“என் ரசிகர்களுக்காகத்தான் ஹீரோவா நடிக்கிறேன்”-சந்தானத்தின் ‘ஐஸ்’ பேச்சு..!

“என் ரசிகர்களுக்காகத்தான் ஹீரோவா நடிக்கிறேன்”-சந்தானத்தின் ‘ஐஸ்’ பேச்சு..!

தான் ஒரு சுயம்பு என்று தன்னைத்தானே பெரிய ஆளாக நினைத்துக் கொள்பவர்கள் பட்டியலில் சந்தானமும் சேர்ந்துவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றியது நேற்று நடைபெற்ற வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் அவர் பேசிய பேச்சைக் கேட்டவுடன்..!.

“நான் தனியாத்தான் இந்த இண்டஸ்ட்ரிக்குள்ள வந்தேன். இப்பவும் தனியாத்தான் பண்றேன்.. எனக்கு யார் துணையும் தேவையில்லை.. ‘ஸார் ரெண்டு பேர் சேர்ந்து நடிக்கலாம்.. அவர்கூட நடிக்கலாம்.. இவர்கூட நடிங்கலேன்னெ’ல்லாம் சொன்னாங்க. ‘எனக்குத் தேவையில்லை’ன்னு சொல்லிட்டேன். நான் தனியாவே பண்ணிட்டுப் போறனே..?  எவ்ளோ காலத்துக்குத்தான் இன்னொரு ஹீரோவோட லவ்வுக்கு நாம ஹெல்ப் பண்ற மாதிரியே நடிக்கறது..? நம்மளே ஹீரோவா நடிப்போம்னு இதுல இறங்கிட்டேன்.

இந்தப் படமே என்னோட ரசிகர்களுக்காத்தான் நடிக்கிறேன். நான் விஜய் டிவியில ‘லொள்ளு சபா’ நடத்திட்டு இருந்த காலத்திலிருந்தே ‘தலைவா நீங்க தனி ஹீரோவா நடிங்க’ன்னு எங்கிட்ட கேட்டுக்கிட்டேயிருந்தாங்க என்னோட ரசிகர்கள். எனக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ வர்றவரைக்கும் காத்திருப்போம்னுதான் இதுநாள்வரைக்கும் காத்திருந்தேன். இப்ப அது வந்திருக்கு.

என் வீடு இருக்கிற பொழிச்சலுர்ல நிறைய பசங்க எங்கிட்ட வந்து ‘மச்சான் அவன் என்னை கலாய்ச்சுட்டான். வாடா’ன்னு சண்டைபோட கூப்பிடுவானுங்க. அப்பல்லாம் நான் அவனுங்ககிட்ட சொல்லுவேன். ‘உனக்கு தில்லு இருந்தா தனியா போய் மோது. எதுக்கு இன்னொருத்தனை எதிர்பார்க்கிறே’ன்னு..? அதே மாதிரித்தான், இப்பவும் நான் என்னை நம்பித்தான், என் ரசிகர்களை நம்பித்தான்… இந்த படத்த தயாரிச்சு, நடிச்சிருக்கேன்.

‘மரியாதை ராமண்ணா’ படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணனும்னு முடிவு செஞ்சு அந்தப் படத்தைத் தயாரிச்ச பி.வி.பி. கம்பெனில பேசினேன். அவங்க யாரை வச்சு பண்ணப் போறீங்கன்னு கேட்டாங்க. டைரக்ஷனை ஸ்ரீநாத் பண்ணிக் கொடுப்பாருண்ணேன்.. ஹீரோயின் யாருன்னு கேட்டாங்க. சொன்னேன். ஒளிப்பதிவாளர் யாருன்னாங்க.. சொன்னேன்… மியூஸிக் யாருன்னு கேட்டாங்க.. சித்தார்த் விபின்னு சொன்னேன். எடிட்டர் யாருன்னாங்க. சாய்காந்த்ன்னு சொன்னேன். இவ்ளோ பேரை நாங்க கேள்விப்பட்டதே இல்லையேன்னாங்க.. எனக்கு புதுமுகமே போதும்னு நினைச்சேன். இவங்களை வைச்சே ஒரு ஹிட் படம் கொடுக்க முடியும்னு நினைச்சேன். என்னை மட்டுமே நம்பி களத்துல இறங்கியிருக்கேன். என்னை நம்புங்கன்னு சொன்னேன். நம்பிட்டாங்க.. இதோ படத்தையும் நல்லபடியா முடிச்சிட்டேன்..” என்றார் மிகுந்த தன்னம்பிக்கையோடு..!

பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா இந்தப் படம் ‘மரியாதை ராமண்ணா’ என்ற படத்தின் கதையை நம்பித்தான் எடுக்கப்பட்டிருக்கிறதே தவிர, சந்தானத்தின் நடிப்பையும், அவரது ரசிகர்களையும் நம்பி எடுக்கப்படவில்லை என்பதை சந்தானம் அடுத்தப் படத்தில், தனி ஹீரோவாக நடிக்கும்போது மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடிக்க அழைப்பு வந்தும் அதை தான் மறுத்துவிட்டதை மறைமுகமாகச் சொல்லியிருக்கும் சந்தானம், இதன் மூலம் அவருக்குச் சவாலும்விட்டிருக்கிறார்.

தன் ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவே தான் ஹீரோவாக நடிப்பதாக சந்தானம் சொல்லியிருப்பதை பொழிச்சலூர் தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவன்கூட நம்ப மாட்டான்.. “இங்கே நீயும் ஹீரோன்னா.. நானும் ஹீரோதான்.. வர்றியா வா.. ஒண்டிக்கு ஒண்டி பார்த்திருவோம்..” என்று சிவகார்த்திகேயனோடு தொடை தட்டி களம் இறங்கியிருக்கிறார் சந்தானம். இந்த இருவரின் சுவாரசிய மோதலில், தயாரிப்பாளர்கள் பணால் ஆகாமல் இருந்தே போதும்..!

Our Score