full screen background image

கள்ளாட்டம் – சினிமா விமர்சனம்

கள்ளாட்டம் – சினிமா விமர்சனம்

இப்போதெல்லாம் ஒன்றரை மணி நேர படமாக திரில்லர்-சேஸிங் சப்ஜெக்ட்டில் ஒரு படத்தை எடுத்துக் கொடுப்பது பேஷனாகிவிட்டது போலும். ஹாலிவுட்டை காப்பி செய்து இப்படியெடுப்பது நமது சினிமா ரசிகர்களுக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது இருந்தால் தேவலை.

இதுவும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் டைப் படம்தான். ரிச்சர்டும், சாரிகாவும் கணவன் மனைவியர். இவர்களுக்கு எல்கேஜி படிக்கும் மகள் இருக்கிறாள். நடுத்தர வர்க்கம். இப்போது ரிச்சர்டு வேலையில்லாமல் வீட்டில் இருக்கு மனைவி சாரிகா வேலைக்குச் சென்று சம்பாத்தியம் செய்கிறார்.

ஒரு நாள் காலையில் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார் ரிச்சர்டு. அப்போது வேகமாக வரும் ஒரு டூவீலர் குழந்தையை இடித்துத் தள்ளிவிட்டு பறந்துவிடுகிறது. குழந்தை கீழே விழுந்து தலையில் அடிபட்டு கோமா நிலையில் ஆழ்ந்துவிடுகிறது. மருத்துவமனையில் உடனேயே சேர்க்கிறார் ரிச்சர்டு.

தலையில் பலத்த அடிபட்டிருப்பதால் ஆபரேஷன் செய்ய வேண்டும். நிறைய செலவாகும் என்னும் மருத்துவர் 20 லட்சத்துக்கு பில் போட்டு சொல்கிறார். கணவனும், மனைவியும் குழந்தை பிழைக்க வேண்டுமே என்பதற்காக வீட்டுப் பத்திரம், நகைகள் அனைத்தையும் வைத்து பணத்தைப் புரட்ட முனைகிறார்கள்.

வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் சேட்டு கடையில் இதையெல்லாம் கொடுத்து பணம் கேட்கிறார் ரிச்சர்டு. சேட்டு முதலில் பிகு செய்தாலும் பின்பு கொடுக்கிறார். ஆனால் உடனேயே பின்னாலேயே ரவுடிகளை அனுப்பி ரிச்சர்டு சென்ற ஆட்டோவை வழிமறித்து வேண்டுமென்றே அதன் டிரைவருடன் சண்டையிடுவதை போல காட்சியமைத்து பணப் பையை வழிப்பறி செய்து கொண்டு மறைகிறார்கள்.

குழந்தை மருத்துவமனையில்.. இப்போது பணமும் பறி போன நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுகிறார் ரிச்சர்டு. அங்கே இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நந்தா. விஷயத்தைச் சொல்கிறார். உடனேயே களத்தில் குதிக்கிறார்.

ஆட்டோவை கண்டுபிடித்து அதன் மூலம் டிரைவரை பிடித்து இவர் மூலமாக சேட்டையும் பிடிக்கிறார் நந்தா. ஆனால் பணம் மட்டும் கிடைக்கவில்லை. பணத்தை திருடிய இளைஞர்களைத் தேடி ஆந்திராவுக்கே சென்று வருகிறார்கள் நந்தாவும், ஹெட் கான்ஸ்டபிள் இளவரசுவும்.

இந்த நேரத்தில் ரிச்சர்டின் பரிதாப நிலையைக் கண்டு பாவப்பட்டு இரக்கம் காட்டும் நந்தா மருத்துவமனைக்கு வந்து தலைமை மருத்துவரிடம் வெகு சீக்கிரமாக பணத்தைக் கொண்டு வந்து கட்டிவிடுவதாகவும் அதுவரையிலும் குழந்தைக்கு சிகிச்சையளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறார்.

நந்தா ஒரு விபத்தில் இதேபோல் தனது குழந்தையையும் பறி கொடுத்தவர் என்பதால் இந்த விஷயத்தில் ரிச்சர்டுக்கு உதவி செய்ய முனைகிறார். இளவரசுவும் தன் பங்குக்கு லோக்கல் ரவுடியான ஏழுமலையிடம் சென்று உதவி கேட்கிறார்.

