் டிவியை நடத்தி வருகிறார் மணிமாறன் என்னும் நாயகன் ஜீவா. உள்ளூரில் நடக்கும் அராஜக நிகழ்வுகளை யார் நடத்தினாலும் அதைத் தனது லோக்கல் சேனலில் செய்தியாக்கிவிடுவார். இதனால் லோக்கல் எம்.எல்.ஏ.வான ஆர்.என்.ஆர்.மனோகருக்கும் அவருக்கும் இடையில் விரோதம் ஏற்பட்டுள்ளது.

நாயகி ரியா சுமனை சினிமா தியேட்டரில் பார்த்ததும் லவ்வாகிறார் ஜீவா. அவரும் அப்படியே.. ஒரே பாடல் காட்சியில் காதல் படு ஸ்பீடாக பறக்கிறது.

எம்.எல்.ஏ. மனோகரின் கெமிக்கல் தொழிற்சாலை சுற்றுச் சூழலைப் பாதிக்கிறது என்று சொல்லி அதை மூட வைக்கிறார். அடுத்து டாஸ்மாக் கடையை நடத்தவிடாமல் தடுக்க போராட்டத்தை தூண்டிவிடுகிறார் ஜீவா. இதைப் பார்த்து கோபமடையும் எம்.எல்.ஏ. ஜீவாவை கொலை செய்ய ஆட்களை தேடுகிறார்.

சென்னையில் வியாசர்பாடியில் இருக்கும் மல்லி என்னும் லோக்கல் ரவுடியை செட் செய்கிறார் எம்.எல்.ஏ. மல்லி உளவியல் ரீதியாக எதிராளியைக் கணக்குப் போடுவதில் மன்னன். அப்படியே பிளான் செய்து ஜீவாவைத் தூக்க நினைக்கிறார். ஜீவாவோ மல்லி லைனிலேயே சென்று அவரை மடக்க முயல.. கோபமாகும் மல்லி, ஜீவாவை கொலை செய்ய மாயவரத்திற்கே வருகிறார்.

ஜீவாவின் தங்கையான காயத்ரி அப்போது நிறை மாத கர்ப்பிணி. இவருக்கு வலிப்பு நோயும் உள்ளது. இந்த நோய் உள்ளவர்களைக் கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக பிரசவ வலி வரும்போது வலிப்பு வரக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார் மருத்துவர்.

இந்த நேரத்தில் மல்லி ஜீவாவின் வீட்டுக்கு வரும்போது ஜீவா மல்லியைத் தேடி வெளியில் செல்கிறார். அதே நேரம் காயத்ரிக்கு பிரசவ வலியெடுக்க மல்லி காயத்ரியை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டு காணாமல் போகிறார்.

வீட்டுக்குத் திரும்பி வரும் ஜீவா காயத்ரி அங்கு இல்லாததால் சந்தேகம் அடைந்து மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். அங்கே காயத்ரிக்கு குழந்தை பிறக்கிறது. சரியான நேரத்தில் தன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்த மல்லியைத் தான் சந்திக்க வேண்டும் என்கிறார் காயத்ரி.

நன்றியுணர்வோடு மல்லியைத் தேடுகிறார் ஜீவா. மல்லிக்கு போன் செய்து அவனை உடனேயே தான் பார்க்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் ஜீவா. அதே துடிப்புடன் சென்னைக்குச் செல்கிறார். சென்னையிலோ இவர் போன நேரத்துக்கு மல்லி உயிருக்கு ஆபத்தான நிலைமையில் எதிரிகளிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

அவர்களுடன் சண்டையிட்டு மல்லியைக் காப்பாற்றும் ஜீவா.. மல்லியை மருத்துவமனையில் சேர்ப்பித்து அவரது உயிரையும் காப்பாற்றுகிறார். இப்போது மல்லியைக் கொலை செய்ய ஒரு பெரும் கூட்டமே திரண்டு வருகிறது. இவர்களுடன் ஜீவாவும் சிக்கிக் கொள்கிறார்.

மல்லியை ஏன் அவர்கள் கொலை செய்ய முயல்கிறார்கள்..? மல்லியைக் காப்பாற்றத் துடிக்கும் ஜீவாவின் முயற்சி வெற்றி பெற்றதா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘சீறு’ படத்தின் மீதமான திரைக்கதை.

மணிமாறனான ஜீவா தனது கேரக்டர் ஸ்கெட்ச்சின்படி நடிக்க வேண்டியிருந்ததால் சென்டிமெண்ட் காட்சிகளில் அதிகப்படியாகவே நடித்திருக்கிறார். அண்ணன்-தங்கை பாசம் அபரிமிதமாக இருப்பதோடு மனதைத் தொடுவதாகவும் அமைந்திருக்கிறது.

அந்த வயதுக்கேற்ற எகத்தாளம், நக்கல் இவற்றையெல்லாம் லோக்கல் எம்.எல்.ஏ. மனோகரிடம் காட்டுகிறார். ஏதோ ஒருவித சந்தோஷத்துக்காக தியேட்டரில் இருக்கும் வண்டிகளை எட்டி உதைத்துவிட்டுப் போகும் ஹீரோயினைப் பார்த்ததும் லவ்வாகும் அந்த பீலிங்கை நன்றாகவே கொடுத்திருக்கிறார்.

