full screen background image

சண்டக்காரி – சினிமா விமர்சனம்

சண்டக்காரி – சினிமா விமர்சனம்

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி குடும்பத் திரைப்படம் ‘சண்டக்காரி’.

இந்த படத்தில் விமல், ஸ்ரேயா, சத்யன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் பிரபு ஒரு குணச்சித்திர வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கே.ஆர். விஜயா மற்றும் ‘புன்னகை பூ’ கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளனர்.

கிரேன் மனோகர் நகைச்சுவை வேடத்தில் கலக்கியுள்ளார்.

இவர்களுடன் ‘கடலோர கவிதைகள்’ புகழ் ரேகா, ‘மஹதீரா’ வில்லன் நடிகர் தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பிரபல இசையமைப்பாளர் அம்ரீஷ் இசையமைத்துள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தினேஷ் பொன்ராஜ் படத் தொகுப்பையும், ஐய்யப்பன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக் காட்சிகளுக்கு கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி அமைத்துள்ளார். ஹபீப் நடனங்களை வடிவமைத்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

லண்டன் மாநகரின் ஹை கிளாஸ் வாழ்க்கையும், தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஒரு கிராமத்தின் அமைதியான வாழ்க்கையும் எப்படி ஒத்துப் போகிறது என்பதை சொல்ல வந்திருக்கிறது இந்த படம்! 

‘சண்டக்காரி’ என்ற தலைப்பிற்குப் பொருத்தமாக எப்போதும் அனைவரிடமும் சண்டை இட்டுக் கொண்டே இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

லண்டனில் உள்ள ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா.

ஊழியர்களை அரட்டி, புரட்டி, உருட்டி, திட்டி, கண்டித்து வைத்திருந்தால்தான் வேலை சுலபமாக நடக்கும். அப்போதுதான் இந்த நிறுவனத்தில் தனக்குப் பெரிய பெயர் கிடைக்கும். அடுத்து தலைமை செயல் அலுவலர் பதவியை எட்டிப் பிடிக்கலாம் என்கின்ற கனவில் ஊழியர்களை கசக்கி பிழிந்து வேலை வாங்கி வருகிறார் ஸ்ரேயா. 

இந்த நேரத்தில் அவரது நிறுவனத்தில் அவருடைய பர்சனல் செகரட்டரியாக வேலை செய்ய வருகிறார் விமல். 

பொள்ளாச்சியை சொந்த ஊராகக் கொண்ட விமல், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே லண்டனுக்கு வந்து பல நிறுவனங்களில் வேலை பார்த்து இங்கிலாந்து குடியுரிமையையும் பெற்றவர்.

இப்போது அவர் ஒரு அப்ளிகேஷனை உருவாக்கி இருக்கிறார். அதை மார்க்கெட்டிங் செய்து வெளியிடுவதற்கு ஸ்ரேயா வேலை செய்யும் இந்த நிறுவனம் வசதியாக இருக்கும் என்பதால்தான் இந்த நிறுவனத்திற்கு வேலைக்கு வந்திருக்கிறார். 

ஸ்ரேயாவின் குணத்திற்கு நேர் எதிராக இருக்கும் விமல் ஸ்ரேயாவை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். நிறைய திட்டுக்களை வாங்குகிறார். எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் ஸ்ரேயாவிடம் அவரால் நல்ல பெயர் எடுக்கவே முடியவில்லை.

இந்த நேரத்தில் திடீர் திருப்பமாக ஷ்ரேயாவின் நியமன காண்ட்ராக்டை முடித்துக் கொள்வதாக அந்த நிறுவனம் சொல்கிறது. 

இதனால் ஸ்ரேயா திரும்பவும் இந்தியாவிற்கு வந்து அதன் பிறகு மறுபடியும் இதே நிறுவனத்திற்கு வேலை வேண்டி அப்ளிகேஷன் செய்த பின்பு தாங்கள் அவரை வேலைக்கு அழைத்துக் கொள்வதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சொல்கிறார்கள். 

இந்த வேலை பறி போனால் தான் இங்கிலாந்தில் இருக்க முடியாது. இந்தியாவிற்கு உடனடியாக திரும்ப வேண்டி வரும் என்று பயப்படுகிறார் ஸ்ரேயா.

