‘மின்சார கனவு’, ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன், கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து இயக்கியிருக்கும் திரைப்படம் இது.
இந்தப் படத்தை இவருடைய மனைவி லதா மேனனே, தயாரித்துள்ளார்.
ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினித், திவ்யதர்ஷிணி, குமாரவேல், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – ராஜீவ் மேனன், தயாரிப்பு – லதா மேனன், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – ரவி யாதவ், படத் தொகுப்பு – ஆண்டனி, ஒலி வடிவமைப்பு – Thierry Delor Vijay Rathinam, ஒலிக் கலவை – சிவக்குமார், நேரடி ஒலிப்பதிவு – எஸ்.டி.பி.சாமி, தயாரிப்பு வடிவமைப்பு – ஜி.சி.ஆனந்தன், பாடல்கள் – நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண்ராஜா காமராஜ், பாடகர்கள் – ஜி.வி.பிரகாஷ், ஹரிச்சரண், சின்மயி, ராம் பார்த்தசாரதி, பாம்பே பாக்யா, அந்தோணி தாசன், அர்ஜூன் சாண்டி, சத்யப்பிரகாஷ், ஒப்பனை – பட்டணம் ரஷீத், இணை இயக்கம் – விஜய் பாலாஜி, லைன் புரொடியூஸர் – ஆர்.கணேஷ், உடை வடிவமைப்பு – சரஸ்வதி மேனன், விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன். வெளியீடு – சக்தி பிலிம் பேக்டரி.
ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து மிருதங்கம் கற்று கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா, இல்லையா என்பதுதான் இந்த ‘சர்வம் தாள மயம்’ படத்தின் கதைக் கரு.
பீட்டர் ஜான்ஸன் என்னும் ஜி.வி.பிரகாஷ் தஞ்சை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்தவர். தாழ்த்தப்பட்ட சமூகம் என்றாலும் இவர்களின் கைகளால்தான் உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளும் வித்வான்கள் மிருதங்கங்களை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள்.
பரம்பரை பரம்பரையாக மிருதங்கம் தயாரிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ். அவரது அப்பாதான் இப்போதும் சென்னையில் மிருதங்கம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மாதத்திற்கு ஒரு உருப்படி விற்றாலே பெரிய விஷயம் என்னும் நிலைமையில் எப்படி பையனை உருவாக்கி வளர்த்துவிட்டிருக்கிறார்.
பையன் ஜி.வி.பிரகாஷோ தீவிரமான விஜய் ரசிகராக இருக்கிறார். பள்ளியின் இறுதியாண்டு தேர்வைக்கூட முடிக்காமல் விஜய்யின் படத்திற்கு முதல் நாள் முதல் ஷோவுக்கு ஓடக் கூடிய அளவுக்கு வெறி பிடித்த விஜய் ரசிகர். விஜய் ரசிகர் மன்றம் மூலமாக சில நல்ல செயல்களையும் செய்து வருகிறார். மாணவர்களுக்கு புத்தகம், சிலேட்டு, பென்சில், பேனா கொடுப்பது முதல், ரத்த தானம் வழங்குவதுவரையிலும்..!
பையன் எப்படியாவது பிளஸ் டூவில் தேறிவிடுவான் என்று பெற்றோர்கள் காத்திருக்க.. அக்கவுண்டன்சியில் பெயிலாகி போய் நிற்கிறார் ஜி.வி.பிரகாஷ். அப்பா குமரவேல் திட்டித் தீர்க்கிறார். அடுத்த அக்டோபரில் தேர்வு எழுதி பாஸ் செஞ்சிரலாம் என்று அப்பாவை சமாதானப்படுத்துகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இந்த நேரத்தில் மிருதங்கத்தில் தனி சாம்ராஜ்யமே நடத்தி வரும் பாலக்காட்டு வேம்பு ஐயர் என்னும் நெடுமுடி வேணுவுக்கு மிருதங்கத்தைக் கொடுக்கப் போகிறார் ஜி.வி.பிரகாஷ். அவருடனேயே கச்சேரியை அமர்ந்து பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. அந்த இடத்தில் மிருதங்க வித்வானுக்குக் கிடைக்கும் மரியாதையையும், கை தட்டலையும் பார்த்த ஜி.வி.பிரகாஷுக்கு திடீரென்று தான் மிருதங்கம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.
