full screen background image

சண்டக்கோழி-2 – சினிமா விமர்சனம்

சண்டக்கோழி-2 – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரியின் சார்பில் நடிகர் விஷாலும், பென் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தவால் ஜெயந்திலால் கடா, அக்சய் ஜெயந்திலால் கடா ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர். லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் படத்தை வாங்கி உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.

படத்தில் விஷால் நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.

மேலும், ராஜ்கிரண், மாரிமுத்து, கஞ்சா கருப்பு, முனீஸ்காந்த், பிறைசூடன், ஞானசம்பந்தம், அ.ராமசாமி, கஜராஜ், ரவிமரியா, குமாரவடிவேலு, ஜோ மல்லூரி, குணாளன், அபு, ரவி, ரமேஷ் பெருமாள், நித்யா பெரியசாமி, ஹரீஷ் பெராடி, கபாலி விஸ்வநாத், சண்முகராஜன், தென்னவன், வின்னர் ராமச்சந்திரன், விஜய், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், சேதுபதி ஜெயச்சந்திரன், கனகசபாபதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – என்.லிங்குசாமி, இசை – யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு – கே.ஏ.சக்திவேல், வசனம் – எஸ்.ராமகிருஷ்ணன், பிருந்தா சாரதி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – சம்பத் திலக், பி.சேகர், தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன், சண்டை பயிற்சி – அனல் அரசு, நடனம் – ராஜூ சுந்தரம், பிருந்தா, உடைகள் வடிவமைப்பு – ஜெயலட்சுமி, ஷோபனா, டிசைன்ஸ் – கோபி பிரசன்னா, புகைப்படங்கள் – ஸ்டில்ஸ் விஜய், தயாரிப்பு நிர்வாகி – ஏ.ஆர்.சந்திரமோகன், நிர்வாகத் தயாரிப்பு – பிரவின் டேனியல்.

2005-ம் ஆண்டு நடிகர் விஷாலின் சொந்தத் தயாரிப்பில் வெளிவந்த ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

முதல் பாகத்தில் நாயகியாக இருந்த மீரா ஜாஸ்மின் மற்றும் அவரது குடும்பத்தை சுத்தமாக ஓரமாகத் தூக்கிப் போட்டுவிட்டு, விஷாலின் குடும்பத்தை மட்டுமே வைத்து இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதியிருக்கிறார்கள்.

முதல் பாகம் முடிந்த கையோடு வெளிநாட்டுக்கு வேலைக்காக போன விஷால் ஏழு வருடங்கள் கழித்து ஊர் திரும்புகிறார்.

அதே ஏழு வருடங்கள் கழித்து ஏழு ஊர்களும் சேர்ந்து நடத்தும் வேட்டை கருப்பசாமி கோவிலின் திருவிழாவும் நடக்கவுள்ளது. இந்த விழாவை 6 ஊர்க்காரர்கள் அமைதியாக நடத்த வேண்டும் என்று விரும்ப, 7-வது ஊர்க்காரர்கள் மட்டும் ஒரு உயிர்ப்பலியை கேட்கிறார்கள். அது நிச்சயமாக நடந்தே தீரும் என்கிறார்கள். ஆனாலும் பிரச்சினைகள் செய்ய மாட்டோம் என்கிற பஞ்சாயத்து முடிவுக்குக் கட்டுப்பட்டு. பாலில் அடித்து சத்தியம் செய்துவிட்டுப் போகிறார்கள்.

7 வருடங்களுக்கு முன்பு இதே திருவிழா நடந்தபோது பந்தி பரிமாறலில் ஒரு சின்ன பிரச்சினை எழுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கறியை வைக்கும்போது குறைவாக வைத்துவிட்டதாகச் சொல்லி ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் பிரச்சினை செய்கிறார்கள்.

இது அன்றைக்கே கொலையில் முடிகிறது. பதிலடியாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்ய உத்தரவிட்ட ஆதிக்க சாதி சமூகத்தைச் சேர்ந்தவரை படுகொலை செய்கிறார்கள். இப்படி படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியான வரலட்சுமி, தனது கணவரின் கொலைக்குக் காரணமானவர்கள் அனைவரின் குடும்பத்தினரையும் கொன்றால்தான் தான் விதவைக் கோலத்தைப் பூண்டுவேன் என்று வீர சபதம் இடுகிறார்.