குழந்தைக்கு என்றவுடன் தருகிறேன் என்று சொல்லும் ஏழுமலை அந்தப் பணத்தை பட்டப் பகலில் நடுரோட்டில் டூட்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் நந்தாவிடம் கொடுக்கச் செய்கிறார். உடனேயே லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸுக்கும் தகவல் கொடுத்து நந்தாவை லஞ்ச வழக்கில் கைது செய்ய வைக்கிறார். இதனால் நந்தா சஸ்பெண்டாகிறார்.

எதிர்பாராமல் நடந்துவிட்ட இந்த அசம்பாவிதத்தால் ரிச்சர்டு அதிர்ச்சியாகிறார். இனி என்ன என்று தெரியாமல் நிற்கிறார். இதற்குப் பின் என்ன நடந்தது என்பதை தியேட்டருக்கு சென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

நிஜத்தில் பல ஊர்களில் நடக்கின்ற, நடந்த கதைதான். அதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், அழுத்தமான இயக்கத்திலும் சொல்லியிருந்தால் படம் மெட்ரோ போல பேசப்பட்டிருக்கும். நந்தாவுக்கும், ஏழுமலைக்குமான மோதலின் பிளாஷ்பேக் காட்சிகள் நிஜமானவை போல் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

நந்தா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும் அந்த காக்கி டிரெஸ்ஸுக்கே உரித்தான வேகமும், துடிப்பும், விறுவிறுப்பும் அவரிடத்தில் இல்லை. எப்போதும் எதையோ பறி கொடுத்தவரை போலவும், வசனங்களை ஒப்பிப்பது போலவும், நடிப்பே வராமலும் நடித்திருப்பது அந்தக் கேரக்டருக்கு நிச்சயம் பெருமை சேர்க்கவில்லை.

நடிப்பென்று காட்டியிருப்பது ரிச்சர்டும், இளவரசும்தான். ஒரு கையாலாகாத கணவனாக, அப்பாவாக.. தனது பரிதாபத்தை நிஜமாகவே உருக வைக்கும்வகையில் நடித்திருக்கிறார் ரிச்சர்டு. இவருடைய மனைவியாக நடித்திருக்கும் சாரிகாவும் அப்படியே..!

இளவரசு தன்னுடைய ஸ்டைல் நடிப்பில் ஹெட் கான்ஸ்டபிளுக்கே உரித்தான மிடுக்கோடு, போலீஸ் விசாரணை எப்படியிருக்கும் என்பதை அட்சரம் பிசகாமல் காட்டியிருக்கிறார். இவர் பேசும் யதார்த்த வசனங்கள்தான் படத்திற்கு பலமாக அமைந்திருக்கின்றன.

வில்லனாக நடித்திருக்கும் ஏழுமலை புதுமுகம்போல.. வில்லன் கேரக்டருக்கே வலு சேர்த்திருக்கிறார். இறுதிக் காட்சியில் தனது குழந்தையை நினைத்து இவர் கதறுவதும்.. பதறுவதும்… இயக்குநரை பாராட்ட வைக்கிறது.

எப்படியிருந்தாலும் இயக்குநர் தனது இயக்கத் திறமையை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு கிரைம், திரில்லர் கதையில் அடுத்து என்ன என்ற விறுவிறுப்பு இல்லாதது இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பின்னடைவு.

உமரின் இசையில் ஆந்திராவில் நடக்கும் ‘ரா ரா ரண்டி’ பாடலும், ஆடலும் குத்தாட்டம் போட வைக்கிறது. ‘விளையாடு விளையாடு’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையில் கொஞ்சம் அதிரடி காட்டியிருக்கிறார். அவ்வளவுதான்..!

லாஜிக் மீறல்களையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் படம் பார்க்கும் ஆசையே மற்றவர்களுக்கு வராமல் போகும் என்பதால் அதையெல்லாம் லூஸில் விட்டுவிடலாம்..!

இயக்குநர் திரைக்கதைக்கும், இயக்கத்திற்கும் இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம் என்பதோடு முடித்துக் கொள்வோம்.

Our Score