இதற்காக வேம்பு ஐயரிடம் தன்னையும் மாணவனாக சேர்த்துக் கொள்ளச் சொல்லிக் கேட்கிறார். அவரிடத்தில் முதன்மை மாணவனாக இருக்கும் வினீத் ஜி.வி.பிரகாஷை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் வேம்பு ஐயரின் வீட்டு முன்பாக தப்பாட்டம் அடித்து தனது இசைத் திறமையை வெளிப்படுத்துகிறார் ஜி.வி.பிரகாஷ்.
இதனால் மனமகிழ்ந்து போன நெடுமுடி வேணு ஜி.வி.பிரகாஷை தன்னுடைய மாணவனாக சேர்த்துக் கொள்கிறார். இது வினீத்திற்குப் பிடிக்கவில்லை. அதே நேரம் வேம்பு ஐயர் தனக்கென்று சில கொள்கைகளை வைத்திருக்கிறார். தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிப்பதில்லை. பெண்களுக்கு மிருதங்கம் வாசிப்பதில்லை. தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் நீதிபதியாக அமர்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் வேம்பு ஐயர்.
இடையில் ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகி சாரா என்நும் அபர்ணா பாலமுரளியைப் பார்த்தவுடன் லவ்வாகிறார் ஜி.வி.பிரகாஷ். இவருடைய நல்ல குணத்தைப் பார்த்து இம்ப்ரஸ்ஸாகும் அபர்ணாவும் காதலுக்கு ஓகே சொல்கிறார். இந்தக் காதல் வளர்ந்து கொண்டிருக்க.. இன்னொரு பக்கம் மிருதங்கம் கிளாஸுக்கும் போய்க் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
நெடுமுடி வேணுவின் மிருதங்கப் பள்ளியில் வினீத்திற்கு, ஜி.வி.பிரகாஷை சுத்தமாகப் பிடிக்கவில்லை. இவர்கள் இருவருக்குமிடையில் முட்டல், மோதல்கள் பெரிதாகிறது. ஒரு கட்டத்தில் நெடுமுடி வேணு, ஜி.வி.பிரகாஷிற்கு ஆதரவு தந்து, வினீத்தை வீட்டைவிட்டு வெளியில் அனுப்புகிறார்.
கோபமடையும் வினீத் நெடுமுடி வேணுவை அவமானப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அவருடைய சகோதரியான டிடி நடத்தும் ஒரு இசை நிகழ்ச்சி ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதில் வினீத் நீதிபதியாக அமர்கிறார்.
இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தற்செயலாக ஜி.வி.பிரகாஷூடன் மிருதங்கம் கற்றுக் கொள்ளும் ஒரு பையன் செல்ல.. துணைக்கு ஜி.வி.பிரகாஷூம் செல்கிறார். போன இடத்தில் அவரை வாசிக்க வைத்து அது மிருதங்க இசையே இல்லை என்று அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார் வினீத். இது தொடர்பாக ஸ்டூடியோவுக்குள் ஏற்பட்ட சண்டையும், மோதலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதைப் பார்த்து கோபப்படும் நெடுமுடி வேணு ஜி.வி.பிரகாஷை தன்னுடைய சிஷ்யன் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறார். நட்டாத்தில் நிற்கும் ஜி.வி.பிரகாஷ் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது மிருதங்கத் திறமையை வெளிக்காட்ட நினைக்கிறார். இன்னொரு பக்கம் வினீத் அதை முறியடிக்கவும் தயாராக இருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் மீதமுள்ள திரைக்கதை.
