‘சங்கத்தமிழன்’ – சினிமா விமர்சனம்

‘சங்கத்தமிழன்’ – சினிமா விமர்சனம்

‘பாதாள பைரவி’, ‘மாயா பஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த – ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘நம் நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’, ‘பைரவா’ உட்பட 60-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பழம் பெரும் பட நிறுவனம் பி.நாகி ரெட்டியாரின் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’.

இத்தகைய புகழ் பெற்ற விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இது இவருடைய 6-வது தயாரிப்பாகும்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக  நடிகை ராஷி கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ்  இருவரும் நடித்துள்ளனர்.

‘சுந்தர பாண்டியன்’, ‘ரம்மி’ ஆகிய படங்களுக்கு பிறகு  நடிகர் / காமெடியன் சூரி 3- வது முறையாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இந்தப் படத்தில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், ஸ்ரீரஞ்சனி, மாரிமுத்து, கல்லூரி வினோத், லல்லு, ஸ்ரீமன், மைம் கோபி, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் - விஜய் சந்தர், தயாரிப்பு - பி.பாரதி ரெட்டி, ஒளிப்பதிவு   - R.வேல்ராஜ், படத் தொகுப்பு - பிரவீன் K.L., இசை – விவேக், மெர்வின், சண்டை இயக்கம் - அனல் அரசு, கலை இயக்குநர் – பிரபாகர், நிர்வாக தயாரிப்பு - ரவிச்சந்திரன், குமரன், மக்கள் தொடர்பு - ரியாஸ் கே.அஹமது. 

விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் இயக்குநரான விஜய் சந்தர், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதி, இயக்குநர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 'சங்கத் தமிழன்' திரைப்படத்தை லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதியை மாஸ் ஹீரோவாக காட்ட நினைத்த கொடுமைக்குள் அவரே பலியாகியிருப்பது வருத்தத்திற்குரிய விஷயம். கதையின் நாயகனாகவே நடித்துக் கொண்டிருந்தவரை வெறுமனே ஹீரோவாக நடிக்க வைத்திருக்கிறார்கள். கடைசியாக பலியானது என்னவோ விஜய் சேதுபதிதான்.

விக்ரம், ஜோதிகா நடிப்பில் இயக்குநர் தரணியின் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘தூள்’ படத்தின் கதையைத்தான் அப்படி, இப்படி என்று ‘பட்டி’ பார்த்து ‘டிங்கரிங்’ செய்து ‘அட்லீ’ பாணியில் இந்த ‘சங்கத் தமிழனாக’ கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய் சந்தர். தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு அட்லீ போதாதா.. இன்னொருத்தரும் வேண்டுமா.. கொடுமை..!

தேனி மாவட்டத்தில் இருக்கும் மருதமங்கலம் என்னும் கிராமத்தில் தாமிரத் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடுகிறார் கார்ப்பரேட் முதலையான ரவி கிஷன். ஆனால் இந்தத் தொழிற்சாலை வந்தால் ஊரின் பசுமை கெட்டுவிடும். விளைநிலங்கள் அழிந்துபோகும். மக்களுக்கு உடல் நலக் குறைவுகள் ஏற்படும் என்று சொல்லி மக்களை ஒன்று திரட்டி எதிர்க்கிறார் நாசர்.

இந்த ரவி கிஷனுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார் நாசரின் நண்பரும் உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான அசுதோஷ் ராணா. இதனால் நாசருக்கும், ராணாவுக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. அடுத்தத் தேர்தலில் நாசர், ராணாவை எதிர்த்து எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகிறார். தாமிரத் தொழிற்சாலை திட்டத்திற்கு கடும் முட்டுக்கடை போடுகிறார் நாசர்.

இதனால் கோபப்படும் ரவி கிஷன்-ராணா கூட்டணி நாசரின் குடும்பத்தையே அழித்தொழிக்கிறார்கள். இதில் நாசரின் மகனான விஜய் சேதுபதியும், அவரது முறைப் பெண்ணான நிவேதா பெத்துராஜூம் உயிரிழக்கிறார்கள்.

சில ஆண்டுகள் கழித்து சென்னையில் முருகன் என்னும் விஜய் சேதுபதியும், சூரியும் சினிமாவில் சேருவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் நாயகி ராஷி கண்ணாவை ஒரு பப்பில் சந்திக்கிறார் விஜய் சேதுபதி. வழக்கம்போல இருவருக்குள்ளும் சினிமா மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலே கடைசியாக காதலாக உருமாறுகிறது.

தனது தந்தையிடம் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தி வைக்கிறார் ராஷி. விஜய்யை பார்த்தவுடன் இது நாசரின் மகன் சங்கத் தமிழனாச்சே.. என்று சந்தேகப்படுகிறார் ரவி கிஷன். ஆனாலும், தனது மகளின் காதலை வைத்தே தனது திட்டத்தைச் செயல்படுத்த நினைக்கிறார்.

இதனால் ராஷியை திருமணம் செய்ய வேண்டுமெனில் தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி விஜய் சேதுபதியை தேனிக்கு  போய் அந்த ஊர் மக்களோடு மக்களாக நின்று தாமிரத் தொழிற்சாலை வேண்டும் என்று சொல்லி போராட்டம் நடத்தி ஊர் மக்களை திசை திருப்பச் சொல்கிறார் ரவி கிஷன்.

இப்போது விஜய் சேதுபதி செய்தது என்ன..? தாமிரத் தொழிற்சாலைக்கு ஆதரவாக விஜய் சேதுபதி பேசினாரா..? அல்லது எதிர்த்து பேசினாரா..? கல்யாணம் ஆனதா..? இல்லையா..? என்பதுதான் எளிதில் தெரிந்து கொள்ள முடிந்த இந்தக் கதையின் திரைக்கதை.

