தமிழ்த் திரையுலகத்தின் முக்கியமான தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்(AASCAR FILM PRIVATE LIMITED) திவாலாகிவிட்டதாக அறிவித்துள்ளது.
பெருத்த கடன் தொகையைத் தாங்க முடியாமல் அந்த நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேலூரை சொந்த ஊராகக் கொண்ட ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரன் என்ற மர்மமான மனிதராக வாழ்ந்து வந்தவர்தான், இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.
ஆரம்பக் காலத்தில் ஜாக்கிசான் படங்களை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் விநியோகஸ்தராக இருந்திருக்கிறார் ரவிச்சந்திரன். ஜாக்கிசானின் அத்தனை திரைப்படங்களுக்கும் தமிழக விநியோகம் இவரே. அதோடு சில முக்கிய ஆங்கில திரைப்படங்களையும் விநியோகம் செய்துள்ளார்.
இந்த நெருக்கத்தினால்தான் இவர் தயாரித்த ‘தசவாதாரம்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கிசான் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு பல தமிழ்த் திரைப்படங்களையும் செங்கல்பட்டு விநியோகப் பகுதியில் விநியோகித்து, விநியோகஸ்தர் தொழிலில் முன்னணியில் இருந்து வந்தவர் ரவிச்சந்திரன். வேலூர் மாவட்டத்தில் தியேட்டர்களை வாடகைக்குப் பிடித்துக் கொடுக்கும் தொழிலிலும், ஈடுபட்டு அதிலும் தனி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார்.
இந்தத் தொழில் திறமையோடு ‘AASCAR FILM PRIVATE LIMITED’ என்ற தனது புதிய நிறுவனத்தின் மூலமாக 2000-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்தில் கால் வைத்திருக்கிறார். இந்த நிறுவனத்தில் இவரது சகோதரரான ரமேஷ் பாபுவும் ஒரு பங்குதாரராக இருக்கிறார். 10 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.
2000-ம் ஆண்டு வெளிவந்த ‘வானத்தைப் போல’ திரைப்படம்தான் இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம். இதற்குப் பின்பு ‘பூவெல்லாம் உன் வாசம்’(2001), ‘ஏழுமலை’, ‘ரோஜா கூட்டம்’, ‘ரமணா’, ‘என் மன வானில்’(2002), ‘ஜே ஜே’, ‘மனசெல்லாம்’(2003), ‘தென்றல்’(2004), ‘அந்நியன்’(2005), ‘பாரிஜாதம்’, ‘தலைநகரம்’, ‘டிஷ்யூம்’, ‘ரெண்டு’(2006), ‘மருதமலை’, ‘உன்னாலே உன்னாலே’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’(2007), ‘தசவாதாரம்’, ‘வாரணம் ஆயிரம்’(2008), ‘ஆனந்த தாண்டவம்’(2009), ‘லீலை’, ‘வேலாயுதம்’(2011), ‘மரியான்’, ‘வல்லினம்’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’(2013), ‘ஐ’, ‘பூலோகம்’(2015), ‘விஸ்வரூபம்-2’-(2018), ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறது.
இதில் ‘அந்நியன்’, ‘தசவாதாரம்’, ‘ஐ’, ‘பூலோகம்’ ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள். இதற்கிடையில் பல தமிழ் மற்றும் ஆங்கில படங்களையும் விநியோகம் செய்து வந்துள்ளது ‘ஆஸ்கர்’ நிறுவனம்.
படத் தயாரிப்புத் தொழிலுக்காக பல முறை பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கியிருக்கிறது ‘ஆஸ்கர்’ நிறுவனம்.
2005-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதியன்று ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து 40 கோடி ரூபாயை அசையும் சொத்துக்களை அடமானமாக வைத்து கடனாகப் பெற்றுள்ளது ‘ஆஸ்கர்’ நிறுவனம்.
2006-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து 12 கோடியே 50 லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது.
2007-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதியன்று ஐ.டி.பி.ஐ. வங்கியில் இருந்து 6 கோடி ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது.
2007-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து 40 கோடி ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது.
2008-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதியன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து 2 கோடியே 75 லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது.
