full screen background image

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபாலி’ படத்தின் கதை என்ன..?

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபாலி’ படத்தின் கதை என்ன..?

‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘சிம்ஹாத்ரி’, ‘சை’, ‘சத்ரபதி’, ‘விக்ரமர்குடு’, ‘யமடொங்கா’, ‘மகாதீரா’, ‘மரியாதை ராமண்ணா’, ‘நான் ஈ’ ஆகிய படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது ‘பாகுபாலி’ என்ற பிரமாண்டமான சரித்திர படத்தினை இயக்கி வருகிறார்.

இதில்  பிரபாஸ் கதாநாயகனாகவும் அனுஷ்கா ஷெட்டி கதாநாயகியாகவும்  நடிக்க, ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். பிரபாஸுக்கு அம்மாவாக ஸ்ரீதேவி நடிக்கிறார். தளபதி கேரக்டரில் சத்யராஜும், வில்லனாக ராணாவும் நடிக்கிறார்.

தெலுங்கில் ‘பாகுபாலி’ என்ற பெயரிலும், தமிழில் ‘மகாபலி’ என்ற பெயரிலும் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் தயாராகி வருகிறது. 

இந்தப் படத்தின் கதை இயக்குனர் ராஜமௌலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் எழுதியது. தான் எழுதிய கதையை படமாக்க ஆவலுடன் இருந்தார் விஜயேந்திர பிரசாத்.  ஆனால் முடியவில்லை. தந்தையால் முடியாத்தை இப்போது மகன் செய்துவிட்டார்.

ஒரு நாட்டுக்காக இரண்டு உறவினர்கள் மோதிக் கொள்கிற கதைதான் இந்த பாகுபாலி.

ஜைன மதத்தை ஸ்தாபித்தவர் என்று நம்பப்படும் ரிஷப மாமுனிவரின் முதல் மகன் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி. பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க, பாகுபலி வெகுண்டெழுந்து சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். போரில் தோற்ற அண்ணனின் முகம் வாடியதைக் கண்டு, பாகுபலி துறவறம் மேற்கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாக நம்பப்படும் இந்தப் போரையும் பாகுபலியின் காதலையும் பின்னணியாக  கொண்டு இப்படம் தயாராகிறது. அதுவும் வெறும் போராக மட்டுமல்லாமல் உறவு ரீதியாக சென்டிமென்ட்டால் தாக்கிக் கொள்ளும் கதை.

அந்தக் கதையின் மைய கருவை மட்டும் எடுத்துக் கொண்டு பல வருடங்களாக அதை டெவலப் செய்துதான் ‘பாகுபாலி’யின் கதையை உருவாகியுள்ளார் இயக்குனர் ராஜமவுலி.

ஹாலிவுட் வரலாற்றுப் படங்களுக்குச் செய்யப்படுவது போலவே புரொடெக்‌ஷன் டிசைன் செய்து பிரம்மாண்ட நகரம் ஒன்றை உருவாக்கிப் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

இதில் 9-ம் நூற்றாண்டு காலத்து ஆடைகள், போர்த் தளவாடங்கள், யானைகள், குதிரைகளுக்கான போர்க் கவசங்கள், அந்தக் காலக்கட்டத்தின் ஆயுதங்கள் என்று படத்தின் முன் தயாரிப்புக்கு மட்டுமே ஓராண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறதாம் ராஜமவுலியின் டீம்.

இப்படத்திற்கு இசையமைத்துவரும் பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, இதன் பிறகு இசையமைப்பதிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருக்கிறார். ‘டென் காமாண்ட்மென்ஸ்’ படத்தை மிஞ்சும்விதமாகப் ‘பாகுபாலி’க்குப் பின்னணி இசை அமைக்கப் பாடுபட்டு வருகிறாராம் இவர்.

இந்த படம் 2 பாகங்களாகத் தயாரிக்கபடுகிறது. முதல் பாகம் 2015 ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. 2-வது பாகம் 2016-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தோடு நடிகை அனுஷ்கா திரையுலகில் இருந்து தற்காலிகமாக விடைபெற்று திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ராஜமெளலியின் திரைப்படங்கள் அனைத்தையும் தெலுங்கு திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்து வரவேற்றது.

அதேபோல் இந்தப் பட ரிலீஸின்போதும் வேறெந்த படமும் ரிலீஸாகாமல் பார்த்துக் கொண்டு படத்திற்கு உதவி செய்ய தெலுங்கு திரையுலகம் தயாராக உள்ளதாம்..!

Our Score