ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய்க்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதரவு..!

ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய்க்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதரவு..!

‘தர்பார்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட வேண்டி பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் சமீபத்தில் அந்தப் படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸிடம் பேச்சுவார்த்தை நடத்த அவரது வீட்டிற்குச் சென்றார்கள். ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ், போலீஸை வைத்து விநியோகஸ்தர்களை மிரட்டி வெளியில் அனுப்பிவிட்டார்.

நடிகர் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. “இந்தப் படப்பிடிப்பை நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடத்தக் கூடாது…” என்று கூறி பா.ஜ.க.வினர் சிலர் நேற்றைக்கு நெய்வேலி சுரங்கத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்தச் சம்பவங்கள் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று மதியம் பெப்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் ஆர்.கே.செல்வமணி.

அப்போது அவர் பேசுகையில், “அனைத்தும் சுமூகமாக போய்க் கொண்டிருந்த தமிழ் திரைப்படத் துறையில் தற்போது சின்னச் சின்ன பிரச்சனைகளை அபாயகரமான பிரச்சனையாக்க சிலர் முனைகின்றனர்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் சிலர் சென்று வன்முறையாகவோ, அத்துமீறியோ நடந்து கொண்டனர் என்று முருகதாஸ் காவல் துறையிலும், எங்களது இயக்குநர் சங்கத்திலும் புகார் தெரிவித்துள்ளார். அவருக்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்து, போஸ்டரும் அடித்து ஒட்டி இருக்கிறார்கள்.

பொதுவாக ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தர்மம் உண்டு. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் படத்தை தயாரித்து வினியோகஸ்தரிடம் விற்கிறார். அவர் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

அதை உருவாக்கியதற்கான கூலியை உருவாக்கியவர்கள் வாங்கிக் கொண்டு அதிலிருந்து விலகி விடுகிறார்கள். ஒரு திரைப்படத்தின் லாப. நஷ்டங்கள் அதை தயாரித்த தயாரிப்பாளரையும், படத்தை விநியோகித்த விநியோகஸ்தரையுமே சாரும். இயக்குநரை சாராது.

ஒரு படம் வெற்றியடைந்தால் இயக்குநருக்கு சம்பளம் சற்று உயரும். தோல்வி அடைந்தால் சம்பளம் குறையும். இல்லையென்றால் அடுத்தப் பட வாய்ப்புகள் கிடைக்காது.

விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதும் தவறு. தயாரிப்பாளர்கள் அதிக விலைக்கு விற்பதும் தவறு. தயாரிப்பாளர்களிடம் மட்டுமே கேட்க வேண்டிய விஷயத்தை தொழில் நுட்ப கலைஞர்களிடம் கேட்பதை இந்த சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.

படப்பிடிப்பு தளங்களில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வது, மற்றும் படப்பிடிப்பை நிறுத்துவது சரியான தீர்வாகாது. உச்ச நடிகர்களின் படப்பிடிப்புகள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் வேறு இடங்களில் நடைபெறுவதால் இங்குள்ள கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதுடன் இல்லாமல்… இதனால் ஹோட்டல், உணவு, கார்கள் என அதனை நம்பி உள்ளவர்களின் வருமானமும் கேள்விக்குறியாகிறது.

இதனால் தமிழகத்தில் செலவாகியிருக்க வேண்டிய பல கோடி ரூபாய்கள் அண்டை மாநிலத்திற்கோ, வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் படப்பிடிப்பை நிறுத்துவது என்ற கொள்கையை விடுத்து இந்தத் திரைத்துறையை காப்பாற்றும் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது.

இதையெல்லாம் நெறிமுறைபடுத்தி இந்தத் தொழிலை காப்பாற்ற தமிழக அரசு தலையிட்டு ‘தமிழ் பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேசன்’ என்கிற அமைப்பை உருவாக்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பெப்சி சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது…” என்றார்.

Our Score