Netco Studios சார்பில் தயாரிப்பாளர்கள் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘சீரன்’.
இந்தப் படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா, ‘ஆடுகளம்’ நரேன், அருந்ததி நாயர், சென்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, ஆரியன், ‘பரியேறும் பெருமாள்’ வெங்கடேஷ், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த ‘சீரன்’ திரைப்படம்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டை ஓட்டி படக் குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் பேசும்போது, “இந்தப் படம் எங்கள் நிறுவனத்தின் மூன்றாவது படைப்பு. இதுவரையிலும் எங்களுக்கு ஆதரவு அளிக்க வந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் என் சிறு வயதில் என் கிராமத்தில் பார்த்த பல விஷயங்களை இந்தப் படத்தில் சொல்லியுள்ளோம்.
தயாரிப்பிலும், நடிப்பிலும் இந்தப் படத்தில் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்த சோனியா அகர்வால், நரேன் மற்றும் இனியா அவர்களுக்கு நன்றி. மேலும், படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றி.
இயக்குநர் எனக்கு மிகச் சிறந்த நண்பர். தயாரிப்பாளருக்கு 1 ரூபாய் கூட நஷ்டம் வரக்கூடாது என்று நினைப்பவர் இயக்குநர். எனக்கும் அவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ஆனால், அது படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது. அவரிடம் பல விஷயங்கள் நான் கற்றுக் கொண்டேன். அவருடன் இணைந்து இன்னும் பல படங்களை செய்ய நினைக்கிறேன்.
அதேபோல் ஒளிப்பதிவாளர் மிகவும் சிறந்த காட்சிகளை இந்தப் படத்தில் உருவாக்கியுள்ளார். அவருக்கும் எனது நன்றி. பாடல்களும் நன்றாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும். ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள் நன்றி..” என்றார்.
இயக்குநர் துரை K.முருகன் பேசும்போது, “நான் இந்த இடத்தில் இருப்பதற்குக் காரணம் என் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக், அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படத்தின் E.P.அழகு கார்த்திதான் தயாரிப்பளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்தப் படம் தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது. அவர் சொன்னதைக் கேட்டபோது, என் சிறு வயதில் என் தாத்தா, எத்தனை ஜாதி வெறியுடன் இருந்துள்ளார் என்ற ஞாபகமும் மிகப் பெரும் கோபமும் வந்தது. அதனை அழுத்தமாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.
இந்தப் படத்தில் இனியா மற்றும் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அவர்களுக்குக் கண்டிப்பாக இந்தப் படம் ஒரு மிகப் பெரிய பெயர் வாங்கித் தரும். கதாநாயகன் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் ஒட்டு மொத்த உணர்வையும் கொடுத்து, சமூக கருத்தையும் பதிவு செய்யும். இந்தப் படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்…” என்றார்.
நடிகை இனியா பேசும்போது, “இந்தப் படத்தில் ‘பூங்கோதை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்திற்காக எடையை கூட்டியும், குறைத்தும் நடித்துள்ளேன். நான் இப்படி நடித்தது இதுவே முதல்முறை.
கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக் படத்தில் பாடல் காட்சிகளில் நடிக்கும்போது சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஒரு திறமையான தயாரிப்பாளர் மற்றும் நல்ல நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கிறேன். நான் இவரைப் பார்த்து சில தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ள உள்ளேன்.
இயக்குநர் மிகவும் பக்குவம் நிறைந்தவர். அவருக்குத் தேவையானது என்ன என்பதில் தெளிவாக இருந்தார். படப்பிடிப்பின்போது பல பிரச்சனைகள் நடந்திருந்தாலும், எந்த விஷயங்களும் படத்தைப் பாதிக்காதவாறு இந்தப் படத்தை அருமையாக உருவாக்கியுள்ளார்.
அதே போல ஒளிப்பதிவாளர் மிகப் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகள். மேலும் இந்தப் படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி..” என்றார்.
