“சிம்புதான் எனக்கு காட்பாதர்…” – சந்தானத்தின் பாசப் பேச்சு..!

“சிம்புதான் எனக்கு காட்பாதர்…” – சந்தானத்தின் பாசப் பேச்சு..!

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ‘சக்க போடு போடு ராஜா’.

இந்தப் படத்தை நடிகர் வி.டி.வி.கணேஷ் தயாரித்திருக்கிறார். படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி ஷாண்டில்யா நடித்துள்ளார். மேலும் விவேக், சம்பத்ராஜ், ரோபோ ஷங்கர், மயில்சாமி, வி.டி.வி.கணேஷ், ரவி மரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத் தொகுப்பு செய்துள்ளார். நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். ஜி.எஸ். சேதுராமன் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் விஜய் டிவியின் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியை இயக்கியவர்.

4S8A1322_2

சமீபத்தில் நடிகர் சந்தானம் தான் கொடுத்தப் பணத்தை திருப்பிக் கேட்க போன இடத்தில் அடிதடியில் இறங்கி, பா.ஜ.வி.ன் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேக் ஆனந்தின் மூக்கை உடைத்து ஆஸ்பத்திரியில் படுக்க வைத்தார்.

இந்தச் செய்தி கேள்விப்பட்டு கோடம்பாக்கமே ஒரு கணம் திகைத்துப் போனது. இந்த காமெடியனுக்குள் இப்படியொரு ஹீரோயிஸமா என்று அசந்து போனார்கள். அதே கையோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீனையும் வாங்கிக் கொண்டு பக்கவாக முன்னரே முடிவு செய்திருந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜம்மென்று கையில் ஒரேயொரு பிளாஸ்தர் மட்டும் போட்டுக் கொண்டு வந்து ஆஜராகிவிட்டார் சந்தானம்.

விழா அரங்கத்தில் சந்தானத்தின் ரசிகர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு சந்தானத்திற்கு பாதுகாப்பளித்தார்கள். இசையமைப்பாளரான சிம்பு வரவேயில்லை.

முதலில் படத்தின் டிரெயிலரும், பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கான அனைத்துவித அம்சங்களுடன் சந்தானம் திரையில் தெரிகிறார். காதல், சண்டை, டூயட். காமெடி என்று அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறது திரைப்படம்.

4S8A1640

படத்தில் வரும் ஒரு வசனம் இப்போதைய நிகழ்வுக்கு பொருத்தமாக இருந்தது. “முடிஞ்சவரைக்கும்  மூளையை யூஸ் பண்ணுவேன். முடியலைன்னா முஷ்டியை யூஸ் பண்ணுவேன்” என்று சந்தானம் பேசும் வசனம், இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக இருக்க கைதட்டல் அரங்கத்தை அதிர வைத்தது.

பாடல் காட்சிகளை மிக ரசனையாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். ஆனால் பாடல்கள்தான்.. அதிலும் ஒரு பாடல் உரைநடை போலவே வாசிக்க வைத்திருக்கிறார் சிம்பு. பாட்டையெல்லாம் யார் கேட்கப் போகிறார்கள் என்கிற அலட்சியம்தான்..!

நிகழ்ச்சியில் நடிகர் விவேக் பேசும்போது, ”சந்தானத்தை நான் என்றும் நினைவில் வைத்திருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தில் நான் பேசிய ‘ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாதுடா’ என்ற வசனத்தை ஒரு படத்தில் சந்தானம் பயன்படுத்தியிருந்தார். அதில்,  ‘ஆயிரம் விவேக் வந்தாலும் உங்களை எல்லாம் திருத்த முடியாதுடா’ என்று மாற்றி பேசி என்னை கலாய்த்திருந்தார். இதனை நான் மிகவும் ரசித்தேன்.

4S8A5584

என் மீதிருந்த மரியாதையில் அவர் தன்னுடைய படத்தில் என்னுடைய பெயரைச் சொல்லி பெருமைப்படுத்தியதற்கு நான் என்றென்றும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த நேரத்தில்தான் இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். சந்தானத்திற்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்.