2010-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி சிட்டி யூனியன் வங்கியில் இருந்து தன்னுடைய ஒரு அசையா சொத்தை அடமானமாக வைத்து 40 கோடி ரூபாயை கடனாகப் பெற்றிருக்கிறது.
2011-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து 40 கோடி ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது.
2012-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து 12 கோடியே 11 லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளது.
2012 செப்டம்பர் 22-ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து 60 கோடி ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது.
2013-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதியன்று ஜே.எம்.பைனான்சியல் நிறுவனத்திடமிருந்து 36 கோடி ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது.
2013-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதியன்று சிட்டி யூனியன் வங்கியில் இருந்து 4 கோடி ரூபாயை கடனாகப் பெற்றுள்ளது.
இப்படி ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் ‘ஆஸ்கர் பிலிம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் கடனாக வங்கி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து வாங்கியிருக்கும் தொகை 253 கோடியே 36 லட்சம் ரூபாய் என்று தெரிகிறது.
2012-13-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒரே நேரத்தில் ‘மரியான்’, ‘வல்லினம்’, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ஐ’, ‘பூலோகம்’ ஆகிய ஐந்து படங்களை தயாரித்து வந்தார் ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரன். இந்தப் படங்களின் தயாரிப்புக்காக வாங்கிய கடன் தொகை கொஞ்சம், கொஞ்சமாக பெருகி… வட்டித் தொகையே பல கோடிகளைத் தொட்ட பிறகு ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரனால் இதிலிருந்து மீள முடியவில்லை.
‘மரியானின்’ தோல்வியால் பல கோடிகள் நஷ்டமானது. அதேபோல் ‘வல்லினம்’ மற்றும் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படமும் தோல்வியடைந்தது. ‘ஐ’ திரைப்படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரானதால் கடனாகப் பெற்றப் பணத்தையெல்லாம் இதிலேயே முதலீடு செய்தார் ரவிச்சந்திரன். ‘ஐ’ படமும் போதிய வருவாயை பெற்றுத் தராததால், அதற்கடுத்த ‘பூலோகம்’ படமும் சிக்கலில் மாட்டியது. அந்தப் படம் திரைக்கு வந்தும் லாபத்தைப் பெற்றுத் தராததால், இந்தப் படங்களுக்காக வாங்கிய கடன் அவரது கழுத்தை நெரித்தது.
‘ஐ’ மற்றும் ‘பூலோகம்’ படங்களின் வெளியீட்டின்போதே நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டு சின்னச் சின்ன கடன்களை தயாரிப்பாளர் ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரன் நீதிமன்றம் மூலமாக அடைத்த பின்புதான், இத்திரைப்படங்கள் திரைக்கு வந்தது என்பது திரையுலக வரலாறு.
‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரனால் இனிமேல் கடனை அடைக்க முடியாது என்பது முழுமையாகத் தெரிந்த பின்புதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிரடியாக இறங்கி ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரன் வங்கியில் அடமானமாக வைத்திருந்த சொத்துக்களை ஜப்தி செய்வதாக அறிவித்தது.
2015-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதியன்று இந்த ஜப்தி நடவடிக்கைகள் நடைபெற்றன. இதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கதீட்ரல் கிளை மற்றும் ராம் நகர் கிளைகளில் வாங்கிய சுமார் 84 கோடி ரூபாய் கடன் மற்றும் இதற்கான வட்டியோடு சேர்த்து 96 கோடியே 75 லட்சத்து 81 ஆயிரத்து 634 ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததினால், சென்னை அசோக் நகரில் உள்ள ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரனின் அலுவலகம், அபிராமபுரத்தில் அவர் வசிக்கும் வீடு மற்றும் வேலூரில் உள்ள அவரது ‘சந்தோஷ்’, ‘சப்னா’, ‘சாந்தம்’ என்ற மூன்று தியேட்டர்கள் ஆகிய சொத்துகளை பறிமுதல் செய்வதாக அறிவித்தது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
இதற்குப் பின்பும் கடைசி கட்ட முயற்சியாக கமல்ஹாசனின் நடிப்பில் ‘விஸ்வரூபம்-2’ படத்தினை 2017-ம் ஆண்டு துவக்கினார் ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரன். ஒரு கட்டத்தில் படத்தைத் தொடர பணமில்லாமல், கமல்ஹாசனிடமே படத்தைத் தள்ளிவிடவும் முயற்சிகள் செய்தார் ரவிச்சந்திரன்.
