full screen background image

“சென்சார் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டார்கள்” – நடிகர் விஷால் பகிரங்கக் குற்றச்சாட்டு!

“சென்சார் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டார்கள்” – நடிகர் விஷால் பகிரங்கக் குற்றச்சாட்டு!

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு சென்சார் சான்றிதழ் வழங்க தன்னிடம் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. டைம் ட்ராவல் நிகழ்வை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விஷாலுக்கு சில ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது.

இதனிடையே இந்த ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இந்தி பதிப்பு இன்றைக்கு வெளியாகியுள்ளது. இந்த ஹிந்தி பதிப்பிற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டு அலுவலகத்தில் படத்தைத் திரையிட்டுக் காட்டுவதற்கும், சென்சார் சான்றிதழ் பெறுவதற்காகவும் தன்னிடம் ஆறரை லட்சம் ரூபாய் லஞ்சமாக சிலர் பெற்றுள்ளதாக நடிகர் விஷால்  புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும் விஷால், “வெள்ளித்திரையில் ஊழல் காட்டப்படுவது பரவாயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் அதனை ஜீரணிக்க முடியாது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் ஊழல் நடப்பது அதைவிட மோசமானது.

மும்பை திரைப்பட தணிக்கை (CBFC) அலுவலகத்தில் எனது திரைப்படம் மார்க் ஆண்டனி இந்தி பதிப்புக்காக சென்சார் போர்டுக்கு 6.5 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.

இதை மகாராஷ்டிராவின் மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் எனது மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதை செய்வது எனக்காக அல்ல. எதிர்கால தயாரிப்பாளர்களுக்காக. நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊழலுக்கு போவதா? அனைவரும் கேட்கும் வகையில் ஆதாரம். எப்போதும் போல் உண்மை வெல்லும் என்று நம்புகிறேன்..” என்று கூறியுள்ளார்.

படத்தை பார்ப்பதற்காக முதலில் 3 லட்ச ரூபாயும், பார்த்துவிட்டு சான்றளிப்பதற்கு 3.5 லட்ச ரூபாய் கேட்டதாகவும் கூறியிருந்த விஷால் அதற்கான ஆதாரங்களையும் சமர்பித்திருந்தார்.

இந்நிலையில், சென்சார் போர்டு தன்னிடம் லஞ்சம் கேட்டு வாங்கியதாக விஷால் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், ஒன்றிய அரசு தற்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி இந்த விஷயத்தில் யாரேனும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் “திரைப்பட தணிக்கை அலுவலகத்தில் ஊழல் நடந்திருப்பதாக விஷால் கூறியுள்ள குற்றச்சாட்டு துரதிஷ்டவசமானது. இது போன்ற ஊழல் சம்பவங்களில் ஒன்றிய அரசு 0 சதவீதம் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கை எடுக்கும். யாரேனும் இது போன்று ஊழல் செயலில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் மூத்த அதிகாரி ஒருவர் இன்றே மும்பைக்கு அனுப்பப்படுவார்” என்று கூறப்பட்டுள்ளது.

“ஒன்றிய தணிக்கை துறையால் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டு இது போன்று வேறு ஏதேனும் சம்பவங்களை சந்தித்திருந்தால் அது தொடர்பான தகவல்களை வழங்கி ஒன்றிய அரசுக்கு போதுமான ஒத்துழைப்பை வழங்குமாறும்” ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Our Score