சிம்புவின் இசை சிறப்பாக வந்திருக்கிறது. சிம்பு பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு அட்வைஸ் செய்ய எனக்கு தகுதியும் உண்டு, உரிமையும் உண்டு. சிம்பு சில தவறுகளைத் திருத்திக் கொண்டால் இந்த்த் தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய ஆளாக வரலாம்.. வர வேண்டும்.. வருவார் என்று நினைக்கிறேன்.

தனது நண்பருக்காக ஆர்யா இங்கே வந்திருக்கிறார். அவர் நடித்த படமல்ல அது. இருந்தாலும் சந்தானம் என்ற இன்னொரு நடிகரின் படமாச்சே என்றுகூட நினைக்காமல் இங்கே வந்திருப்பது சந்தோஷமான விஷயம். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்..” என்றார் நம்பிக்கையோடு.

IMG_9325 

நிகழ்ச்சியில் அடுத்து பேசிய ஆர்யா “சந்தானம் இந்தப் படத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறியுள்ளார். இந்த வேடம் இவருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. சமீபத்தில்கூட அவர் உண்மையிலேயே ஆக்சன் ஹீரோவாக நடந்து கொண்டிருக்கிறார். அதற்கு அடையாளமாக சந்தானத்தில் கையில்  பிளாஸ்திரி போடும் அளவுக்கு  காயம் ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு இப்படின்னா, அடி வாங்கியவருக்கு காயம் எப்படி  இருக்குமோ.. யாருக்குத் தெரியுமா..?” என்றார் கிண்டலாக. 

நடிகர் சந்தானம் பேசும்போது ”இந்தப் படத்தில் எனக்கு ஆக்சன், செண்டிமெண்ட், லவ் என்று நிறைய வேலைகள் இருக்கு. அதனால், காமெடி பண்றதுக்கு யாரை கூப்பிடறதுன்னு யோசிச்சோம். அதுவும் அந்தக் கேரக்டர் என்னை கலாய்க்கணும். யோசித்துப் பார்த்ததில் விவேக் ஸார்தான் எங்களின் ஞாபகத்துக்கு வந்தார்.  எனவே அவரிடம் கேட்டோம். அவரும் முழு மனதோடு ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

IMG_9375

இந்தப் படம் ஆரம்பிச்சு கொஞ்ச நாள்ல பண மதிப்பிழப்பு பிரச்சினை வந்தது. அதனால் பணப் பற்றாக்குறையால் ஷூட்டிங் தள்ளிப் போனது. அதுக்கப்புறம் பல்வேறு பிரச்சினைகள் வரிசையாக வந்ததால்தான் படம் இத்தனை லேட்டானது.

தயாரிப்பாளர் கணேஷ் ஸாருக்கு இந்தப் படத்தில் பலவித தொல்லைகள். பவர் ஸ்டார் சீனிவாசன் இடையில் ஏதோ ஒரு வழக்கில் சிக்கி டெல்லி திஹார் ஜெயிலுக்கு போயிட்டார். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா..? அவர் வருவாரா..? ஷூட்டிங் நடக்குமா என்றெல்லாம் சொல்லி ஒரு நாள் கவலைப்பட்டார் கணேஷ்.

அப்புறம் இப்போ.. மூணு நாளைக்கு முன்னாடி என்கிட்ட வந்து ‘ஏம்ப்பா.. உனக்காவது ஜாமீன் கிடைக்குமா?’ என்று பதைபதைப்புடன் வந்து கேட்டார். எப்படியோ கடவுள் புண்ணியத்தில் கிடைத்து, இப்போது உங்கள் முன்னால் நிற்கிறேன்.

நான் ஒரு நாள் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தபோதுதான் கணேஷ் அண்ணன் எனக்கு போன் செய்து ‘படத்துக்கு மியூஸிக் யார் தெரியுமா?’ என்று கேட்டார். தெரியலையே என்றேன். ