நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ஷோ பீப்பிள் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். மேலும், கீதிகா, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், கெளதம் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை தீபக் குமார் பதி கையாள, ஆஃப்ரோ இசையமைக்கிறார். பரத் படத் தொகுப்புக்கும், ஏ.ஆர்.மோகன் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்றுள்ளனர். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், ‘டிடி நெக்ஸ்ட் லெவெல்’ திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.
சந்தானத்தின் சூப்பர் ஹிட் படமான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் நான்காவது வெர்ஷனாக இந்தப் படம் வெளி வந்திருக்கிறது.
இப்போது தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என்று சகல தரப்பினருக்கும் மிகப் பெரிய எதிரிகளாக இருப்பவர்கள் சினிமா விமர்சகர்கள்தான்.
ஒரு படம் வெளியான நாள் அன்று காலை ஒரு ஷோ முடிவதற்கு முன்பாகவே அந்தப் படத்தின் விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் கொத்து புரோட்டா போடுவதைப் போல பலரும் திட்டியும், பழித்தும், பேசியும் எழுதி வருவதால் பல திரைப்படங்கள் தோல்வியை தழுவி விட்டதாக தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
ஆனால் விமர்சகர்களோ, “நல்ல படம் எடுத்தால் நாங்கள் ஏன் திட்ட போகிறோம்? நல்ல படம் எடுக்கத் தெரியாமல் நீங்கள் சோதனையான படத்தை கொடுத்துவிட்டு அது சூப்பர் ஹிட் திரைப்படம் என்று பொய் சொல்வதை நாங்கள் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” என்று கேட்கிறார்கள்.
தயாரிப்பாளர்களோ, “இப்போது இருக்கின்ற இக்கட்டான சூழலில் ஓரளவுக்கு ஒரு நல்ல படத்தை பார்ப்பதுபோல எடுத்துக் கொடுத்திருக்கிறோம். அதையும் நன்றாக இல்லை என்று சொல்லி தியேட்டருக்கு வந்து கொண்டிருக்கின்ற 50 பேர் கொண்ட கூட்டத்தையே பத்து பேராக குறைத்துவிடுவதால் சின்ன பட்ஜெட், மீடியம் பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அனைவரும் படுதோல்வியை சந்திக்கிறார்கள்…” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்தப் பிரச்சனை இப்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல… இந்தியா முழுவதும் இருக்கும் பல்வேறு மொழி திரைப்படங்களையும் பாதித்து வருகிறது.
அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் சினிமா விமர்சகர்ளை ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்த காமெடி நடிகர் சந்தானம் தன்னுடைய உள் மனதில் தான் நினைத்திருந்த ஒரு கொடூரமான எண்ணத்தை இந்தப் படத்தின் மூலமாக நிறைவேற்றி இருக்கிறார்.
தயாரிப்பாளரான செல்வராகவன் ஒரு படம் எடுத்து அதை தியேட்டருக்கு கொண்டு வந்து விமர்சகர்ளால் அந்தப் படம் கிழிக்கப்பட்டு படுதோல்வி அடைந்து அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளினால் கொலையும் செய்யப்பட்டு இப்போது ஒரு பழைய பாழடைந்த சினிமா தியேட்டரில் ஆவியாக உலவிக் கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த சினிமா விமர்சகரான கிருஷ்ணமூர்த்தி என்ற கிஸ்ஸா தன்னுடைய அம்மா கஸ்தூரி, அப்பா நிழல்கள் ரவி, தங்கை யாஷிகா ஆனந்த் இவர்களுடன் ஒரு சின்ன வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இவரை காலி செய்ய வேண்டும் என்று நினைக்கும் செல்வராகவன் அண்ட் டீம் தந்திரமாக ஒரு வலை வீசி சந்தானத்தின் மொத்தக் குடும்பத்தையும் பேய்கள் உலாவும் அந்த தியேட்டருக்குள் அழைத்து வருகிறார்கள்.
தன் குடும்பத்தினர் அந்த பேய்களின் தியேட்டருக்குள் போய்விட்டார்கள் என்பதை அறிந்து சந்தனமும் தியேட்டர்கள் உள்ளே நுழைய அதற்குள்ளாக அவருடைய குடும்பத்தை எடுத்து திரைப்படத்தின் கதை மாந்தர்களாக மாற்றி ஸ்கிரீனுக்குள் அனுப்பி விடுகிறார் செல்வராகவன்.
கடைசியாக வரும் சந்தானத்தையும் ஒரு சினிமா எடுக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதை எடுத்து ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அந்த கஷ்டத்தை நீ அனுபவிச்சு பாரு..! அங்க என்ன நடக்குதுன்னு பாரு! அதுதான் உனக்கு தண்டனை..” என்று சொல்லி சினிமாவுக்குள் சினிமாவாக, ஸ்கிரீனுக்குள் ஸ்கிரீனாக சந்தானத்தையும் அந்தப் படத்திற்குள் தள்ளி விடுகிறார்.
