full screen background image

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது..!

கோவா திரைப்பட விழாவில் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது..!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய அரசின் திரைப்படத் துறை சார்பில் கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா இன்று துவங்கியது.  வரும் 28-ம் தேதிவரை 9 நாட்கள் இவ்விழா நடைபெற  உள்ளது. 

விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த்  உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும், நடிகர் அமிதாப்பச்சனும் இணைந்து ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினர்.

அப்போது பேசிய ரஜினிகாந்த்,  “கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் அமிதாப்பச்சன்ஜி, இந்த விருதினை வழங்கிய இந்திய அரசுக்கும் எனது நன்றிகள். இந்த விருதினைப் பெறுவதில் எனக்கு அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி. இந்த விருதை நான் நடித்த படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் உள்பட படங்களில் பணியாற்றிய அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்…” என்று ஆங்கிலத்தில் பேசிய ரஜினி, திடீரென்று தமிழில் “இதுக்கும் மேல எனது ரசிகர்கள்.. என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி… ஜெய்ஹிந்த்…” என்று சொல்லி முடித்தார்.

இந்த விழாவில் இந்திய சினிமா துறையில் பெரிய  பங்களிப்பு செய்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும்  விருதுகள் வழங்கப்படுகின்றன.

விழாவில் 76 நாடுகளை  சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.  26  இந்திய படங்களும் திரையிடப்பட உள்ளன.

தமிழ் படங்களின் வரிசையில் இயக்குநர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய திரைப்படங்கள்  திரையிடப்படுகின்றன.

Our Score