இதனால் வரலட்சுமியின் குடும்பத்து ஆண்கள் அவரது கணவனை கொலை செய்தவர்களைத் தேடிப் பிடித்து படுகொலை செய்கிறார்கள். ஒரேயொருவர் மட்டுமே பாக்கி. அது ஜானி. அவரோ ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வருகிறார். அந்த ஊரில் அந்தச் சமூகத்தில் கலெக்டராக வேண்டும் என்கிற வெறியுடன் இருக்கிறார் அவர். அவரைப் பாதுகாத்து வைத்திருக்கிறார் விஷாலின் அப்பாவான ராஜ்கிரண்.

இப்போது இந்த 7 நாள் திருவிழா முடிவதற்குள்ளாக ஜானியை கொலை செய்ய நினைக்கிறார்கள் வரலட்சுமியின் தரப்பினர். இதையறியும் விஷால் அந்த ஜானிக்கு தானே பாதுகாவலராக இருக்கிறார். இடையில் விஷால் யாரென்று தெரியாமல் ராஜ்கிரண் வீட்டு டிரைவரோ என்று நினைத்து அவரைக் கலாய்க்கிறார் ‘செம்பருத்தி’ என்னும் கீர்த்தி சுரேஷ். பின்பு விஷயம் தெரிய.. இருவரும் காதலிக்கத் துவங்குகிறார்கள்.

5-வது நாளின்போது ஏற்பட்ட சண்டையில் ராஜ்கிரண் தாக்கப்படுகிறார். அவர் உடல் நலமில்லாமல் இருப்பதை வெளியில் சொல்லாமலேயே திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடிக்கத் திட்டமிடுகிறார் விஷால்.

இப்போதும் வரலட்சுமி அந்த ஜானியை கொலை செய்ய தானே முன்னின்று போருக்கு வருகிறார். இறுதியில் விஷால் ஜெயித்தாரா..? அல்லது வரலட்சுமி ஜெயித்தாரா..? என்பதை வெள்ளித்திரையில் காண்க என்றழைக்கிறார்கள்.

‘சண்டக்கோழி’ முதல் பாகத்தில் இருந்த அதே ஸ்டைலில்.. கமர்ஷியல் பார்முலாவில் தப்பாமல் இந்தப் படத்தையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. படத்தின் முற்பாதியில் கலகலப்பாகவும், ஈர்ப்பாகவும் இருப்பது கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி பங்கு பெறும் காட்சிகள்தான்.

கீர்த்தி சுரேஷுக்கு பெத்த வேடம். மதுரை தமிழில் இழுத்து, இழுத்து, ஸ்டைலாகவும், அதே சமயம் ஒருவித தெனாவெட்டாகவும் பேசி ஆளைக் கவர்ந்திழுக்கிறார். தனக்குள் இருக்கும் ஒருதலைக்காதலை அவர் வெளிப்படுத்தும் அந்தக் காட்சியின் டிவிஸ்ட் அழகோ அழகு..!

பாடல் காட்சிகளில் இதைவிட அழகு. நடனத்திலும் ஒரு படி மேலேயே தேறியிருக்கிறார் போலும். குத்துப் பாடலில் அவர் போடும் ஆட்டத்தில் இருக்கும் நளினம் ரெகுலர் ஆட்டக்காரிகளுக்குக்கூட வராது போலவே..!

நடிப்புக்கு ஸ்கோப் கொடுக்கும்வகையில் நான்கைந்து காட்சிகள் இருக்கின்றன. அவையும் ரசகுல்லாவில் மிதக்கும் சர்க்கரைப் பாகாக தெரிகிறது..! “உன்னைக் கட்டிக்கிறேன். அவனை வைச்சுக்குறேன்…” என்று பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளையிடம் ஸ்டைலாக சொல்லும் காட்சியில் தெறிக்க விடுகிறார் கீர்த்தி. வெல்டன் கீர்த்தி.

வரலட்சுமிக்கு அவரது உருவத்திற்கேற்ற பெண் தாதா வேடம். தனது கணவரை கொன்றவர்களை பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் ஒரு கேரக்டர். மேக்கப்பே இல்லாமல், முகத்தில் காட்டும் ரெளத்திரமும், விஷாலிடம் சண்டியராக பதிலுக்குப் பதிலும் பேசும் முறைப்பும் ‘ஆத்தி’ என்று சொல்ல வைத்திருக்கிறது..! விஷால் பத்திரம்..!

கிளைமாக்ஸில் அவர் சட்டென்று மனம் மாறுகின்ற காட்சிதான் புஸ்ஸாகிப் போன புஸ்வானமாவிட்டது. “வெட்டித் தள்ளிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பேன்” என்றவர் தனது மகனின் தலை தப்பியது என்றவுடன் மனம் மாறுவது நாட்டுல நல்லவங்க எண்ணிக்கைல ஒரு ஆளை கூட்டிட்டாரு இயக்குநரு என்றுதான் சொல்ல வைக்கிறது.

ராஜ்கிரண் அதே கம்பீர தோற்றத்தில்.. ‘ஐயா’ என்ற மரியாதை கலந்த குரலுக்கு எடுக்காட்டாய் தோன்றியிருக்கிறார். “அதெல்லாம் உங்களுக்கெதுக்குய்யா.. அதான் நாங்க இருக்கோம்ல. நாங்க பார்த்துக்க மாட்டோமா?” என்று விஷாலுக்கு அட்வைஸ் செய்து அவரது போக்கைத் திசை திருப்பும் முயற்சியில் ‘தேவர் மகன்’ சிவாஜியை பார்த்தது போலவே இருக்கிறது..!

முனீஸ்காந்த், கஞ்சா கருப்பு, மாரிமுத்து, ஜோ மல்லூரி, சண்முகராஜன், ஹரீஸ் பெராடி என்று முக்கியப் புள்ளிகளுக்கு பெயர் சொல்லும் அளவுக்கு காட்சிகளைக் கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். ஜானி பல காட்சிகளில் ச்சும்மா வந்து போய்க் கொண்டிருக்கிறார்.

கடைசியாக நாயகன் விஷால். முதல் பாகத்தில் பார்த்தது போலவேதான் இப்போதும் இருக்கிறார் என்பது அவருக்கான ஸ்பெஷல். ஹீரோயிஸ படமாகவே இதனை உருவாக்கியிருப்பதால் அந்தத் தோரணை, ஸ்டைல், திரைக்கதையின் உசுப்பேற்றல் என்று விஷாலுக்காவே உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

கீர்த்தி சுரேஷின் அலம்பலை ரசிக்கும் விஷாலின் அந்த சில காட்சிகள்தான் மனதுக்குப் பிடிக்கின்றன. மற்றவைகளெல்லாம் விஷாலின் ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்திருக்கும்..! வீடு தேடிப் போய் கீர்த்தியை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு வரும் டிவிஸ்ட் திரைக்கதைக்கு வேண்டுமானால் ஓகேவாக இருக்கலாம்.. ஆனால் ஒட்டு மொத்தமாய் அரதப் பழசு டைப்பாகவும், இப்போதைய இளசுகளை ‘ஏய்.. இவன் வேற.. என்னடா இது’ என்று முணுமுணுக்கவும் வைத்திருக்கிறது. இயக்குநர் 2018-க்கு ஏற்றாற்போன்று திரைக்கதையை மாற்றியிருக்கலாம்..!

கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் அவரும் வரலட்சுமியும் போடும் சண்டை காட்சியெல்லாம் கொஞ்சம் டூ மச்சாகவே இருக்கிறது. கடைசி நிமிடத் திருப்பம் எதிர்பாராதது என்றாலும் ‘எல்லாம் சுகமே’ என்று முடித்திருக்கிறார் இயக்குநர். முடிவைப் பார்த்தால் அடுத்து மூன்றாவது பாகத்தையும் எடுத்தே தீருவார்கள் போலத்தான் தோன்றுகிறது..!

எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பிருந்தா சாரதி இருவரும் வசனங்களில் உசுப்பேற்றிவிடுகிறார்கள். “உங்க ஊர்ல பேசிக்கிட்டேதான் இருப்பீங்களா.. செய்ய மாட்டீங்களா..?” என்று வரலட்சுமியின் நக்கல் கேள்விதான் ஒட்டு மொத்த படுகொலைகளுக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. ஒரேயொரு கேள்வி.. சில கொலைகள்.. ஓராயிரம் பிரச்சினைகள் என்று ஏழு வருடமாக அந்த மக்களை அலைக்கழிக்கிறது.

