அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘குற்றம் 23’ திரைப்படத்தை தயாரித்த ரெதான் – தி சினிமா பீப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பாளர் இந்தர் குமார், தற்போது ‘தடம்’ என்ற புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும், தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – மகிழ் திருமேனி, தயாரிப்பு நிறுவனம் – ரெதன்-தி சினிமா பீப்பிள், தயாரிப்பாளர் – இந்தர்குமார், ஒளிப்பதிவு – கோபிநாத், படத் தொகுப்பு – காந்த், கலை இயக்கம் – அமரன், இசை – அருண்ராஜ், பாடல்கள் – மதன் கார்க்கி, ஏக்நாத், சண்டை இயக்கம் – ஸ்டன் சில்வா, அன்பறிவ், நடன இயக்கம் – தினேஷ், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.பி.பாலகோபி, ஈ.இளங்கோவன், ஒலி – டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு – சுரன், அழகியகூத்தன், உடை வடிவமைப்பு – பிரதிஷ்டா, புகைப்படங்கள் – அஜய் ரமேஷ், கிராபிக்ஸ் – பிரசாத், விளம்பர வடிவமைப்பு – சசிதரன், உடைகள் – பி.ஆர்.கணேசன், ஒப்பனை – ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு – நிகில்.
‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மகிழ்திருமேனி, “தடையற தாக்க’ என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்துக்கு பிறகு, 2-வது முறையாக நடிகர் அருண் விஜய்யுடன் இத்திரைப்படத்தில் இணைந்ததில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
அவர் ஒரு இயக்குநரின் கதாநாயகன். அவருடைய கேரியரில் இந்தப் படமும் மறக்க முடியாத தடத்தைப் பதிக்கும் என்பது உறுதி.
ஒரு நாள் ஒரு செய்தித்தாளில் நான் படித்த ஒரு செய்தி என் மனதை வெகுவாகப் பாதித்தது. அது தொடர்பாக நான் மேலும் ஆராய்ந்தபோது அதிர்ச்சியான பல விஷயங்கள் எனக்குக் கிடைத்தன. அதனை மையமாக வைத்துத்தான் இந்தத் ‘தடம்’ படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
இது ஆக்சன், திரில்லர் டைப் படம் மட்டுமல்ல.. ஒரு லீகல் சொல்யூஷனைச் சொல்லும் படமும்கூட. படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தில் ஒரு முத்தக் காட்சியை மிகவும் கஷ்டப்பட்டு படமாக்கினேன். 13-வது டேக்கில்தான் அது ஓகேயானது. ஆனால் அதையும் சென்சாரில் நீக்கிவிட்டார்கள்..” என்றார் வருத்தத்துடன்.
படத்தின் நாயகனான அருண் விஜய் பேசும்போது, “தடையறத் தாக்க’ படத்திற்குப் பின் இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறேன். இதுவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.
ஒரு காதலன் தான் காதலிக்கும் பெண்ணை காபி சாப்பிட எப்படி அழைக்க வேண்டும்? அதற்குச் சரியாக எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்தப் படத்தில் ஒரு காட்சியில் இயக்குநர் சுவைபட சொல்லியிருக்கிறார். இந்தக் காட்சி பல காதலர்களுக்கு அவர்களின் காதல் வளர உதவும் என்று நினைக்கிறேன்.
எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறும். இந்த படத்தில் நாயகியுடன் உதடோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் முத்தக் காட்சி ஒன்று இருந்தது. முதலில் ‘இந்தக் காட்சியில் நான் நடிக்க மாட்டேன்’ என்று இயக்குநரிடம் கூறினேன். ஆனால் இயக்குநர் என் மனைவியிடம் இது பற்றிப் பேசி என்னை கன்வின்ஸ் செய்து கடைசியில் சம்மதிக்க வைத்து நடிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் என் வீட்டில் நான் அனுபவிக்கிறேன்…” என்றார்.
உடனே ஓடி வந்து குறுக்கிட்ட இயக்குநர் மகிழ்திருமேனி, ”அருணிடம் நாயகிக்கு முத்தம்தான் கொடுக்கச் சொன்னேன். ஆனால் அவரோ, நாயகியின் உதட்டையே கடித்திருக்கிறார். இதை சென்சாரிலேயே கவனித்து சொன்னார்கள். அந்தக் காட்சியை சென்சாரில் நீக்கிவிட்டார்கள். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ‘அந்தக் காட்சி ஹீரோ ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்தது போல் இல்லை. கடித்து வைப்பது போலிருக்கிறது’ என்றார்கள். என்னால் அதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அந்தக் காட்சியை நீக்கியதை நானும் ஏற்க வேண்டியதாகிவிட்டது…” என்று நடந்ததை சொல்ல..
அருண் விஜய் வெட்கத்துடன், “அந்த முத்தக் காட்சியை பல டேக்குகள் எடுத்தது உண்மைதான். ஆனால் கேமிரா ஆங்கிளில் அது வேறு மாதிரியாகிவிட்டது. மற்றபடி நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என் மனைவி இங்கே வந்திருக்கிறார். இந்தப் பிரச்சினையை இத்தோடுவிட்டுவிடுவோம்..” என்றார் நல்ல பிள்ளையாக..!
இந்த சுவையான பேச்சின்போது, அருண் விஜய் கடித்ததாக சொல்லப்படும் உதட்டுக்கு சொந்தக்காரியான ஹீரோயின் தான்யா ஹோப் மட்டும், எந்த ரியாக்ஷனும் காட்டாமல் மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தார்.
ஏதாவது புரிந்திருந்தால்தானே ரியாக்சன் காட்ட முடியும்..?