அதனால் காதல், திருமணம் என்று ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கிறார் ஸ்ரேயா.

இங்கிலாந்தில் நிரந்தர குடியுரிமையை வைத்திருக்கும் விமலை தான் காதலிப்பதாகவும் விரைவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் விசா கட்டுப்பட்டு அதிகாரியிடம் சொல்கிறார் ஸ்ரேயா.

ஆனால் இந்தக் காதல் பொய் என்று நம்பும் விசா கட்டுப்பட்ட அதிகாரி, “விமலின் தாய், தந்தையிடமும் இந்தத் திருமணம் பற்றி நாங்கள் விசாரிப்போம். அதன் பின்புதான் முடிவெடுப்போம்” என்கிறார்.

இதனால் பயந்து போன ஸ்ரேயா விமலை அழைத்துக் கொண்டு அவரது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு வருகிறார்.

அங்கே வந்து போலியாக வியர்வைத் திருமணம் செய்து கொண்டு.. அதன் பின்பு லண்டன் திரும்பி, லண்டன் குடியுரிமையை பெற்ற பின்பு விமலை டைவர்ஸ் செய்து விடலாம் என்று திட்டம் தீட்டுகிறார்.

ஆனால் அதே சமயம் விமல் ஸ்ரேயாவை திருமணம் செய்து கொள்ளமலேயே ஏமாற்றி விடலாம் என்ற நினைப்புடன் இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

இருவரும் வேறு வேறு நோக்கத்தில் இங்கே வந்திருக்க… இறுதியில் என்ன ஆனது? இருவரின் திருமணமும் நடந்ததா? இல்லையா? இருவரும் திரும்பியும் லண்டன் சென்றார்களா? இல்லையா? என்பதுதான் இந்த ‘சண்டக்காரி’ படத்தின் திரைக்கதை.

இந்தப் படம் ஏழு வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, நான்கு வருடங்களுக்கு முன்பாக சென்சார் சர்ட்டிபிகேட்டும் பெறப்பட்டு, இப்போதுதான் வெளியாகி இருக்கிறது.

விமலுக்கு இது போன்ற அதிக கஷ்டம் இல்லாத கதாபாத்திரங்கள்தான் சரிப்படும். அது போலவே இந்தக் கதையை அவர் தேர்ந்தெடுத்ததில் தவறே இல்லை. 

அதிகமாக நடிக்க வேண்டியது இல்லை. முனைந்து செயல்பட வேண்டியதும் இல்லை. வித்தியாசமான ஆக்சன்களை காட்ட வேண்டியதும் இல்லை. தன்னால் முடிந்ததை செய்தால், காட்டினால் போதும் என்பதுதான் விமலின் கொள்கை. 

இதையே இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் விமல். தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பையே காண்பித்திருக்கிறார்.

ஸ்ரேயாவிடம் அடிபணிந்து பேசுவதும், பவ்யமாக நடந்து கொள்வதும், ஒரு தன்மானமே இல்லாத மனிதன் எப்படி இருப்பானோ அப்படி எல்லாம் ஸ்ரேயா முன்பாக அவர் நடித்துக் காட்டுவதும் கதைக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

ஓரிடத்தில் மட்டும் பெரும் கோபம் கொண்டு ஸ்ரேயாவிடம் கத்திக் கோட்பாடு போட்டு தன்னுடைய ஆத்திரத்தை கொட்டுகின்ற பொழுது “பரவாயில்லையே… விமல் இந்த அளவுக்காச்சும் நடித்திருக்கிறாரே?!” என்றும் சொல்ல வைத்திருக்கிறார்.

பாடல் காட்சிகள், நடன காட்சிகளில் ஒரு ஹீரோவாக தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார் விமல்.

‘சண்டக்காரி’ என்ற படத்தின் தலைப்புக்குப் பொருத்தமான வகையில் படம் முழுவதும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்திழுக்கிறார் ஸ்ரேயா.

கோபம், ஆத்திரம் என்று அத்தனையையும் காட்டுகின்ற இடத்தில் அவரைப் பெரிதும் ரசிக்க முடிகிறது.