கமல் இதற்கு மறுத்துவிடவே.. வேறு வழியில்லாமல் குறைந்த செலவில் இரண்டாம் பாகத்தைத் தயாரித்து வெளியிட்டார்கள். அது மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. இத்தோடு ‘ஆஸ்கர்’ நிறுவனத்தின் மிகப் பெரிய திரைப்படம்.. மிகப் பெரிய நிறுவனம் என்கிற கனவு கலைந்து போனது.
தமிழ்த் திரையுலகத்தில் தயாரிப்பாளர் ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரன் ஒரு மர்மமான மனிதராகவே வாழ்ந்து வந்தார். அவர் தயாரிக்கும் படங்களின் பூஜை, இசை வெளியீட்டு விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என்று எதிலுமே அவர் கலந்து கொள்வதில்லை. இந்த ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரன் கருப்பா, சிவப்பா என்றுகூட யாருக்கும் தெரியாது.
நெருங்கிய பத்திரிகையாளர்களைக்கூட தனது அலுவலகத்திற்கு அழைத்து பேசுவார். அவ்வளவுதான். புகைப்படம் எடுக்க ஒத்துக் கொள்ளவே மாட்டார். சினிமா சங்க கூட்டங்களுக்குக்கூட தனது சகோதரர் ரமேஷ் பாபுவை மட்டுமே அனுப்பி வைப்பார்.
இப்படி ஒரு முகம் தெரியாத மர்ம மனிதராக வாழ்ந்து வந்த தயாரிப்பாளர் ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரனை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அவருடைய சொத்துக்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுப்பதாக வெளியிட்ட பத்திரிகை செய்தியில்தான் முதன்முதலாக புகைப்படத்தில் பார்க்க முடிந்தது என்பது சுவையான விஷயம்.
இந்த ஒரு நிறுவனம் மட்டுமல்லாமல், ‘OSCAR FILMS PRIVATE LIMITED’, ‘AASCAR ENTERTAINMENT PRIVATE LIMITED’, ‘VISWAAS FILMS PRIVATE LIMITED’, ‘MILESAWAY HOSPITALITY PRIVATE LIMITED’, ‘COLD CHILLIES PRIVATE LIMITED’ ஆகிய பெயரில் வேறு சில நிறுவனங்களையும் ஆரம்பித்து நடத்தி வந்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
இதில் OSCAR FILMS PRIVATE LIMITED நிறுவனத்தின் பெயரிலும் கடன்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் ஆஸ்கர் ரவிச்சந்திரனும், அவரது சகோதரர் ரமேஷ் பாபுவும் பங்குதாரர்களாக உள்ளனர்.
2010-ம் ஆண்டு மே 13-ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து 11 கோடி ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதியன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து 10 கோடி ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது.
ஆக, இந்த நிறுவனத்தின் பெயரிலும் அதிகாரப்பூர்வமாக 21 கோடி ரூபாய் கடனாக உள்ளது.
இப்போது ஐ.ஓ.பி. வங்கியையும் தவிர, சிட்டி யூனியன் வங்கி, ஸ்டேட் பேங்க், தனியார் நிதி நிறுவனங்கள் என்று பலரும் கடன் தொகைக்காக நெருக்கடி கொடுத்ததால், வேறு வழியில்லாமல் ‘ஆஸ்கர் பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்’ திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
புதிய திவால் சட்டம் 2017 மே முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு தனியார் நிறுவனமோ அல்லது பங்குதாரர் நிறுவனமோ அல்லது தனி நபரோ தான் வாங்கிய கடனை அடைக்க இயலாமல் திவால் நிலையில் இருக்கும்போது கடன் வாங்கியவருக்கும், கொடுத்தவருக்கும் இடையே ஒரு சுமூகமான நிலையைக் கையாள்வதுதான் இந்தத் திவால் சட்டத்தின் நோக்கம்.
