ஆந்திராவில் மருமகளாகப் போவதால் ‘நோ நடிப்பு.. இந்தா பிடிங்க அட்வான்ஸை’ என்று வாங்கிய இடங்களிலெல்லாம் அட்வான்ஸை திருப்பிக் கொடுத்து நல்ல பெயர் எடுத்த நடிகை சமந்தா, இப்போது அதே இடங்களில் கோபக்கனலுக்கும் ஆளாகியிருக்கிறார்.
நாக சைதன்யாவை திருமணம் செய்யவிருப்பதால் ‘நோ நடிப்பு’ என்று முதலில் சொன்ன சமந்தா.. திருமணம் அடுத்த வருடம்தான் என்று முடிவானதும் மீண்டும் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். இதை எதிர்பார்க்காத அக்கினேனி குடும்பம் இப்போது அக்னியில் நிற்பதை போல தகித்துக் கொண்டிருக்கிறதாம்.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் காதல் மணாளனின் தலையாட்டுதலே முக்கியம் என்பதால் அவருடைய ‘நோ பிராப்ளம்’ வாக்குறுதியை நம்பி மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.
தமிழில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் ‘இரும்பு திரை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாகிறாராம் சமந்தா. இந்தப் படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஷால் இப்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் நீண்ட நாட்களாக காத்திருக்கும் லிங்குசாமியின் ‘சண்டை கோழி-2’ படத்திலும் நடிக்கப் போகிறார்.
இதன் பின்புதான் இந்த ‘இரும்பு திரை’ என்பதால், சமந்தா அடுத்த ஜனவரிக்கு பின்புதான் விஷாலுடன் டூயட் பாடுவர் என்று தெரிகிறது.