full screen background image

‘சட்டம் என் கையில்’ – சினிமா விமர்சனம்

‘சட்டம் என் கையில்’ – சினிமா விமர்சனம்

க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் சட்டம் என் கையில்.

இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகரான சதீஷ் நாயகனாக நடிக்கிறார். நடிகர் பாவெல் நவகீதன் மற்றும் அஜய் ராஜ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – P.G. முத்தையா, இசை – M.S. ஜோன்ஸ் ரூபர்ட், படத் தொகுப்புகதிரேஷ் அழகேசன், கலை இயக்கம் – N.K. ராகுல், சண்டைப் பயிற்சிராம் குமார், எக்ஸிகியூடிவ் புரொடுயுசர் – Pa. சிவா, பத்திரிக்கை தொடர்புசதீஷ் (AIM).

இப்படத்தைசிக்சர்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார்.

இயக்குநரின் முதல் படமான சிக்சர்’ முழுக்க, முழுக்க காமெடியை சுற்றியதாக இருந்தது. ஆனால், இந்தப் படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர திரில்லரா உருவாகியுள்ளது.

ஒரு இரவில் நடக்கும் கதைதான். நாயகன் டிரங்க் & டிரைவ் கேஸில் போலீசிடம் மாட்டுகிறார். அந்த இரவில் அவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படம்.

படத்தின் கதைக் களம் ஏற்காடு நகரம். அன்றைய இரவில் எங்கோ வேகமாக காரில் சென்று கொண்டிருக்கிறார் சதீஷ். கொஞ்சம் திக்குவாய்காரர். வழியில் திடீரென எதிர்ப்படும் ஒரு பைக்கின் மீது கார் மோத.. பைக்கை ஓட்டி வந்த இளைஞன் ஸ்பாட்டிலேயே காலி.

அவனது பைக்கை பள்ளத்தில் உருட்டிவிட்டுவிட்டு, அந்த இளைஞனின் உடலை தனது காரின் டிக்கியில் வைத்துக் கொண்டு மீண்டும் காரில் பறக்கிறார் சதீஷ். வழியில் போலீஸிடம் செக்போஸ்ட்டில் மாட்டிக் கொள்கிறார்.

சாடிஸ்ட் மனப்பான்மை கொண்ட சப்-இன்ஸ்பெக்டரான ‘பாட்சா’ என்ற பாவல் நவகீதன் சதீஷை அவமரியாதை செய்ய.. சதீஷ் பாவலை கன்னத்தில் அறைந்துவிடுகிறார்.

இதை எதிர்பார்க்காத பாவல், சதீஷை ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடித்து உதைக்கிறார். அப்போது அதே ஸ்டேஷனில் இருக்கும் போலீஸ்காரர்களான பவா செல்லத்துரையும், ஈ.ராமதாஸூம் சேர்ந்து சதீஷை காப்பாற்றி ஸ்டேஷனுக்குள் சிறை வைக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ஏற்காடு டவுனில் ஒரு இளம் பெண்ணின் பிணம் கிடப்பதாகத் தகவல் தெரிய.. ஸ்டேஷனின் மூத்த சப்-இன்ஸ்பெக்டரான அஜய் ராஜ், ஸ்பாட்டுக்கு வந்து தனது விசாரணையைத் துவக்குகிறார். அதே நேரம் ஒரு இளைஞனையும் காணவில்லை என்று புகார் வருகிறது.

ஸ்டேஷனே பரபரத்துப் போய் இந்தக் கேஸை விசாரிக்கத் துவங்க.. மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரே ஸ்டேஷனுக்கு வந்து “உடனடியாக கேஸை முடிச்சாகணும்” என்று உத்தரவிட்டுவிட்டுப் போகிறார்.

அதே நேரம் சதீஷும் அதே ஸ்டேஷனில் கைதிபோல் இருக்கிறார். அவர் ஓட்டி வந்த காரும் போலீஸ் ஸ்டேஷனின் வாசலில் நிற்கிறது. அந்தக் காரின் டிக்கியில் பைக்கில் வந்த இளைஞனின் சடலம் இருக்கிறது. காரை சோதனையிடாமல் போலீஸார் வேறு வேலைகளில் மூழ்கியிருக்கிறார்கள்.