இப்போது சந்தானம் கண்விழித்துப் பார்க்கும் பொழுது அவர் ஒரு மிகப் பெரிய நட்சத்திர கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அந்த கப்பலில் இருக்கும் சந்தானத்தின் குடும்பம் சந்தானத்தை யார் என்று கேட்கிறார்கள்.
சந்தானத்தின் அப்பாவான நிழல்கள் ரவி அந்தக் கப்பலின் கேப்டனாக இருக்கிறார். சந்தானத்தின் அம்மா கஸ்தூரி ஒரு தெலுங்கு பேசும் பெண்ணாக சுற்றுலா பயணியாக வந்திருக்கிறார். யாஷிகா ஆனந்தும் ஒரு சுற்றுலா பயணியாக வந்திருக்கிறார். அதே கப்பலில் பயணம் செய்யும் இன்வெஸ்டிகேஷன் ஆபிஸரான கௌதம் மேனனை யாஷிகா ஒருதலையாய்க் காதலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் அந்த கப்பலுக்குள்ளே செல்வராகவன் அனுப்பிய ஆவி மனிதர்கள் சந்தானத்தின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுவதற்காக அல்லலோகப்படுகிறார் சந்தானம்.
அந்த நேரத்தில் அவர்களை காப்பாற்றினாலும் அதற்குப் பிறகு கப்பல் ஓரிடத்தில் நங்கூரமிட்டு நின்றுவிட அருகில் இருக்கும் ஒரு தீவில் இரண்டு நாட்கள் வசிக்கலாம் என்று சொல்லி சந்தானத்தின் குடும்பத்தை மட்டும் அழைத்துக் கொண்டு கௌதம் மேனனும் அந்த தீவுக்குள் பிரவேசிக்கிறார்கள்.
அந்த தீவுக்குள் இருக்கும் ஒரு பெரிய பங்களாவில் மேலும் சில பேய்கள் ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்க அவர்களும் சந்தானத்தின் குடும்பத்தை கொலை செய்வதற்கு முயல்கிறார்கள்.
இப்போது சந்தானம் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திலும், தான் திரும்பவும் நிஜ வாழ்க்கைக்கு போக வேண்டிய விருப்பத்திலும் இருக்கிறார்.
இந்தப் பிரச்சனைகளில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார்? தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்?.. மீண்டும் எப்படி இப்போதைய நிஜ உலகத்திற்கு திரும்பி வருகிறார்?.. என்பதுதான் இந்தப் படத்தின் கதை சுருக்கம்.
சந்தானம் வழக்கமான தன்னுடைய நடிப்பைக் காட்டிலும் இந்தப் படத்தில் கொஞ்சம் கூடுதலாகவே வித்தியாசமான மேனரிசங்களை எல்லாம் செய்து காட்டியிருக்கிறார். நடித்திருக்கிறார்.
ஆனால் அவர் பேசுகின்ற மாடுலேஷன், டயலாக் டெலிவரி எல்லாமே மிக மிக வேகமாக இருப்பதால் பல இடங்களில் அவர் பேசுகின்ற வசனம் நமக்கே புரியவில்லை. தியேட்டரில முன் வரிசையில் இருப்பவர்களுக்கு நிச்சயமாக புரிய வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு வசனங்களை மூடி மறைக்கும் அளவுக்கு பேசியிருக்கிறார்.. இதுதான் படத்திற்கு மிகப்பெரிய டேமேஜ் ஆகவும் அமைந்திருக்கிறது..
இடையிடையே அவ்வப்போது உருவக் கேலிகளையையும் செய்து கொண்டு அனைவரையும் கலாய்த்துக் கொண்டு படம் நெடுகிலும் சந்தானம் என்ற ஒரு மனிதன் இந்தப் படம் முழுவதையும் தானே தூக்கி சமாளித்து இருக்கிறார்.
சந்தானத்துக்கு அடுத்து மொட்டை ராஜேந்திரன்தான் இந்தப் படத்தின் கதாநாயகன் என்றே சொல்லலாம். இடைவெளிக்கு பின்பான பல காட்சிகளில் அவர் ஒருவரால்தான் நாமும் அவ்வப்பொழுது சிரிக்க முடிந்திருக்கிறது.
படத்தில் நாயகியான கீதிகா இடைவேளைக்கு முன்பும், பின்பும் சிறிது நேரமே ஹீரோயினாக வலம் வருகிறார். மீதமான காட்சிகளில் பேயாக வந்து பயமுறுத்தியிருப்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை..!
நிழல்கள் ரவி சென்ற படம் போலவே இந்தப் படத்திலும் காமெடியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தன்னாலான நடிப்பை காண்பித்து இருக்கிறார். ஆனால், அவரை வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் அந்த கக்கூஸ் காமெடி உவ்வே ரகம்! ஜீரணிக்கவே முடியவில்லை. அருவருப்பாக இருக்கிறது. அதுக்கு பதில் வேறு ஏதாவது யோசனை செய்திருக்கலாம்.
