full screen background image

“இசைஞானியுடன் மோதல் எதுவும் இல்லை..” – இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்..!

“இசைஞானியுடன் மோதல் எதுவும் இல்லை..” – இயக்குநர் சீனு ராமசாமி விளக்கம்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இயக்குநர் சீனு ராமசாமிக்கும், இசைஞானி இளையராஜாவுக்கும் இடையில் ‘மாமனிதன்’ படம் தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டதாக சில செய்திகள் காற்றுவாக்கில் பரவி வந்தன.

இயக்குநர் சீனு ராமசாமி இது தொடர்பான விளக்கத்தை பத்திரிகையாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.  

இளையராஜா விவகாரம் குறி்த்து இயக்குநர் சீனு ராமசாமியின் விளக்கம்.

என் நெஞ்சம் நிறைந்த தமிழ் மக்களுக்கு  வணக்கம்,

நான் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ‘மாமனிதன்’ படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.

இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவரின் பாதம் தொட்டு வணங்கினேன்.

“திருமணம் ஆகி குழந்தை பிறந்துவிட்டது. நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன். “அது சரி…” என்று சிரித்தபடியே வந்தார்.

பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக் கூடிய ‘மாமனிதன்’ முழு படத்தையும் அவருக்கு காட்டினோம். 

படத்தின் இடைவேளைக்குக்கூட  அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார் ‘இசைஞானி’.

படத்தில் பாடல் காட்சி வரும்போது மட்டும் உதாரணத்திற்கு “உன்னவிட இந்த உலகத்தில் உயர்ந்தது ஒண்ணும்ல்ல..’ அது மாதிரி சார்…” என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்.

1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த ‘இசைஞானி’யிடம் இதற்கு  மேல் விளக்கம் சொல்லி அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.

‘இசைஞானி’ பாடலுக்கு மெட்டு போடுகிறார். அதற்கு யுவன் இசை கோர்க்கிறார்.  இது அவர்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா..? எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு அதனைப் பெற்றுக் கொண்டார்.

படத்தில் பாடல்களை யார் எழுதுவது என்று பேச்சு வந்தபோது “அண்ணன் பழனிபாரதிக்கும், கவிஞர்  ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்..” என்றேன். யுவன் தரப்பில் “திரு.பா.விஜய்” என்றார்கள். நானும் சம்மதித்தேன்.

பாடல்களுக்கான ரெக்கார்டிங் முடியும் தருவாயில்  “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில், நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார் யுவன். எனக்கு ஒரு இயக்குநருக்கான முழு சுதந்திரத்தை, தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன்.

இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4-வது படம். ‘இசைஞானி’யுடன் பணி புரியும் முதல் படம். ‘மாமனிதன்’ எனக்கு 7-வது படம்.

‘இசைஞானி’ இளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால்  அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன்.

‘இசைஞானி’யின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன்.

இதில் என் பெயரை வைத்து ‘இசைஞானி’ இளையராஜா அவர்களை சிறுமைப்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும்  நான் யாரையும் அவரிடத்தில் சிபாரிசு செய்யவில்லை. என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய்.

நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படங்களில் பணி புரிந்தோம். ‘தர்மதுரை’யில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்த முறை நானும் யுவனும், ‘இசைஞானி’யுடன் பணிபுரிறோம். நிச்சயமாக இந்தப் படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன்.

அன்புடன் 

சீனு ராமசாமி

திரைப்பட இயக்குநர்

Our Score