‘சர்கார்’ கதை பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்தது. இரு தரப்பினரும் சமரசம் ஆனார்கள்..!

‘சர்கார்’ கதை பற்றிய சர்ச்சை முடிவுக்கு வந்தது. இரு தரப்பினரும் சமரசம் ஆனார்கள்..!

நடிகர் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவாகி வரும் தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கும் ‘சர்கார்’ படத்தின் கதை மீதான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் வழக்குத் தொடுத்த இணை இயக்குநர் வருண் ராஜேந்திரனோடு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனமும் சமரசம் செய்து கொண்டதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

varun rajendiran-1

முன்னதாக வருண் ராஜேந்திரன்  ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடையது என்றும், இதற்காக தனக்கு இழப்பீடாக 30 லட்சம் ரூபாயும், படத்தின் டைட்டிலில் தனது பெயரை போட வேண்டும் என்றும் இல்லாவிடில் படத்தை வெளியிடாமல் நிறுத்த வேண்டும் என்றும் கோரி மனு செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு இன்றைக்குள் பதிலளிக்கும்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

a.r.murugadoss

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் தன் கட்சிக்காரருக்கு சமரசம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் அவருடைய வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதனையே படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் தங்களது தரப்பு வாதமாக எடு்த்துரைத்தார்கள்.

இந்த சமரச் தீர்வின்படி படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடையதுதான் என்பதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒத்துக் கொண்டுள்ளார். இதற்கான இழப்பீடாக ஒரு குறிப்பிட்ட தொகையை வருண் ராஜேந்திரனுக்குக் கொடுக்கவும் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டுவிட்டார். மேலும் படத்தின் டைட்டிலின் துவக்கத்தில் ‘கதை – நன்றி’ என்ற டைட்டிலின் கீழ் வருண் ராஜேந்திரனின் பெயரை போடவும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒத்துக் கொண்டுவிட்டார். இதனை தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து ‘சர்கார்’ பட விவகாரம் தொடர்பான வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.

Our Score