ஜி.வி.பிரகாஷின் நடிப்பு கேரியரில் இதுவொரு முக்கியமான திரைப்படம். முதலில் சாதாரண விஜய் ரசிகனாக அலம்பல் செய்து கொண்டு, பெற்றோரை ஏமாற்றிக் கொண்டு திரிந்தவர், மியூஸிக் அகாடமியில் நெடுமுடி வேணுவுக்குக் கிடைக்கும் பாராட்டும், கை தட்டலும் மனதை மாற்றிவிட.. அப்போதிலிருந்து வேறொரு நாயகனாக காட்சியளிக்கிறார்.
விடாப்பிடியாய் சிஷ்யனாய் சேர்ந்தாலும் முறைப்படி கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் அவர் விழைவதும், வினீத்துக்கும் அவருக்குமான நெருடலான உறவையும் தாண்டி பயிலத் துடிக்கும் காட்சிகளில் நம்மை கவர்ந்திழுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
காதல் காட்சிகளில்கூட முதிர்ச்சியான காதலனாக உருமாறியவர் அது கொஞ்சம் ஓவராகப் போய் முதல் கூடலில் போய்விடுவதுதான் இந்தப் படத்தில் இருக்கும் ஒரேயொரு மைனஸ் பாயிண்ட்.
டிவி ஷோவில் தன்னை மாட்டிவிட்டு தான் மட்டும் தப்பித்துக் கொண்ட பணக்கார நண்பனைப் புரிந்து கொண்டு அவனிடமிருந்து விலகி வரும் காட்சியில் பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய மிருதங்கத்தை வாங்கிக் கொண்டு போனவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து தன்னுடைய தந்தையின் திட்டையும் வாங்கிக் கொண்டு இனி தன் வாழ்க்கை மிருதங்கத்தில்தான் என்று உறுதியாய் சொல்லும் இடத்தில் அழுத்தமாய் தனது நடிப்பை பதிவு செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஆனால் ஒரேயொரு சறுக்கல். மிருதங்க இசை ஒலிக்கின்றபோது அவரது கை விரல்கள் ஆயாசமாக.. சாதாரணமாக மிருதங்கத்தின் மீது விழுந்து கொண்டிருப்பதுதான். கொஞ்சம் இசைக்கேற்றவாறு கைகளை இசைத்து வாசித்திருக்கலாம். இல்லையெனில் அதற்கு குளோஸப் வைக்காமல் இருந்திருக்கலாம். இரண்டையும் செய்யாமல் போனதால் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு வருடமாக மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனிடம் மிருதங்கம் கற்றுக் கொண்ட பின்புதான் கேமிரா முன்பு வந்து நின்றாராம் ஜி.வி.பிரகாஷ். அப்படியிருந்தும் இப்படியா..?
நெடுமுடி வேணு. மலையாளத் திரையுலகின் நடிப்பு மன்னன். திலகனுக்கு பிறகு அனைத்துவித கேரக்டர்களையும் செய்வதற்கு இவரைவிட்டால் யாருமில்லை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பாற்றல் கொண்டவர். பாலக்காட்டு வேம்பு ஐயர் கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
அவருடைய முதல் அறிமுகக் காட்சியிலேயே பெண்களுக்கு வாசிக்க மாட்டீங்களாமே என்று டிடி கேட்டவுடன் ஒரு பார்வை பார்க்கிறார் பாருங்கள்.. அங்கேயே தனது ஆட்டத்தைத் துவக்கிவிட்டார் வேணு. மிகச் சாதாரணமாக ஜி.வி.பிரகாஷிடம் பேச ஆரம்பித்து பின்பு அவரது இசையார்வத்தையும், தப்பு அடிக்கும் வேகத்தையும் பார்த்துவிட்டு சரி என்று ஒத்துக் கொள்ளும் காட்சியில் மிக ஈர்ப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் வேணு.
தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த பாடகருடன் காரில் வரும்போதே பேசும் காட்சியில் தன்னை மட்டும் தட்டி, அவமானப்படுத்தும் நோக்கில் அவர் பேசும் பேச்சுக்களை அவர் எதிர்கொள்ளும்விதம்.. முகத்தில் எள்ளும்,கொள்ளும் வெடிக்கும் தருணத்தில் வேணு, பாலக்காட்டு வேம்பு ஐயராகவே மாறிவிட்டார். வெல்டன் ஸார்.. நீங்கள்தான் இந்தப் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறீர்கள்.
மூன்றாவதான பாராட்டுக்குரியவர் ஜி.வி.பிரகாஷின் அப்பாவான குமரவேல். மகன் மீதான நம்பிக்கையின்மையை வெளிக்காட்டி இவன் எப்படி உருப்படப் போறான்.. இவன் எங்க படிக்கப் போறான். இவன் எப்படி என்னைக் காப்பாத்தப் போறான் என்பதையே மிக சாதாரணமான அப்பாவாக சொல்லும் கேரக்டர்.
மகன் மிருதங்கம் மீதான ஆர்வத்தில் வந்து விழுகும்போது முகமலர்ந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொடுத்து உருவாக்கும் சந்தோஷ நடிப்பையும் அழகாகக் காட்டியிருக்கிறார். இவருடைய மனைவியான ஆதிராவின் அம்மா புலம்பலையும், நடிப்பையும் ரசிக்க முடிந்திருக்கிறது.
காதலியாக அபர்ணா பாலமுரளி. முதலில் காதலை ஏற்க மறுத்து இயல்பாக யதார்த்த நிலைமையைச் சொல்லி ஜி.வி.பிரகாஷை புறக்கணிப்பவர், பின்பு தனக்குப் பிடித்த குணம் அவரிடம் இருப்பதையறிந்து காதலை ஏற்றுக் கொள்கிறார்.
சில, பல ஷாட்டுகளில், பல கோணங்களில் அபர்ணாவின் அழகும், நடிப்பும் கவர்கிறது. கேமிராவுக்கேற்ற முகம் என்பதோடு நடிப்பும் சொல்லி வைத்தாற்போல் வருவதால் பிடித்துப் போகிறார் அபர்ணா.
வெகு நாட்களுக்குப் பிறகு வில்லன் தோற்றத்தில் வினீத். அந்தக் கேரக்டரை செவ்வனே செய்திருக்கிறார். “அண்ணா.. அண்ணா..” என்று வேணுவைச் சுற்றிச் சுற்றி வந்து.. வேணு கடைசியாக “வெளிய போ..” என்று சொன்னவுடன் “என்னையவா சொன்னேள்…?” என்று வினீத் கேட்கும்போது பரிதாபத்திற்குப் பதில் தியேட்டரில் கை தட்டல்கள் ஒலிப்பதே இவருடைய நடிப்புக்குக் கிடைக்கும் பரிசு.
டிடி என்னும் திவ்யதர்ஷிணி தொகுப்பாளிணி கேரக்டரிலேயே நடித்திருக்கிறார். ‘வெல்டன்’ என்றே சொல்லலாம்.
ரவி யாதவ்வின் ஒளிப்பதிவில் இந்தியாவைச் சுற்றிக் காட்டும் அந்தப் பாடலின் காட்சிகளை மிக அழகுற படமாக்கப்பட்டுள்ளது. டூயட்டுகளின் அழகும் திரையில் ஜொலிக்கிறது. கேமிராவின் கோணங்கள் பல காட்சிகளில் படத்தை இமை கொட்டாமல் பார்த்தே தீர வேண்டும் என்கிற ஆசையைத் தூண்டியிருக்கிறது. இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் நமது வாழ்த்துகள்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘சர்வம் தாள மாயம்’ பாடல் கொண்டாட்டமானது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும், அந்தந்த பகுதிகளில் இசைக்கப்படும் இசையில் சேர்ந்திசைக்கும் பாடலாகவும் காட்சிப்படுத்தப்படுவதால் மிகவும் கவனிக்கப்பட்ட பாடலாகவும், பாடல் காட்சியாகவும் இது அமைந்திருக்கிறது.
