செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் D.ராஜா, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ‘ஆடுகளம்’ நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
விவேக் மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவை நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார்.
‘படை வீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான தனா, இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
நாட்டின் கடைக்கோடியில் வசிக்கும் ஒரு குடிமகனின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கத்தின் மீது கோபம் கொண்ட அந்த அப்பாவி குடிமகன், வெகுண்டெழுந்து அந்த அரசையே அசைத்துப் பார்க்கும் அளவுக்குச் செல்வதுதான் இந்த ‘ஹிட்லர்’ திரைப்படம்.
தமிழ்நாட்டில் புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியில் சரண்ராஜ் ஒரு பவர்புல்லான அமைச்சர். பொதுப்பணித்துறை அமைச்சர். லஞ்சம், ஊழலில் திளைத்து, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கோடிக்கணக்கில் சேமித்து வைத்திருக்கிறார்.
இவர் மீது தொகுதி மக்களுக்கு கடுமையான அதிருப்தி. அதனால் வரும் தேர்தலில் இவர் வெற்றி பெற முடியுமா என்பதே சந்தேகம்தான் என்கிறது உளவுத்துறை ரிப்போர்ட்.
சரண்ராஜ் தோல்வியடைந்தால் அவருடைய இடத்தைப் பிடிப்பதற்காகக் கண் கொத்திப் பாம்பாகக் காத்துக் கொண்டிருக்கிறார் கட்சியிலும், ஆட்சியிலும் மூன்றாவது நபராக இருக்கும் ஆடுகளம் நரேன்.
இதே நேரம் சென்னைக்கு மதுரையிலிருந்து வரும் நாயகன் விஜய் ஆண்டனி, தனது கல்லூரி நண்பன் என்று சொல்லி ரெடின் கிங்ஸ்லியின் வீட்டில் டேரா போடுகிறார்.
மின்சார ரயிலில் தினமும் வேலைக்குச் செல்லும் விஜய் ஆண்டனி ரயில் நிலையத்தில் சந்திக்கும் நாயகி ரியா சுமனுடன் மோதலுடன் பேச்சைத் துவக்கி கடைசியாகக் காதலிக்கவும் துவங்குகிறார். சில, பல மோதல்களுக்குப் பிறகு ரியாவும் அவரைக் காதலிப்பதாகச் சொல்கிறார்.
இந்த நேரத்தில் தேர்தல் களத்தில் பயன்படுத்துவதற்காக பதுக்கி வைத்திருக்கும் பணத்தினை எடுத்துத் தனது ஆட்களிடம் கொடுத்தனுப்புகிறார் சரண்ராஜ். அந்தச் சமயத்தில் யாரோ இடையில் புகுந்து சரண்ராஜின் ஆட்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுப் பணத்தையும் களவாடிச் செல்கிறார்கள்.
கருப்புப் பணம் என்பதால் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் சரண்ராஜ் அடுத்த ரவுண்டு பணத்தை இறக்க.. இப்போதும் பணம் களவு போகிறது. இப்படியாக 3 முறையிலும் கோடிக்கணக்கான பணத்தை இழக்கும் சரண்ராஜ், யார் அந்த மெகா கொள்ளையன் என்று ஆள் வைத்துத் தேடுகிறார்.
அதே நேரம் போலீஸ் உதவி கமிஷனரான கெளதம் மேன்னும் தனிப் படை அமைத்துக் குற்றவாளியைத் தேடுகிறார். இந்தத் தேடுதல் வேட்டையில் ஒரு இடத்தில் விஜய் ஆண்டனியும் சிக்கிக் கொள்கிறார்.
இதற்கடுத்து நடப்பது என்ன..? உண்மையில் அந்தக் கொள்ளைக்காரன் யார்..? விஜய் ஆண்டனிக்கும் இந்தக் கொலை, கொள்ளைக்கும் என்ன சம்பந்தம்..? கொள்ளை போன பணம் திரும்பக் கிடைத்த்தா..? இல்லையா…? என்பதுதான் இந்த ‘ஹிட்லர்’ படத்தின் சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதை.
