தற்போதைய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர்-நடிகைகள் நேற்று புதுக்கோட்டை வந்தனர்.
அவர்கள் புதுக்கோட்டை நாடக நடிகர் சங்கத்தினரை சந்தித்து அவர்களிடம் ஆதரவு திரட்டினர். இதில் நடிகர்கள் ராதாரவி, ராம்கி, நடிகைகள் ராதிகா சரத்குமார், பாத்திமா பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, “அடுத்த மாதம் 18-ம் தேதி ஜனநாயக முறைப்படி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்ட பிரசாரம் செய்து வருகிறோம். தற்போது புதுக்கோட்டை வந்துள்ளோம். புதுக்கோட்டைக்கு நான் வருவது புதிதல்ல. இங்கு நாடக நடிகர்களுக்காக எனது சொந்த செலவில் புதிய கட்டிடம் கட்டி கொடுத்துள்ளேன்.
எங்களுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லலாம். ஆனால் அவர்கள் அதை விட்டு விட்டு எங்கள் மீது வேண்டும் என்றே ஊழல் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். அதற்காக விஷால் மற்றும் எஸ்.வி.சேகர் மீது நாங்கள் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளோம்.
சங்கத்தின் ஒருமைப்பாட்டை குலைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தேவையற்ற கருத்துகளை கூறி வருகின்றனர். நாங்கள் முறைகேடு, ஊழல் செய்ததற்கு எந்த ஆதாரத்தையாவது அவர்களால் கூற முடியுமா..? எதையும் சந்திக்க நாங்கள் தயார். இந்த தேர்தலில் எங்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது.
நடிகர் ரஜினிகாந்திடம் நாங்கள் ஆதரவு கேட்டுள்ளோம். அதற்காக அவருடன் போட்டோ எடுத்து பத்திரிகையில் கொடுக்க வேண்டும் என்று அவசியம் எங்களுக்கு இல்லை.
நடிகர் சங்கத்தில் இருந்து நாடக நடிகர் சங்கத்தை நீக்க வேண்டும் என்று சொன்னவர்தான் நாசர்.
நடிகர் சங்கத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிரந்தர உறுப்பினர் ஆவார். அவரது வாக்கு எங்கள் அணிக்குதான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் செயல்பாடுகளை முதல்வர் கவனித்து வருகிறார். திருச்சியில், வருங்கால தமிழக முதல்-அமைச்சரே என்று என் பெயரில் போஸ்டர் ஒட்டப் போவதாக கூறுகின்றனர். இது என்னையும், முதல்-அமைச்சரையும் பிரிப்பதற்காகத்தான்..” என்று கூறினார்.