அதே சமயம் விமல் குடும்பத்தாரின் அன்பும், அரவணைப்பும், பாசமும் அவரை மனம் மாற வைக்கும் பொழுதும் லவ்லியாக நடித்திருக்கிறார் ஸ்ரேயா.

லண்டன் காட்சிகளில் மிகப் பெரிய அளவுக்கு நமக்கு ரிலீஃபை கொடுத்திருக்கிறது சத்யனின் நகைச்சுவை. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் சத்யன். அவர் வருகின்ற காட்சிகளில் கொஞ்சமேனும் நாம் மனம் விட்டு சிரிக்க முடிகிறது.

விமலின் அப்பாவாக பிரபு சிறிது நேரம் முறைத்துக் கொண்டிருந்தாலும் மகன் மீதான பாசத்தை இறுதியில் காட்டுகிறார். 

வழமையான அம்மாவாக உமா பத்மநாபனும், பாட்டியாக கே.ஆர். விஜயாவும் பாசத்தைப் பொழிகிறார்கள்.

வில்லனாக ஒரு சில காட்சிகளில் வரும் தேவ் கில், ஒரு சண்டைக் காட்சிக்கு அடி போட்டுவிட்டுப் போகிறார். 

மேலும் ஸ்ரேயாவின் தோழியாக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளரான ‘புன்னகை பூ’ கீதா, ஸ்ரேயாவின் அம்மாவாக நடித்திருக்கும் ரேகா, கிரேன் மனோகர் மகாநதி சங்கர் என்ற பலரும் ‘சிவனே’ என்று நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் காட்சிகளை கிராபிக்ஸில் வடிவமைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இதை தெரியும் அளவுக்கு படப்பதிவு செய்திருப்பது மிகப் பெரிய தவறு. சிறந்த ஒளிப்பதிவாளரான குருதேவ் ஏன் இப்படி மாட்டிக் கொண்டார் என்றுதான் தெரியவில்லை. 

ஆனால் பொள்ளாச்சி பகுதி கிராமத்தை அழகாக படப்பதிவு செய்து இருக்கிறார். பாடல் காட்சிகளில் ஸ்ரேயாவை அழகாகக் காட்டி இருக்கிறார். 

அம்ரிஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஒரு குத்துப் பாடலை அட்டகாசமாக தன்னுடைய ஸ்டைலில் அடித்து ஆடியிருக்கிறார் அம்ரிஷ்.

படத்தொகுப்பாளர் ரொம்பவும் மெனக்கெட தேவையில்லாத கதை என்பதால் புதிதாக எதையும் செய்யாமல் அப்படியே வரிசைக்கிரமாக படத்தை தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் ஆர்.மாதேஷ், ஒரு அடாவடி பெண்ணை அமைதியான பையன் எப்படி அடக்குகிறான் என்ற பழைய கதையில் கொஞ்சம் முலாம் பூசிய திரைக்கதையை அமைத்து கொடுத்து இருக்கிறார்.

இருந்தாலும் சுவாரசியமே இல்லாத திரைக்கதையினாலும் வித்தியாசமே காட்டாத ஹீரோவின் நடிப்பினாலும் அழுத்தம் இல்லாத இயக்கத்தினாலும் இந்தப் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை.

விமல் எப்போது லண்டனுக்கு வந்தார்? அவருக்கு எப்படி பிரிட்டன் நாட்டின் நிரந்தர குடியுரிமை கிடைத்தது? ஸ்ரேயாவுக்கு ஏன் கிடைக்கவில்லை? அவர் எப்பொழுது லண்டன் வந்தார்? என்கின்ற கேள்விகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு கதையை நகர்த்தி இருப்பதால், கடைசியில் இந்தக் கேள்விகள் நமக்குள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

ஆங்காங்கே வருகின்ற சில காமெடிகளினால் சிரிக்க முடிந்திருக்கிறதே தவிர… இந்தப் படத்தை ஒட்டுமொத்தமாக “பக்காவான கமர்சியல் படம்” என்று சொல்ல முடியவில்லை.

RATING – 3 / 5

Our Score