இயக்குநர் வீ.சேகர். விசுவிற்கு பின்பு குடும்பக் கதைகளை போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு சல்லடை போட்டு அலசி ஆராய்ந்து கொடுத்தவர்.
இந்தியாவிலேயே ஒரு இயக்குநரின் அனைத்து படங்களும் அதிகமான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன என்றால் அது வீ.சேகராகத்தான் இருக்கும். இவருடைய படங்கள் அனைத்துமே தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுவிட்டதாம்.. இந்தப் பெருமை ஒன்றே இவருக்கு போதும்தான்..!
தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்னர் சீரியல்களின் கதாசிரியர்கள் வீ.சேகரின் கதைகளை கொத்து புரோட்டா போட்டு எடுத்துக் கொண்டதால் இதற்கு மேல் தியேட்டர்களில் குடும்பக் கலாட்டாவை பார்க்க மக்களும் வராததால் அப்படியே ஒதுங்கிக் கொண்டார். இப்போதும் டிவி சீரியல் கதைகளின் மூலக் கரு, ஏதாவது ஒரு வீ.சேகர் படத்தின் கதையாகத்தான் இருக்கும்..!
இப்போது தனது மகன் கார்ல்மார்க்ஸை ஹீரோவாக்கி ‘சரவணப் பொய்கை’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். இதில் அருந்ததி ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், விவேக், கருணாஸ், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படம் பற்றி வீ.சேகர் பேசும்போது. “நாம் எல்லோரும் குடும்பதிற்காகத்தான் வாழ்கிறோம்.. குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறோம்! எதிர்கால சிந்தனையில்கூட குடும்பதிற்காக மட்டுமே யோசிக்கிறோம். ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிறபோது அது தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்துதான் மக்கள் என் படங்களை வெற்றி பெற செய்தார்கள்…
இதுவரை குடும்ப படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து எடுத்திருக்கும் காதல் கதைதான் இந்த ‘சரவண பொய்கை.’ இன்றைய இளைய தலைமுறையினரும் ரசிக்கும் விதமாக இதை எடுத்திருக்கிறோம்..!
இதுவரை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக நான் இயக்கிய 17 படங்களுக்குமே ‘U’ சர்டிபிகேட் படங்கள்தான். ‘சரவண பொய்கை’ படத்திற்கும் ஒரு கட்கூட இல்லாமல் ‘U’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. இந்த படம் காதல், காமெடி படமாக உருவாகி உள்ளது. விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார் வீ.சேகர்.