தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஊழல் முறைகேடுகளை செய்த்தாக சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் மூவரையும் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தனது தரப்பு பதிலை தெரிவிப்பதற்காக நேற்று தி.நகரில் இருக்கும் தனது சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் சரத்குமார்.
அப்போது அவர் பேசும்போது, “நடிகர் சங்கத்தில் இருந்து என்னையும், ராதாரவியையும், வாகை சந்திரசேகரையும் தற்காலிக நீக்கம் செய்து சங்கத்தின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இது சம்பந்தமான நோட்டீசு எதுவும், இதுவரை எனக்கு வரவில்லை.
தற்போதைய நிர்வாகிகள் தொடர்ந்து என் மீது காழ்ப்புணர்ச்சியோடு நடப்பதும், அவதூறு பரப்பி எனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதுமாக இருக்கிறார்கள்.
நடிகர் சங்க தேர்தலுக்கு முன்பு சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக எஸ்.பி.ஐ, சினிமாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் 120 கோடி ஊழல் நடந்துள்ளது என்றனர். அதன் பிறகு 60 கோடி முறைகேடு என்றார்கள். போலீசில் எங்கள் மீது அளித்த புகாரில் பல லட்சங்கள் ஊழல் நடந்துள்ளது என்று குறிப்பிட்டார்கள். இப்போது ரூ.1 கோடியே 60 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி எங்களை தற்காலிகமாக நீக்கி உள்ளனர்.
நான் மற்றவர்களுக்கு உதவி செய்துதான் வாழ்ந்து இருக்கிறேன். என் சொந்த பணத்தை நடிகர் சங்க வளர்ச்சிக்காக செலவிட்டு இருக்கிறேன். நடிகர் சங்கத்தில் ரூ.1 கோடியே 33 லட்சம் இருப்பு வைத்து விட்டுத்தான் வெளியேறினேன்.
தி.நகர் அபிபுல்லா சாலையில் 1.5 கோடி மதிப்புள்ள 600 சதுர அடி பிளாட் மற்றும் நடிகர் சங்கத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தின் பட்டா உள்பட அனைத்து அசல் பத்திரங்களையும் புதிய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளேன். இதன் மூலம் சங்க நிலத்தை விற்றுவிட்டதாக என் மீது அபாண்டமாக சுமத்திய பழியை பொய் என்று நிரூபித்து இருக்கிறேன்.
சங்கத்தின் வரவு செலவு கணக்குகள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டேன். கணக்குகளை ஆய்வு செய்ததாகவும், அதில் தவறு நடந்து உள்ளது என்றும் கூறுகிறார்கள். எந்த ஆடிட்டரை வைத்து அவை சரி பார்க்கப்பட்டன என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் வெளியிடவில்லை. கோர்ட்டிலும் என்னை தற்காலிக நீக்கம் செய்வதற்கான எண்ணம் இல்லை என்று பல முறை கூறி நீதிமன்றத்தை நம்ப வைத்தனர்.
தாம்பரம் அருகே நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக இருந்த 5 கிரவுண்டு நிலத்தை விற்று விட்டதாக குற்றம்சாட்டி உள்ளனர். 2 ஆயிரத்துக்கு 1990-ல் வாங்கப்பட்ட அந்த நிலத்தை செயற்குழு ஒப்புதல் அளித்ததன் பேரில் 9 லட்சத்துக்கு விற்று பணத்தை நடிகர் சங்கத்தில் சேர்த்தார் ராதாரவி.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட டெண்டர் விடாமல் ஒப்பந்தம் போட்டுவிட்டதாக எங்கள் மீது குற்றம் சாட்டி பதவிக்கு வந்தனர். அந்த ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்பேயே ரத்து செய்து விட்டேன். ஆனால் இப்போது இவர்கள் டெண்டர் விடாமல் ஒருவருக்கு கட்டிடம் கட்ட ஒப்பந்தம் கொடுத்து இருப்பதாக கோர்ட்டில் வழக்கு தாக்கலாகி இருக்கிறது.
நடிகர் சங்கத்தின் பொதுக் குழு இந்த மாதம் இறுதியில் கூட்டப்பட வேண்டும். அந்த கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு சங்கத்தில் இருந்து நீக்கி இருப்பதாக கருதுகிறோம். நாங்கள் இப்போதும் நிர்வாகத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாத சாதாரண உறுப்பினர்கள்தான்.
எங்களை நீக்கியதன் மூலம் நாங்கள் சினிமாவில் நடிப்பதை தடுக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், நாங்கள் நுகர்வோர் கோர்ட்டுக்கு போவோம்.
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுடன் நல்லிணக்கமாக இருக்க வேண்டும், எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருக்கிறது. ஆனால் புதிய நிர்வாகிகள் தொடர்ந்து என் மீது காழ்ப்புணர்வு காட்டுவதும், களங்கம் விளைவிப்பதுமாக இருக்கிறார்கள். அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வேன். இப்போது நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக என்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்..” என்றார் சரத்குமார்.
ஓகே.. அடுத்த ரவுண்டு ஆரம்பிக்குது..! நமக்கும் நல்லா பொழுது போவும்..!