இந்தச் சட்டத்தின்படி கடன் கொடுத்தவரோ அல்லது வங்கியோ கடன் வாங்கிய தனி நபரின் மீதோ அல்லது நிறுவனத்தின் மீதோ தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் திவால் நடவடிக்கையை மேற்கொள்ள முறையிடலாம். இதே முறையினை கடன் வாங்கியவரும் மேற்கொள்ளலாம்.
அப்போது இந்தத் தீர்ப்பாயம் அந்தத் தனி நபரின் பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கும்.
இந்தத் தீர்ப்பாயத்தில் மூன்று முக்கிய நபர்கள் உள்ளனர். அவர்கள்…
- திவால் நிபுணர்.
- தீர்வு நிபுணர்
- திவால் அறங்காவலர்.
இவர்களில் திவால் நிபுணர் கடன் வாங்கிய நிறுவனம், அல்லது தனி நபர்கள் வாங்கிய கடனை பயன்படுத்தியவிதம்.. செலவழித்த விதம்.. திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் அவரது தற்போதைய நிலைமை ஆகியவற்றை அலசி, ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிந்து அறிக்கையைத் தாக்கல் செய்வார்.
இவர் திவாலுக்குத் தகுதியானது.. தகுதியானவர் என்று திவால் நிபுணர் சான்றிதழ் கொடுக்கும்பட்சத்தில் அடுத்ததாக தீர்வு நிபுணர், மொத்தக் கடன் தொகையையும், நிறுவனத்துக்கு அல்லது தனி நபர்களுக்கு இருக்கும் சொத்துக்களையும் அலசி ஆராய்ந்து கடன் கொடுத்தவர்கள் அனைவருக்கும் சம அளவில் கடனைத் திருப்பிக் கொடுக்கும் திட்டத்தை வகுத்துக் கொடுப்பார்.
இந்தத் திட்டங்களை திவால் அறங்காவலர் தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு தீர்ப்பாயம் குறித்துக் கொடுக்கும் குறிப்பிட்ட தேதிக்குள்ளாக அதனைச் செய்து முடிப்பார்.
முதலில் திவால் நோட்டீஸ் கொடுத்த நிறுவனம் அல்லது தனி நபர்களுக்கு, அவர்களுடைய கடனை திருப்பிச் செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கப்படும்.
ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் அந்த நிறுவனம், அல்லது அந்த நபர்கள் மீது யாரும் வழக்குத் தொடர இயலாது.
நிறுவனத்தின் பெயரிலோ அல்லது தனி நபரின் பெயரிலோ இருக்கக் கூடிய நிதியை வேறொருவரின் பெயருக்கு மாற்றம் செய்ய இயலாது. சொத்துக்களை விற்க இயலாது. பிற கடன்களையும் வாங்க இயலாது.
நிர்வாக அதிகாரம் முழுமையும் தீர்வு நபரிடம் சென்றுவிடும். செய்தித் தாள்களில் திவால் பற்றி அறிவிப்பு வெளியிடப்படும்.
மேற்கண்ட அனைத்து நடைமுறைகளினாலும் பணம் பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் ஐ.பி.பி.ஐ.(Insolvency and Bankruptcy Board Of India) நிறுவனம் கடன் பெற்றவர்களின் சொத்துக்களை விற்றுக் கடனை சரி செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளலாம்.
இவைகள்தான் திவால் அறிவிப்பின் பின்னால் நடைபெறும் சட்ட நடவடிக்கைகள்.
இப்போது இதன்படியே ‘ஆஸ்கர் பிலிம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் திவால் நோட்டீஸை ஏற்றுக் கொண்ட நடுவர் தீர்ப்பாயம், இது குறித்து கடந்த வாரம் பத்திரிகைகளில் திவால் செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி ‘ஆஸ்கர் பிலிம் பிரைவேட் லிமிடெட் நிறுவன’த்துக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் அந்த நிறுவனத்தில் இருந்து பணம் பெற வேண்டிய நிலையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அடுத்த மாதமான அக்டோபர் 3-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தங்களது மனுவை அளிக்க வேண்டுமாம்.