‘பீட்டர் பீட்டா எது’ பாடல் ஆட வைப்பதற்காகவே ஒலிக்கிறது. ‘மாயா மாயா’ அழகான மெலடி. ஆனால் ஆழமில்லை. ஈர்ப்புமில்லை. ‘எப்போ வருமோ எங்க காலம் எப்போ வருமோ பாடல்’ அந்த இனத்தவரின் குமுறலை சரியான விகிதத்தில் சொல்லும் பாடல். அழகான இசை.
கிளைமாக்ஸ் போட்டிக்கான காட்சியில் ஜி.வி.பிரகாஷ் தான் இந்தியா முழுவதையும் சுற்றும்போது கற்றுக் கொண்ட அத்தனை இசையையும் மிருதங்கத்தில் கொணர்ந்து காண்பித்து வெறுமனே கர்நாடக இசை மட்டுமே இசையல்ல என்பதை உணர்த்தும் அந்தக் காட்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான் புயலாய் வீசுகிறது. கர்நாடக இசையில் துவங்கி, செண்டை மேள இசை, டோலக் இசை, பறை இசை, காஷ்மீரிலும், கர்நாடகாவிலும் இசைக்கும் இசை என்று அனைத்து வகையான இசையையும் எந்தவொரு தாள வாத்தியத்திலும் திணிக்க முடியும் என்பதைச் சொல்லிக் காட்டியிருக்கிறார்கள் இயக்குநரும், இசையமைப்பாளரும்..!
1985-ம் ஆண்டு வெளியான ‘சிந்து பைரவி’ படம் கர்நாடக சங்கீத உலகத்தை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் அதில் பாதி திரைப்படம் ஜே.கே.பி. என்னும் சங்கீத வித்வானின் சொந்த வாழ்க்கையைப் பற்றியதாக மாறிவிட்டிருந்தது.
இத்திரைப்படமோ கர்நாடக சங்கீதம் ஒரு சாராருக்கு மட்டுமேயானதா..? மற்றைய சாதியினர்.. குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியினர் அதனைக் கற்றுக் கொள்ளவே கூடாதா..? அவர்களால் அதில் மேதமைகளாக முடியாதா..?” என்பதைப் பற்றிப் பேச வந்திருக்கிறது.
மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு இயக்குநர் ராஜீவ் மேனன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதாலும், இசை அறிவு நிரம்ப உள்ளவர் என்பதாலும் மிகச் சிறப்பாக கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்.
ஆனாலும் மிகவும் சாதூர்யமாக நாயகனை இந்து மதத்தில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினராகக் காட்டாமல் கிறித்துவ மதத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்று காட்டி தப்பித்துவிட்டார். இதையே இந்து மதமாகக் காட்டியிருந்தால், அவருடைய சாதியினரே அவரை என்ன சொல்லியிருப்பார்களோ.. தெரியாது..! தப்பித்தார்..!
ஆனால், இந்தப் படத்தின் இயக்கத்திற்காக ராஜீவ் மேனனுக்கு மிகப் பெரிய நன்றியினைத் தெரிவிக்க வேண்டும். மிக அழகாக திரைக்கதை அமைத்து எழுதி, இயக்கியிருக்கிறார்.