அந்த இளம் பெண்ணை யார் கொலை செய்தது..? யார் அந்த இளம் பெண்..? காருக்குள் பிணமாக்க் கிடக்கும் இளைஞன் யார்..? சதீஷ் விடுபட்டாரா..? இந்த மூவருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான சஸ்பென்ஸ், திரில்லர் திரைக்கதை.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க நிச்சயமாக மற்றைய ஹீரோக்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்தான். பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லையே என்று மறுத்திருப்பார்கள். துணிந்து நடித்திருக்கும் சதீஷூக்கு நமது பாராட்டுக்கள்..!

காமெடி நடிகரான சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார் போலும்..! அதை செவ்வனே செய்திருக்கிறார். சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல.. அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை இந்த “சட்டம் என் கையில்படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

முதலில் அமைதியானவராக தனது நடிப்பை ஆரம்பிக்கும் சதீஷ் போகப் போக தனது வில்லத்தனத்தைக் காட்டி கடைசியில் அனைவருக்கும் அல்வா கொடுக்கும்போது ரசிக்க வைத்திருக்கிறார்.

படபடப்பு, பதைபதைப்பு, கோபம், ஆத்திரம், தன்மை என்று தனது கதாப்பாத்திரத்திற்காக அனைத்து வகையான நடிப்பையும் ஒரு சேர காண்பித்திருக்கும் சதீஷூக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..!

பாவல் நவகீதன்தான் படத்தின் வில்லனைப் போலவே நடித்திருக்கிறார். அந்த ஸ்டைல், லுக்.. யாரையும் மதிக்காத தெனாவெட்டு.. அஜய் ராஜையே கலாய்க்கும்விதமாய் பேசுவது.. ஸ்டேஷனில் தனது முரட்டுத்தனத்தைக் கைதிகளிடம் காட்டுவது என்று தனது அநியாய நடிப்பைக் கொட்டியிருக்கிறார் பாவல்.

இவருக்கு நேரெதிராக அமைதியாக, நல்ல காவல் துறை அதிகாரியாக நடித்து கடைசியில் தனது நல்லத்தனத்தை புஸ்வானமாக்கிக் காட்டியிருக்கும் அஜய் ராஜூவுக்கும் நமது பாராட்டுக்கள்.

போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சமும், ஊழலும் எந்தவிதமாக நடக்கிறது என்பதைக் காட்டும்விதமாய் போலீஸ்காரர்களாக நடித்திருக்கும் பவா செல்லத்துரையும், ஈ.ராமதாஸூம் நடித்துக் காண்பித்துள்ளனர். படத்தில் நடித்திருக்கும் மற்றைய கதாப்பாத்திரங்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

படம் இரவு நேரக் காட்சிகளை அதிகம் கொண்டுள்ளதால் ஒளிப்பதிவாளர் தன்னால் முடிந்த அளவுக்கு வித்தை காட்டியிருக்கிறார். இதற்கு ஒத்து ஊதுவதுபோல இசையமைப்பாளரும் பின்னணி இசையில் படத்துக்கு திகில் உணர்வைக் கொடுத்து நம்மையும் கொஞ்சம் படபடப்பாகவே வைத்திருக்கிறார்.

படத் தொகுப்பாளரின் கச்சிதமான தொகுப்பினால் உண்மைக் குற்றவாளி யார் என்பதை நமக்குப் புரிவதைப் போல காண்பித்திருக்கிறார்கள். நன்று..!

மென்மையாக ஆரம்பிக்கும் படம், போகப்போக ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் பரபர திரில்லர் அனுபவமாக மாற்றிவிடுகிறது. அனைத்துத் தரப்பு மக்களையும் எளிதில் கவரும்படியாக, கமர்ஷியல் திரில்லராக இப்படம் வந்துள்ளது.

2 மணி நேரம் பொழுதுபோகும்படியான உண்மையான திரைப்படம் இது. யாரையும் ஏமாற்றது என்பதற்கான உத்தரவாதத்தை நாம் தருகிறோம்.

RATING : 3.5 / 5

 

Our Score