‘ஆஸ்கர் பிலிம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் கடன் பிரச்சினைகள் அனைத்தும் 2020 மார்ச் 17-ம் தேதிக்குள்ளாக தீர்க்கப்படும் என்று தீர்ப்பாயம் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்..?
அனைத்துக் கடன்தாரர்களின் கடன்களும் முறைப்படி வாங்கப்பட்டுள்ளதா.. உண்மையுள்ளதா என்பதை அலசி ஆராய்ந்து மொத்தக் கடன் தொகை எவ்வளவு என்று கணக்கெடுப்பார்கள். அதே நேரம் நிறுவனத்திற்கு உள்ள சொத்துக்களையும் கணக்கெடுப்பார்கள்.
நிறுவனத்தின் சொத்துக்களுக்கும் மேலாக கடன் தொகையிருந்தால் கடன்தாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கொடுத்த கடனுக்கேற்ப… கடன் தொகையை சதவிகிதக் கணக்கில் குறைத்துப் பெற்றுக் கொள்ளும்படி கூறுவார்கள். வேறு வழியில்லாததால் கடன் கொடுத்தவர்களும் இதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏற்கெனவே ஜப்தி செய்திருக்கும் சொத்துக்கள் தொடர்பாக டெல்லியில் மத்திய டிரிப்யூனலில் மேல்முறையீடு செய்யப்பட்டு அதற்கான சட்ட நடவடிக்கைகளை இரு தரப்பிலும் செய்திருப்பதாக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் கையக்கப்படுத்தப்பட்ட அந்தச் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில், இன்னமும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இறங்கவில்லை என்கிறார்கள்.
இருந்தாலும், அந்த வங்கி முடக்கி வைத்திருக்கும் ஆஸ்கர் பிலிம் நிறுவன சொத்துக்களின் மதிப்பு அவர்களுக்கு வர வேண்டிய வாராக் கடன் தொகையான 96 கோடியே 75 லட்சத்து 81 ஆயிரத்து 634 ரூபாய் அளவுக்கு முழுமையாகாது என்கிறார்கள் வங்கிக்காரர்கள். ‘கிடைத்தவரைக்கும் போதும்’ என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்காரர்கள் திருப்திப்பட வேண்டியதுதான். காணாமல் போன மீதிப் பணம் வாடிக்கையாளர் தலையில் போடப்பட்ட துண்டுதான்..!
அனைத்துக் கடன்களையும் கடன்தாரர்களுக்குக் கொடுத்து செட்டில் செய்த பின்பு ‘ஆஸ்கர் பிலிம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு வெளியிடுவார்கள்.
இனிமேல் ‘ஆஸ்கர் பிலிம் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் பெயரில் எந்தவொரு பரிவர்த்தனையும், வியாபாரத் தொழிலும் நடைபெற முடியாது. கூடாது. நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. அவ்வளவுதான்..!
ஆனால், இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்து கம்பெனியை வழி நடத்திய தயாரிப்பாளர்கள் ஆஸ்கர் ரவிச்சந்திரனும், அவரது சகோதரருமான ரமேஷ் பாபுவுக்கு எந்தத் தடையும் இல்லை.
அவர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகள் கழித்து வேறு நிறுவனத்தின் பெயரிலோ அல்லது வேறு ஒருவருக்காகவோ இதே சினிமாவில் தயாரிப்பாளர்களாக நுழைவார்கள். மீண்டும் படத் தொழிலில் ஈடுபடுவார்கள். சம்பாதிப்பார்கள். வேறு நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்குவார்கள். அனுபவிப்பார்கள். அவ்வளவுதான்..!
எங்கே தவறு செய்தது ஆஸ்கர் பிலிம் நிறுவனம்..? இப்போது ஒரு திரைப்படம் ஓடி ஜெயிப்பது என்பதே மர்மமான விஷயம். எதனால் ஒரு படம் ஜெயித்தது என்பது அந்தப் படத்தின் இயக்குநருக்கே தெரியாத விஷயமாக இருக்கிறது. சூதாட்டம்போல ஆகிவிட்ட இன்றைய நிலைமையில் ஒரே நேரத்தில் 5 படங்களைத் தயாரித்தது படு முட்டாள்தனம்.