நெடுமுடி வேணுவின் வீட்டில் தென்படும் நிலைமை. குழந்தைகள் இல்லாமல் அவருடைய மனைவிக்கு இருக்கும் தனிமை கொடுமை. நெடுமுடி வேணுவின் வித்யா கர்வம்.. தன் புகழையும், பெயரையும் கட்டிக் காக்கும்விதம், அவமானத்தைத் தாங்க முடியாத கோபம்.. குமாரவேலுவின் குடிப் பழக்கமும் அவருடைய கைத் திறமையைக் காட்டும் காட்சிகளும்.. ஊரில் இரட்டை டம்ளரை மகனிடம் அறிமுகப்படுத்தும்விதம்.. அபர்ணா காதலை ஏற்றுக் கொள்ளும் காட்சி.. அவர்கள் கூடல் உருவாகும் அந்த நொடிப் பொழுது அணைப்பு.. அதனை சர்வசாதாரணமாக நினைத்துக் கடந்து போகும் ஆண் மகனின் யதார்த்தம்.. பெண்ணால் அதை திரும்பவும் நினைக்க முடியாத தருணத்தைக் காட்டுவது.. வினீத்தின் பொறாமை கலந்த உணர்வுகள்.. கர்னாடக இசையுலகில் பாடகர் – பக்க வாத்தியக் கலைஞர்கள் இடையிலான ‘ஈகோ’ போராட்டம், ‘திறமை யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். இதில் சாதிகள் இடையில் தேவையில்லை’ என்று கடைசியாக வேம்பு ஐயர் சொல்லாமல் சொல்லும் காட்சி.. என்று படம் நெடுகிலும் பயணம் செய்யும் காட்சிகளில் அழுத்தமான இயக்கமே படத்தை கடைசிவரையிலும் மூழ்கடித்துப் பார்க்க வைக்கிறது..!
கர்நாடக இசையின் நுட்பத்தையும், அழகையும் இசையிலும், பாடல்களிலும் ஒலிக்கவும், தெரியவும் வைத்திருக்கிறார் இயக்குநர். அதேபோல், மிருதங்கம் செய்யும் தொழிலில் ஈடுபடுவர்களின் வாழ்க்கை பின்னணியையும் தெளிவாக எடுத்து சொல்கிறார். அந்த மிருதங்கம் எத்தனையோ வித்வான்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்து அவர்களை உயர்த்துகிறது. ஆனால் செய்து கொடுக்கும் குடும்பத்தினர் அப்படியேதான் இருக்கின்றனர் என்கிற வாழ்க்கை முரணையும் தெளிவாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
கடைசியாக தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் கோடம்பாக்கத்தில் தலைவிரித்தாடி வரும் இந்த வேளையில் அதே தொலைக்காட்சிகளில் ‘ரியாலிட்டி ஷோ’ என்கிற பெயரில் நடக்கும் கூத்துக்களை அப்படியே காட்டியிருக்கிறார்.
கேரியரைத் துவக்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே ரிட்டையர்டு நிலைமைக்கு போன கலைஞர்கள் விளம்பரம், பணம் இரண்டுக்கும் ஆசைப்பட்டு பட்டென்று டிவி ஷோக்களில் நடுவராக வந்து அமரும் காமெடி.. இதே டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் பின்னணியில் இருக்கும் டி.ஆர்.பி. ரேட்டிங் அரசியல் ஆகியவற்றையும் போகிற போக்கில் ஒரு பிடிபிடித்திருக்கிறார் இயக்குநர்.
அதுவும், ‘தமிழ் தொலைக்காட்சி உலகின் ரியாலிட்டி ஷோவின் ராணி’ என்றழைக்கப்படும் டிடி என்ற திவ்யதர்ஷிணியையே அந்தக் கேரக்டரில் நடிக்க வைத்து இதனை வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநரின் தைரியத்திற்கு மீண்டும் ஒரு பாராட்டுக்கள்..!
படம் நெடுகிலும் ஆங்காங்கே வெளிப்படும் இயல்பான வசனங்களும், இதனால் எதிரொலிக்கும் சிரிப்பலைகளும், கை தட்டல்களும் இந்தப் படம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் என்பதையே காட்டுகிறது..!
படத்தில் பங்கு கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..!