விஜய் சேதுபதியின் உடல் வாகுக்கேற்ற கேரக்டர் அல்ல இது. ஆனாலும் அடிதடியில் தொழில் நுட்பத்தின் உதவியுடன் தரை லோக்கல் அளவுக்கு இறங்கி ஆடியிருக்கிறார் விஜய் சேதுபதி.

சண்டை காட்சிகளில் பரபரவென இருந்தும், திரைக்கதையில் அழுத்தம் இல்லாததால் வசனக் காட்சிகளில் அவருக்கான ஸ்கோப் சரிவர இல்லாமல் போய்விட்டது. முற்பாதியில் சென்னையில் நடைபெறும் காட்சிகளில் சூரியின் உதவியுடன் காட்சிகளை வேகமாக நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறார் விஜய்.

ராஷி கண்ணாவுடனான ரொமான்ஸிலும், தேனியில் நிவேதா பெத்துராஜூடனான ரொமான்ஸிலும் அவருடைய உடல் எடையே பெருத்தத் தடையாக இருக்கிறது. அதனை கொஞ்சம் கவனித்தால் நல்லது.

கோபமும், ஆவேசமும் கொண்ட ‘சங்கத் தமிழனாக’ உருமும் விஜய் சேதுபதி, அதே சமயம் அதற்கு எதிர்மறையான கதாபாத்திரத்தில் ஜாலியான, புத்திசாலித்தனமான ‘முருகனாக’வும் கலக்கி இருக்கிறார். இருவருக்கும் வசனம் பேசுவதில் தொடங்கி, உடல் மொழிவரை கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். நிவேதா பெத்துராஜின் இறப்பைப் பார்த்து கண் கலங்கும் காட்சியில் கொஞ்சம் விஜய் சேதுபதி தெரிகிறார். அவ்வளவே..!

ராஷி கண்ணாவுக்கு அதிகம் வேலையில்லை. டூயட்டுகளுக்கும், கதையின் தொகுப்புகளுக்கு மட்டுமே உதவியிருக்கிரார். நிவேதா பெத்துராஜ் இருபது நிமிடங்கள் மட்டுமே களத்தில் நின்றிருக்கிறார். அதிலும் மரத்தை வெட்டுவதைத் தடுக்கும்போது உனக்குப் பின்னாடி யார் இருக்கா என்ற கேள்வியுடன் எண்ட்ரியாகும் சங்கத்தமிழனின் பில்டப்பிற்கு கொஞ்சம் உதவியிருக்கிறார்.

சூரிதான் முற்பாதியில் கொஞ்சம் கவர்ந்திழுத்தவர் பிற்பாதியில் ‘தொட்டி ஜெயா’ சிம்பு கணக்கில் சில கை தட்டல்களை அள்ளிச் செல்கிறார்.

வழக்கமான நல்ல மனிதராக நாசர், அதேபோல் வழக்கமான வில்லன்களாக அசுதோஷ் ராணா, ரவி கிஷன் என்று மூவரும் ஒற்றுமை பாராமல் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் இருக்கும் நட்சதத்திரப் பட்டாளமான நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன், மைம் கோபி, துளசி, ஸ்ரீரஞ்சனி உள்பட பலரும் கிடைத்த வாய்ப்பில் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜின் கேமரா தேனி மற்றும் குற்றாலத்தின் அழகை மேலும் அழகாக காட்டுகிறது. விவேக் மற்றும் மெர்வின் கூட்டணி இசையில்  பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். ஆனால், பின்னணி இசை பேரிரைச்சல் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். பல வசனக் காட்சிகளில் வசனம் காதில் விழுகாத வண்ணம் இசைக் கருவிகளின் சத்தம் தடுக்கிறது.

படத் தொகுப்பாளர் பிரவீன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டு நீளத்தைக் குறைத்திருக்கலாம். அனல் அரசுவின் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது. விஜய் சேதுபதியின் பில்டப்பிற்கேற்றவாறு சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’, ‘முருகன்’ கதாபாத்திரங்கள் இரண்டும் ஒன்றா.. அல்லது இரட்டை வேடமா..? என்பதில் ரசிகர்களுக்கு குழப்பமோ குழப்பம். ஊர்க் கோவில் திருவிழாவில் குண்டு வெடித்து மக்கள் பலர் பலியாகிறார்கள். ஆனால் இதனை காவல் துறையோ, அரசாங்கமோ கண்டு கொள்ளாமல் இருப்பதாகத் திரைக்கதை சொல்கிறது. இதெல்லாம் நடக்கிற காரியமா இயக்குநரே..!?

மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் உருவான படமாக இருந்தாலும், இதன் திரைக்கதை அரதப் பழசாக இருப்பதுதான் படத்தின் ஒட்டு மொத்த கவன ஈர்ப்பின்மைக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

பழைய கதையாக இருந்தாலும் புதிய குப்பியில் கொடுத்திருந்தால் ரசித்திருக்கலாம். பெரும் வெற்றியையும் தொட்டிருக்கும். இல்லாதபட்சத்தில்.. அதிலும் எளிதில் அனைவராலும் யூகிக்க முடியும் அளவுக்கான திரைக்கதையில் படத்தை உருவாக்கியிருப்பது சிரிப்பைத்தான் தருகிறது.

ஏற்கெனவே ‘வாலு’, ‘ஸ்கெட்ச்’ என்ற இரண்டு மெகா தோல்விப் படங்களைக் கொடுத்த இயக்குநர் மூன்றாவது படத்திலாவது சிரத்தையெடுத்து, திரைக்கதை, இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியிருக்கக் கூடாதா..?

நல்ல கதைக் களம், சிறந்த வசனங்கள் என்று இருந்தும் சொதப்பலான திரைக்கதையால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது..!