நடிகை சோனியா அகர்வால் பேசும்போது, “இந்தப் படம் ஒரு சமூக அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு இதன் கதை மிகவும் பிடித்திருந்தது. கோவில் படத்திற்குப் பிறகு கிராமத்துக் கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். தயாரிப்பாளர் மிகவும் சிறப்பாகத் தனது பணியைச் செய்துள்ளார். மேலும், அவரது கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
இயக்குநர் ஃபாஸ்டாக வேலை செய்வார். ஆனால், கச்சிதமாக காட்சிகளை உருவாக்கிவிடுவார். படத்தை நன்றாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர். மிகவும் பொறுமைசாலி. அருமையாகக் காட்சியைப் படமாக்கியுள்ளார். படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. உங்களுடன் பணி புரிந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறும்…” என்றார்.
நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் பேசும்போது, “இது ஒரு உண்மைக் கதை. இப்படியெல்லாம் நடக்குமா என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது. இப்படி ஒரு முயற்சியைச் செய்ததற்குப் பாராட்ட வேண்டும்.
முதல் படம் போலவே இல்லை. அழகாக நடித்துள்ளார் கதாநாயகன் ஜேம்ஸ் கார்த்திக். இயக்குநர் பல போராட்டங்களுக்கு பிறகு இந்தப் படத்தைக் கொண்டு வந்துள்ளார். தனக்கு காட்சி எப்படி வேண்டுமோ அது வரும்வரை விடமாட்டார், கடுமையான உழைப்பாளி, இன்னும் பெரிய இடத்திற்குச் செல்வார். நீங்கள்தான் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். யாரையும் இந்த படம் ஏமாற்றாது, அனைவருக்கும் ஒரு நல்ல கருத்தைச் சொல்லும் படமாக இந்தப் படம் இருக்கும் நன்றி..” என்றார்.
நடிகை அருந்ததி நாயர் பேசும்போது, “நான் மேடையில் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன். ஆனால், அது ஒரு முக்கியமான கதாப்பாத்திரம். கண்டிப்பாக உங்களை கவரும். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு எனது நன்றிகள்..” என்றார்.
நடிகை கிரிஷா குருப் பேசும்போது, “முதலில் இயக்குநருக்கு எனது மிகப் பெரிய நன்றிகள். எனக்கு இன்றும் நியாபகம் இருக்கிறது. நான் சென்னையில் வேறொரு படத்தின் படப்பிடிப்பிற்காக வந்திருந்தேன். அப்போதுதான் எனக்கு இந்தக் கதையை இயக்குநர் என்னைத் தேடி வந்து கூறினார்.
இந்தப் படத்தின் கதையை முதன்முதலில் எப்படிக் கூறினாரோ.. அதுபோலவேதான் படமும் உருவாகியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த யாழினி கதாபாத்திரத்துக்கு என்னை தேர்வு செய்ததற்கும் நன்றி, இந்தப் படத்தில் ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். நான் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை,
நடிகர் ஆஜீத் ஒரு பக்க பலமாக இருந்தார். அவரது ஒத்துழைப்பு படப்பிடிப்பில் மிகவும் உதவியாக இருந்தது. ஆஜித்துக்கு மிகவும் நன்றி. நடிகை இனியாவுடன் ஒரு சிறிய காட்சி உள்ளது. அது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது. அவரிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
படத்தில் பாடல்கள் அழகாக வந்துள்ளது. என்னை அழகாக காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் பாஸ்கர் சாருக்கு நன்றி, மேலும் எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் கார்த்திக் சாருக்கு நன்றி. உங்களின் ஆதரவை படத்திற்குத் தர வேண்டும். ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது நன்றி..” என்றார்.
நடிகர் சென்ட்ராயன் பேசும்போது, “இந்தப் படம் மிக விரைவில் சீறிப் பாயும் இயக்குநர் துரை அண்ணன் மிகவும் நெருக்கமானவர், மிகவும் பரபரப்பு மிகுந்தவர். அவரது வேகத்துக்கு ஈடே கொடுக்க முடியாது. இந்தப் படத்துக்காக பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் இந்தப் படத்தில் மிகவும் அருமையாக நடித்துள்ளார். இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் ஒரு நல்ல நட்பைக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கினார்கள். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி பேசும்போது, “நான் பல படங்களில் நடித்துள்ளேன். அதில் பல கதாபாத்திரங்கள் என் மனதிற்கு நெருக்கமானவை. ஆனால் இன்றும் என்னிடம் பலர் பேசும் ஒரு கதாபாத்திரம் நான் ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் நடித்த ‘சாமியார்’ கதாபாத்திரம். அது எனக்கு மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதேபோல் இந்தப் படத்திலும் நான் ஒரு பூசாரியாக நடித்துள்ளேன். அதே போல இந்தப் படமும் ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்று இந்த படக் குழுவினரை வாழ்த்துகிறேன்..” என்றார்.