சொந்தப் பணம் என்றால்கூட பரவாயில்லை. போனால் அது நமது தவறு என்று சொல்லி மனதை ஆற்றிக் கொள்ளலாம். ஆனால் மொத்தப் பணத்தையும்.. மக்கள் பணத்தில்.. வங்கிப் பணத்திலிருந்து கடன் வாங்கி தயாரித்தால் அதன் நஷ்டம் யாரைப் பாதிக்கும்..?
ஒரு படத்தில் முடங்கிப் போன பணத்தினால் அடுத்தப் படத்தைத் துவங்க முடியாமல் கஷ்டமாகி.. பின்பு அந்தப் படத்திற்காக இன்னொரு கடன் வாங்கி.. இப்படி கடனுக்கு மேல் கடன் வாங்கி படத்தை எடுப்பதற்கு தமிழ்த் திரையுலகத்தில் எப்போதும் எந்த அவசியமும் இல்லையே..?!
‘அந்நியன்’. ‘தசாவாதாரம்’, ‘ஐ’ ஆகிய படங்கள் வெற்றிகரமாக ஓடி லாபத்தைக் கொடுத்த படங்கள்தான். ஆனால் சில ஆண்டு இடைவெளியில் எடுக்கப்பட்ட இந்தப் படங்களைப் போல 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோல பிரம்மாண்டமான படங்களையே தயாரித்திருந்தால்கூட நஷ்டம் ஏற்பட்டிருக்காது. கடனையும் அடைத்திருக்கலாம்.
ஒரே வருடத்தில் தமிழ்த் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கிறேன் என்ற புகழ் வெறியில் ‘ஆஸ்கர்’ ரவிச்சந்திரன் செய்த தயாரிப்பு வேலை அவரை மட்டுமல்ல.. வங்கிகளில் பணம் போட்டு வைத்திருந்த பொதுமக்களையும் சேர்த்தே பாதித்திருக்கிறது. இப்போது வாராக் கடனாக ஆகியிருக்கும் பணமெல்லாம் அந்தந்த வங்கிகளில் பொது மக்கள் டெபாசிட் செய்திருந்த பணம்தான்.
இப்படி செய்தால் வங்கியினர் எப்படி திரைப்பட துறையை ஒரு தொழிலாக அங்கீகரிப்பார்கள்..? இந்த சினிமா துறையில் மட்டும்தான் பணம் எந்த வழியில், யாரிடம், எதற்காக கொடுக்கப்படுகிறது என்பதே தெரியாமல் பல வழிகளிலும் வாய்க்கால் தண்ணீர்போல சென்று மறைகிறது.
நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் இல்லாத ஒரு தொழில் நிச்சயமாக நசிந்துதான் போகும். அதற்கு இந்தத் திரைப்படத் துறைதான் மிகப் பெரிய உதாரணம்.
வங்கியில் பொதுமக்கள் போட்ட பணத்தை எடுத்து வாரிக் கொடுத்த வங்கி அதிகாரிகள் கிடைத்தவரைக்கும்போதும் என்று சொல்லி கடன் தொகையை முடிந்த அளவுக்கு வசூலித்து அதை வங்கியில் சேர்ப்பித்துவிட்டு தங்களுக்கான ஊக்கத் தொகையை பெற்றுக் கொண்டு ஓய்வு பெற்றுவிட்டு வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளின் வீடுகளுக்குப் பறந்துவிடுவார்கள்.
வங்கிகளில் பணம் போட்ட மக்கள்தான் தாங்கள் முதலீடு செய்யும் பணம் இப்படி இன்னொரு பக்கம் வீணாகக் கடலில் போகிறது அல்லது கொள்ளையடிக்கப்படுகிறது என்பதே தெரியாமல் மீண்டும், மீண்டும் பாதுகாப்புக்காக பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து கொண்டேயிருக்கிறார்கள். இது ஒரு கடிகாரச் சுற்றுபோல தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.
“ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களும் ஒரே நாளில் கிளர்ந்து வந்து பணத்தைக் கேட்க மாட்டார்கள்…” என்கிற ஒரே நம்பிக்கையினால்தான் வங்கிகளின் இந்த வாராக் கடன் லீலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நடத்தட்டும்..!