விஜய் ஆண்டனி எப்போதும்போல சாதாரணமான ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தில் ஆழ்ந்து நடித்துள்ளார். காதல் காட்சிகளில்தான் இன்னமும் ஒரு சுறுசுறுப்பும், துள்ளலும் ஸாருக்கு வரவே மாட்டேங்குது. ஆக்சன் காட்சிகளில் வேகத்தைக் காட்டினாலும் ஆக்ரோஷமாகப் பேச வேண்டிய காட்சிகளில் தந்திரமாகப் பேசியனுப்பும்விதமாய் திரைக்கதை அமைந்திருப்பதால் அதிகமான நடிப்புக்கு ஸ்கோப் இல்லாமல் போய்விட்டது.
நாயகனுக்கே இந்த நிலைமைதான் என்றால், நாயகிக்கு மட்டும் என்னவாக இருந்துவிடப் போகிறது..? அவருக்கும் இதை நிலைமைதான்..! சிரிக்க வேண்டிய இடங்களில் சிரித்து, காதலை காட்ட வேண்டிய இடத்தில் காட்டி.. சோகத்தைக் கொட்ட வேண்டிய இடத்தில் கொட்டி.. ஒரு சராசரி ஹீரோயின் என்ன செய்வாரோ அதைச் செவ்வனே செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
கவுதம் மேன்னின் அலப்பறையில்லாத நடிப்பும், சரண்ராஜின் வில்லத்தனமும், ‘ஆடுகளம்’ நரேனின் அடக்கமான அரசியல் நடிப்பும் மட்டுமே படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. ரெடின் கிங்ஸ்லியின் ஒன்றிரண்டு வசனங்களும், நடிப்பும் சிரிப்பை வரவழைக்கின்றன.
நவீன் குமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. முதல் காட்சியிலும், கடைசி காட்சியிலும் ஒரு பிரம்மாண்டத்தைக் காட்டியிருக்கிறார். ரயிலுக்குள் நடக்கும் சண்டை காட்சிகளைக் கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார். சண்டை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
விவேக் மெர்வினின் இசையில் டூயட் பாடலைவிடவும், ஐஸ்வர்யா தத்தா ஆடும் நடனத்தில் ஒலிக்கும் பாடல் படத்திற்கு ஒரு கவன ஈர்ப்பைக் கொடுத்திருக்கிறது.
படத்தில் மிகப் பெரிய பிரச்சினையே கதை, திரைக்கதையில் இருக்கும் லாஜிக் எல்லை மீறல்தான். அரசுக்குத் தெரியாமல் வீடு கட்டலாம். ஆனால் ஆற்றுக்குள் பாலம் கட்ட முடியுமா..? “முடியும்” என்கிறார் இயக்குநர். எந்த நாட்டில் என்றுதான் தெரியவில்லை.
இந்த லாஜிக்கிற்குப் பொருத்தமாக நம்பும்படியாக ஒரு திரைக்கதையை உருப்படியாய் யோசித்து வைத்திருக்கலாம் இயக்குநரே..!
ஆண்களே குடிக்கக் கூடாது என்று சொல்லும் சூழலில் நாயகியை பாருக்கு அழைத்துச் சென்று ரேட் லேபில் மதுவை வாங்கிக் கொடுக்கும் பொறுப்புள்ள நாயகனைப் பார்க்கும்போது நமக்குப் பத்திக் கொண்டு வருகிறது. படத்திற்குப் பெரும் திருஷ்டிப் பொட்டாய் இந்தக் காட்சி அமைந்துவிட்டது.
CC TV காட்சிகளை வைத்து கவுதம் மேனன் நடந்த கொள்ளை மற்றும் கொலைகளைப் பற்றிச் சொல்லும்போது கதை என்ன..? கொலையாளிகள் யார்..? என்பதை சாதாரண ரசிகனே ஊகித்துவிடுகிறான். இதுவும் படத்துக்கு ஒரு மிகப் பெரிய பேக் டிராப்பாகிவிட்டது!
மற்றபடி ஒகு கமர்ஷியல் எண்ட்டெர்டெயின்மெண்ட்டாக பொழுதைப் போக்கும் படமாக அமைந்துள்ளது இந்த ‘ஹிட்லர்’ திரைப்படம். பார்க்கலாம்தான்..!
RATING : 2.5 / 5