“கவர்ச்சியான மாமி நான்” என்று கஸ்தூரி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பொங்கி இருந்தார். ஆனாலும், அந்தக் கவர்ச்சியை வழக்கம்போல தொடைகளைக் காட்டித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு கொஞ்சம் தெலுங்கில் மாடலாடி ஓரளவுக்கு நடித்திருக்கிறார்.
இவருடைய மகளாக நடித்திருக்கும் யாஷிகா ஆனந்கும், இன்னொரு பக்கம் தன்னால் முடிந்த அளவுக்கான கொஞ்சம் கவர்ச்சியை காட்டி அதற்காகவே வரக் கூடிய சின்ன பசங்களை கவர்ந்து இழுக்கிறார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் பக்கா ஜென்டில்மேனான கௌதம் மேனனை இந்தப் படத்தில் காமெடியாக்கியிருக்கிறார். அவரும் மின்னலே படத்தின் பாடலை பாடியபடி கடற்கரையில் யாஷிகாவை பின்னால் துரத்துவது போல ஒரு காட்சி அமைத்து சிச்சுவேஷன் காமெடியில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார். அவர் கடைசிவரையில் இந்தப் படத்தில் வருவது நிச்சயம் எதிர்பாராதது.
படத்தில் மற்ற நடிகர்கள், பேய்களாக நடித்தவர்கள், பேய் மனிதர்களாக நடித்தவர்கள் என்று அனைவருமே மிக சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள், இந்த படத்தில் நடிப்பு என்பது அத்தனை பேரிடமிருந்து மிக சிறப்பாக வரவழைக்கப்பட்டிருக்கிறது, ஆனால், சிரிப்பு வருவதற்குத்தான் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
தீபக்குமார் பதியின் ஒளிப்பதிவு அட்டகாசம் என்று சொல்லலாம். அந்தக் கப்பல் காட்சிகளை எல்லாம் அவ்வளவு அழகாக படமாக்கி இருக்கிறார்கள். ட்ரோன் கட்சிகளாகட்டும், கப்பலுக்குள் நடைபெறும் சண்டை காட்சிகள் ஆகட்டும்… அதற்கு பிறகு அந்த தீவுக்குள் நடைபெறும் காட்சிகளிலும் கேமராவின் பங்களிப்பு மிக அபாரம். கேமராவின் சிறப்பான பங்களிப்பினால்தான் இந்த படத்தின் வேகத்தை நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.
படத்தில் கொண்டாடப்பட வேண்டிய பாடலாக இருந்திருக்க வேண்டிய “கோவிந்தா” என்ற பாடலை அரசியல் ரீதியாக பல பிரச்சினைகளை செய்து நீக்க வைத்து விட்டார்கள். அதனால் அந்தப் பாடலை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். மற்றபடி படத்தின் பின்னணி இசை காமெடியை வலிந்து வரவழைத்திருக்கிறது.
இவ்வளவு அழகான சஸ்பென்ஸ், திரில்லர் கிரைம் கதையை தேடுதல், விரட்டுதல், பேய்களின் அட்டூழியம், ஆக்ரோஷம், தப்பித்தல் என்கின்ற பாணியிலான கதையில் படத் தொகுப்பாளர் மிகவும் பிரயத்தனப்பட்டு தன்னுடைய திறமையைக் காட்டி படத் தொகுப்பு செய்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
டிடி வரிசையில் இது நான்காவது படம் என்றாலும் டிடியின் முந்தைய வெர்ஷன்களில் வெளிவந்த நகைச்சுவையைபோல் இந்தப் படம் தரவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான ஒரு விஷயம்.
நகைச்சுவைதான் சந்தானத்தின் குறிக்கோள் என்றாலும் இந்தப் படத்தில் நகைச்சுவை ததும்பும் அளவுக்கு காட்சிகளும், வசனங்களும், திரைக்கதையும் இல்லாதது ரொம்பவும் வருத்தமான ஒரு விஷயம். சண்டை காட்சிகளில் நிச்சயம் காமெடியை கொண்டு வர முடியாது. காமெடிக்கான சிச்சுவேஷன் இதில் நிறைய இருந்தும் அதை வெளிப்படுத்த இயக்குநரும், நடிகர்களும் தவறிவிட்டார்கள் என்பதும் வருத்தமான ஒரு விஷயம்.
சந்தானம் இனிமேல் அடுத்தடுத்த படங்களில் அதிகமான காமெடியை மட்டுமே மனதில் வைத்து தன்னுடைய பேச்சையும் கொஞ்சம் குறைத்து, அல்லது பேசினாலும் மற்றவர்களுக்கு எளிதில் புரியும்படியாக செய்து படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
RATING : 3.5 / 5









