சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டால் எவ்வித குறுக்கீடும் வராது.. எது வேண்டுமானாலும் பேசலாம். அழுத்தமாக பேசத் தெரிந்து, ஆட்கொள்ளும் சக்தியும் இருந்தால் அதுவே போதும்.. பார்வையாளர்களை வென்றுவிடலாம்.. இன்றைக்கு இயக்குநர் சீமான் இதைத்தான் செய்தார்..!
அண்ணன் முத்துராமலிங்கனின் ‘சிநேகாவின் காதலர்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேப்பில் நடந்தது. சிறப்பு விருந்தினராக வருகை தந்த சீமானின் பேச்சில் அனல் பறந்தது..!
படத்தின் கதாநாயகியின் பெயர் கீர்த்தி ஷெட்டி. ஆனால் மிக அழகாக, தடங்கலே இல்லாமல் தமிழ் பேசினார்.. அவரைப் பாராட்டுவார் என்று பார்த்தால் அவரிடம் இருந்த ‘ஷெட்டி’ என்ற பெயரை வைத்துக் கொண்டு ஒரு சுப்ரபாதமே பாடிவிட்டார் அண்ணன் சீமான்.
“தமிழர்களுக்கு தாய்மொழியான தமிழ் அந்நியப்பட்டுப் போச்சு. தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற சலுகை இருந்தது. அப்போது தமிழ்ப் பெயர்களில் படங்கள் வந்தது. அதை நீக்கின உடனே தமிழ்ல பெயர்லாம் வருவதில்லை. அப்போ இதெல்லாம் திட்டமிட்டு ஒரு தேசிய இனத்தை அழிப்பதற்கான முயற்சிதானே..?
பெரும்பாலான இயக்குநர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் வரும் அப்பாவின் முதல் எழுத்தை, அவங்க அப்பா ஒரு வெள்ளைக்காரர்போல ஆங்கிலத்தில்தான் போடுகிறார்கள். சில படங்களின் விளம்பரங்களைப் பார்த்தால் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் என எல்லோருடைய பெயர்களும் ஆங்கிலத்தில்தான் வருகிறது. டைட்டில்ல மட்டும் சும்மா பேச்சுக்காக தமிழில் வைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலையை மாற்றணும்.
நீண்ட காலமாக நாங்கள் சாதிய ஒழிப்புக்காக போராடி வருகிறோம். ஆனால் தமிழ்ச் சினிமாவுக்கு நடிக்க வரும் நடிகைகள் எல்லோரும் நவ்யா நாயர், ஸ்வேதா மேனன், ஷ்ரேயா ரெட்டி அந்த ராவ்.. இந்த ராவ்வுன்னு பேருக்கு பின்னாடி சாதியைப் போட்டுக் கொண்டு பெருமையாக வருகிறார்கள். உயர்ந்த சாதிக்காரர்கள் பெருமையுடன் இதனை போட்டுக் கொள்கிறார்கள். தாழ்ந்தவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்..? மொதல்ல இதை ஒழிக்கணும்.. அந்த ஷெட்டி, ரெட்டி அதையெல்லாம் வெட்டி எறியாமல், இந்த நிலத்தில் சாதியை ஒழிக்க முடியாது.
ஏன் கேரளாவிலிருந்து நடிக்க வரும் நவ்யா நாயரும், ஸ்வேதா மேனனும் ஒரு தாழ்ந்த சாதிப் பெயரை போட்டுக் கொண்டு வரட்டும்.? எங்க பார்ப்போம்..? முடியுமா? முடியாது. உயர்ந்த சாதியாக அவர்கள் இருப்பதால்தான் அதை தங்கள் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்கிறார்கள். அது நாங்கள் உயர்ந்த சாதி மக்கள் என்ற பெருமிதம், ஆணவம், திமிர். அது ஒரு போதை. நவ்யா நாயர்ல அந்த நாயர் யாரு..? யாரும் கேக்குறதில்லை. நரசிம்மராவ் பிரதமரு.. நரசிம்மரு அவரு.. அந்த ராவ் யாரு..? அவர் ஏன் இருக்காரு..? தேவே கெளடா.. தேவேன்றது பேரு.. கெளடான்றது சாதி.. அதுல ஏன் சாதி ஒட்டிக்கிட்டிருக்கு..!?
முன்னாடில்லாம் தமிழ்ச் சினிமாக்கள்ல “வாங்க பிள்ளைவாள்.. வாங்க செட்டியார்வாள்.. வாங்க ரெட்டியார்வாள்”ன்னு சொல்வாங்க. நான் சொல்றேன்.. நாங்களே பின்னாடி இருந்த வாலை ஒட்ட நறுக்கிட்டுத்தான் இப்படி வந்திருக்கோம். இப்ப திரும்பவும் அதே வாலை ஒட்டணும்ன்னா எப்படி..? முதல்ல இதை ஒழிக்கணும்.. நடிக்க வர்ற நடிகைகள்கிட்ட “உன் பேர் என்னம்மா?”ன்னு கேட்டு பேரை மட்டும்தான் போடணும்.. சாதியை வீட்ல சட்டில போட்டு வைச்சுக்கமான்னு சொல்லிரணும்..” என்றார்..
தனது தாயாருடன் வந்திருந்த கதாநாயகி கீர்த்தி ஷெட்டி சீமானின் இந்தப் பேச்சை ரசித்துக் கேட்டதுடன் அவரும் சேர்ந்து கை தட்டினார்.. வேற வழி.. மேடைல உக்காந்திருக்காரே..! என்ன கொடுமை சரவணா இது..?