இசையமைப்பாளர் A.K.சசிதரண் பேசும்போது, “இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது. நானும் என் நண்பர்களும் இணைந்து இந்தப் படத்தின் பாடல்களை உருவாக்கியுள்ளோம். அனைத்து பாடல்களும் அருமையாக வந்துள்ளது, கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்…” என்றார்.
இசையமைப்பாளர் ஜூபின் பேசும்போது, “இந்தப் படத்திற்கு எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. பின்னணி இசையை முன்னோட்டத்தில் பார்த்திருப்பீர்கள். கண்டிப்பாக உங்களுக்குப் பிடித்துள்ளது என்று நம்புகிறேன். படம் பல உண்மைகளை உடைத்து கூறியுள்ளது. இயக்குநர் இசைக்காக என்னைப் படாதபாடு படுத்திவிட்டார். படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படம் மிகவும் யதார்த்தமாக இருக்கும், இந்தப் படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்..” என்றார்.
சண்டை பயிற்சியாளர் ரமேஷ் பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் எனக்கு நெருங்கிய நண்பர். இந்தப் படம் எடுக்க மிகப் பெரிய பொருட் செலவு ஆனது. சின்னப் படம் என்றாலும் தயாரிப்பாளர் பெரிய அளவில் செலவுகளைச் செய்துள்ளார். படத்தை நன்றாக எடுக்க அது மிகவும் உதவியாக இருந்தது. மொத்த குழுவும் மிகப் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் திறமையாகக் காட்சிகளைக் கையாண்டுள்ளார். படத்தில் நீங்கள் அதைப் பார்ப்பீர்கள். சண்டைக் காட்சிகளில் எனக்குத் தேவையான அனைத்தையும் செய்து தந்தனர். நீங்கள்தான் இந்தப் படத்தைக் கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டும்…” என்றார்.
நடிகர் ஆர்யன் பேசும்போது, “தயாரிப்பாளர் ஜேம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், மேலும் பல படங்களில் நீங்கள் நடித்து வெற்றி பெற வேண்டும். இயக்குநர் மிகவும் துல்லியமானவர். தனக்குத் தேவை எது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு வேலை வாங்குபவர். அவரிடம் வேறு, வேறு ஜானரில் மூன்று சிறந்த கதைகள் இருக்கிறது. விரைவில் அவை படமாக வெளிவரும்.
படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் இடையே பல முறை விவாதங்கள் ஏற்பட்டன. ஆனால், அனைத்தும் நன்மைக்கே. அது படத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றது. படத்தில் மிகப் பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். சண்டைக் காட்சிகளும் அருமையாக இருந்தது. இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
கவிஞர் கார்த்தி பேசும்போது, “இந்த ‘சீரன்’ படம் சீர்திருத்தம் செய்ய போகின்ற ஒரு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதியுள்ளேன். அனைத்தும் நன்றாக வந்துள்ளது. உங்களுக்குப் பிடிக்கும். படத்தில் மூன்று பெண் கதாபாத்திரங்கள் உள்ளன. அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்…” என்றார்.
‘பரியேறும் பெருமாள்’ வெங்கடேசன் பேசும்போது, “என்னை இதுவரை எல்லா படங்களிலும் ஒரு வில்லனாகக்தான் காட்டியுள்ளார்கள். ஆனால், இந்தப் படத்தில் என்னை ஒரு அன்பான அப்பாவாக காட்டியுள்ளார். அதற்காக இயக்குநருக்கு மிக்க நன்றி. இயக்குநர் மிக நன்றாக படத்தை எடுத்துள்ளார். இந்தப் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்…” என்றார்.

