வருவின் மகன் ஜானியைக் கத்தியால் குத்திவிட்டுப் போக அவனைப் பிடிக்கச் சொல்பவர்களிடத்தில், “ஒரு ஊரே வந்தாலும் எதிர்த்து நிக்கலாம்.  பொண்ணுகிட்டயும், சின்ன பையன்கிட்டயும் எப்படி வீரத்தைக் காட்டுறது..?” என்று ராஜ்கிரண் வெறுமனே தன் விரக்தியைக் காட்டும் காட்சியில் திரைக்கதையை நகர்த்த உதவியிருக்கின்றன வசனங்கள்..! 

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேலின் உழைப்புக்கு ஒரு சல்யூட். திருவிழா நடக்கும் 7 நாட்களையும் எப்படித்தான் இப்படி திட்டமிட்டு படமாக்கினார்களோ தெரியவில்லை. ஆனால் பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளிலும் இளசுகளைத் துள்ள வைக்கும் லெவலுக்கு ஆட்டம், பாட்டத்தை பதிவாக்கியிருக்கிறார் சக்திவேல்.

சம்பத் திலக்கின் கலை இயக்கத்துக்கு ஒரு ‘ஓ’ போடுவோம். ரங்கராட்டினத்தில் ஆரம்பித்து பொங்கல் பானைவரையிலும் திரும்பிய பக்கமெல்லாம் கலை இயக்குநரின் கை வண்ணத்தில் திருவிழா பொருட்களாகவே கண்ணில்பட்டன. காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டத்தைக் காட்டியிருப்பதால் செலவுக்கேற்ற, உழைப்புக்கேற்ற ரிசல்ட் திரையில் தெரிகிறது.

அனல் அரசுவின் சண்டை காட்சிகளில் அனல் தெறிக்கிறது. கிளைமாக்ஸ் சண்டையைவிடவும் ராஜ்கிரண் தன்னைத் தாக்க வருபவர்களிடத்தில் போடும் சண்டை பிரமாதம்.. சண்டை பிரியர்களால்தான் முதல் பாகமே அத்தனை பெரிய வெற்றியைப் பெற்றது. அதனை மனதில் வைத்துதான் இதனையும் செய்திருக்கிறார் இயக்குநர்.

முந்தைய பாகத்தின் ‘தாவணி போட்ட தீபாவளி’ பாட்டுக்கு ஒப்பாக இந்தப் படத்தில் ‘கம்பத்துப் பொண்ணு’ பாடல் இடம் பெற்றுள்ளது. யுவனின் இசையில் அனைத்து பாடல்களுமே கேட்கும் ரகம். பின்னணி இசையில்தான் அண்ணன் ‘வைச்சு’ செய்திருக்கிறார். காது கிழிந்தது..!

முதல் பாகத்தில் வெறும் ரவுடிக் கும்பல் ராஜ்ஜியத்தை மட்டுமே தொட்டுச் சென்ற லிங்குசாமி இந்தப் பாகத்தில் தென் மாவட்டத்தில் நிலவும் சாதிய பிரச்சினைகளையும் தொட்டிருக்கிறார். மைனாரிட்டி சமூக மக்களை அரவணைத்துச் செல்லும் மேல் சாதி மக்களும் இருக்கிறார்கள் என்பதை இதில் ராஜ்கிரண் கேரக்டர் மூலமாகச் சொல்லியிருந்தாலும் படத்தைப் பார்ப்பவர்கள் அனைவருமே வரலட்சுமியின் சாதி வெறியைத்தான் மனதில் கொள்வார்கள். இது சாதி வெறியை வெளிக்காட்டும் அனைத்து படங்களிலும் இருக்கும் குறைதான். ஆனால் இயக்குநர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப் போகிறது..? அவர்களுக்குத் தேவை ஒரு பிளாக் பஸ்டர் ஹிட்..! அவ்வளவுதான்..!

‘சண்டக்கோழி’ என்ற பெயருக்கேற்றபடியே முழுக்க, முழுக்க கமர்ஷியல் ரசிகர்களுக்குப் பிடித்தாற்போன்றுதான் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. அதில் குறைவில்லைதான்..!

Our Score