நண்பனுக்காக உயிரைக் கொடுக்க வந்து.. ஆவேசத்தையும், ஆக்ரோஷத்தையும் நடிப்பில் காட்டுகிறார். கடைசியில் மிகப் பெரிய ஹீரோயிஸ படமாகவே இது அமைந்துவிட்டதால் சண்டை காட்சிகளில் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. பாராட்டுக்கள்.

நாயகி ரியா சுமனுக்கு பெரிதாக வேலையில்லை. முதற்பாதியில் கால்வாசி நேரம் வந்தவர்.. பிற்பாதியில் அரை மணி நேரம் வந்திருக்கிறார். அவ்வளவுதான். அத்தனை அழகில்லை என்பதால் எந்தவிதத்திலும் நம் கவனத்தை ஈர்க்கவில்லை.

ஆனால் இதற்கு நேர்மாறாக துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் தங்கையான காயத்ரியும், பவித்ராவாக நடித்திருக்கும் சாந்தினியும் வட்டிக்கும், முதலுக்குமாக சேர்த்து வைத்து நடித்திருக்கிறார்கள்.

காயத்ரியின் சின்னச் சின்ன ஆக்சன்கள்கூட ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. பாசத்தைக் கொட்டும் தங்கையாக அவருடைய நடிப்பு ஓஹோ ரகம். இதேபோல் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் இடத்தைப் பிடிக்கும் சாந்தினியின் பேட்டியும், அதைத் தொடர்ந்த காட்சிகளில் அவருடைய தன்னம்பிக்கையான பேச்சும் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் படத்திற்கு மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட்டை கொடுத்திருக்கிறது.

மல்லியாக நடித்திருக்கும் வருண் சிம்ப்ளி ஆச்சரியம். இந்தப் படத்துக்காகவே தனது உடல் எடையைக் கூட்டியிருக்கிறார். உளவியல் ரீதியாக எதிராளியைச் சோதித்துப் பார்க்கும் டைப்பில் புதிய வில்லனுக்கான பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார்.

ஜீவாவுக்கு முதன்முதலில் போன் செய்து பேசும் டெக்னிக்கிலேயே “யார்ரா இந்த வில்லன்..?” என்று கேட்க வைத்திருக்கிறார். இப்போது நாயகனாகவும் நடித்து வரும் நேரத்தில் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கும் இவரது துணிச்சலுக்கு நமது பாராட்டுக்கள்.

சண்டை காட்சிகளை வடிவமைத்த கணேஷ் குமார் அடுத்தப் பாராட்டை மொத்தமாகப் பெறுகிறார். அவருடைய தயவால்தான் அந்தக் காட்சிகள் அனைத்திலும் அனல் பறக்கிறது. ஜீவாவின் உடல் வாகுக்கு இத்தனை பேரை சமாளிக்க முடியுமா என்னும் பேச்சே எழாத அளவுக்கு ஸ்டைலிஷாக அமைத்திருக்கிறார்.

இதற்கெல்லாம் உறுதுணையாய் இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார். பகல் காட்சிகளைவிடவும் இரவு நேரக் காட்சிகளில்தான் ஒளிப்பதிவின் தரம் தெரிகிறது. மல்லியைக் காப்பாற்றும் அந்த இரவு நேர சண்டை காட்சியில் வேகமும், இயக்கமும் அதிகம். லாரன்ஸ் கிஷோரின் படத் தொகுப்பில் படத்திற்கான கிரிப் கிடைத்திருக்கிறது.

இமானின் இசையில் ‘வா வாசுகி’, ‘செவ்வந்தியே மதுவந்தியே’ பாடல்கள் மனதைத் தொடுகின்றன. அதே சமயம் பின்னணி இசையை யாருக்கும் பாதகமில்லாமல் வழங்கியிருக்கிறார்.

இருந்தும், படம் இடைவேளையில்தான் துவங்குகிறது என்ற உணர்வு வருவதைத் தடுக்கவே முடியவில்லை. படத்தின் மையக் கருவே பவித்ராவின் கதைதான் என்பதுபோல் கொண்டு போயிருக்கலாம். நாயகன் ஜீவாவையும் ஒரு வழக்கறிஞராகக் கதையில் காட்டியிருந்தால் படமும் வேறு தளத்தில் பேசப்பட்டிருக்கும்.

ஒரு பிளஸ் டூ படித்த மாணவியின் பேச்சுக்கு வழக்கறிஞர்களிடையே இத்தனை தீவிரமாக எதிர்ப்பு எழும் என்ற திரைக்கதை நம்ப முடியாததாக இருக்கிறது. அதோடு ஒரு வழக்கறிஞர் போலீஸ் கண்ட்ரோல் ரூமில் அமர்ந்து கொண்டு அனைவரையும் ஆட்டிப் படைப்பதாக சித்தரித்திருப்பது கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

 அந்த மாணவிகள் ஒன்று திரண்டு கொலை செய்ய வருவதாகவும் காட்டியிருப்பதிலும் கொஞ்சமும் லாஜிக் இல்லை.. இது சற்றேறக்குறைய ஹீரோயிஸ படமே இல்லை. கதைதான் இதில் ஹீரோ. அப்படித்தான் திரைக்கதை எழுதப்பட்டிருக்க வேண்டும். படத்தின் திரைக்கதையை மாற்றியமைத்திருந்தால் படத்தின் போக்கே இப்போது மாறியிருக்கும் என்பதுதான் உண்மை.

இந்தாண்டுக்கான பொழுதுபோக்கிற்கான பக்கா கமர்ஷியல் பட லிஸ்ட்டில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.

Our Score