பாரதிராஜா அப்பாவாக நடிக்கும் ‘குரங்கு பொம்மை’

பாரதிராஜா அப்பாவாக நடிக்கும் ‘குரங்கு பொம்மை’

ஸ்ரேயா ஸ்ரீமூவிஸ் LLP தயாரிப்பில் ‘நாளைய இயக்குநர்’ தொடரில் சிறந்த குறும்பட இயக்குநர் விருதைப் பெற்றிருக்கும் இயக்குநர் நித்திலன், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘குரங்கு பொம்மை’.

இந்தப் படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகனாக விதார்த்கும், நாயகியாக டெல்னா டேவிஸும் நடித்திருக்கிறார்கள். மேலும் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - N.S.உதயகுமார், இசை - B.அஜனீஷ் லோக்நாத், படத் தொகுப்பு - அபினவ் சுந்தர் நாயக், வசனம் - மடோன் அஸ்வின், பாடல்கள் - நா.முத்துக்குமார், நடனம் – ராதிகா, நிர்வாகத் தொடர்பு - M.கண்ணன், சண்டை பயிற்சி - மிராக்கல் மைக்கேல், தயாரிப்பு  - ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP, இயக்கம்  - நித்திலன்.

இப்படம் குறித்து இயக்குநர் நித்திலன் கூறும்போது, “இந்தப் படம் என்னுடைய முதல் குறும் படமான ‘புதிர்’ தாக்கத்தின் காரணமாக உருவானது.

மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக் கொண்டேயிருக்கும். அதன் குறியீடுதான் இந்த ‘குரங்கு பொம்மை’ படம். ஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக் கருவாக வைத்துதான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.

நடிகர் விதார்த் என்னுடைய ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற குறும்படத்தை பார்த்து என்னை அழைத்து பாராட்டிவிட்டு ‘நாம் இருவரும் சேர்ந்த ஒரு படம் பண்ணலாம்’ என்றார். அதைக் கேட்டு சந்தோஷமாகி ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதையை கூறினேன். அவரும் கதையைக் கேட்டுவிட்டு ‘நல்லா இருக்கு. இதையே செய்வோம்’ என்று ஒத்துக் கொண்டதால் படத்தைத் துவக்கிவிட்டோம்.

என்னுடைய குறும்படத்தை பாரதிராஜா சார் ஏற்கனவே பார்த்து பாராட்டியிருக்கிறார். அந்த பழக்கத்தின் காரணமாக அவரை அணுக நினைத்தேன். ஆனால் முதலில் அவரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. தயங்கினேன். பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து கதையை சொன்னேன். கேட்டவுடனே ‘நன்றாக இருக்கிறது’ என்றார். அவர் ‘சரி’ என்று சொன்ன பிறகுதான் எனக்கு படம் இயக்கும் தைரியமே வந்தது.

இதில் விதார்த்துக்கு அப்பாவாக ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா நடித்திருக்கிறார். வித்தார்த்துக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் என்ற கேரளா பெண் நடித்திருக்கிறார்.  அப்பா, மகனுக்கும் இடையேயான பாசத்தையும் இதில் அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு 59 நாட்கள் நடந்த்து. சென்னையை சுற்றியேதான் படம் நகரும்.

படத்தில் மொத்தம் 3 பாடல்கள். இதில் அமரர் நா.முத்துக்குமார் 2 பாடல்களை எழுதி இருக்கிறார். ‘பீச்சு காத்து பார்சல் என்ன வெல...’ என்ற பாடலும், ‘அண்ணமாரே அய்யாமாரே...’ என்ற பாடலும் நா.முத்துக்குமார் எழுதியவை. இப்படத்தின் மூலம் அஜனீஷ் லோக்நாத் என்பவர் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது..." என்றார்.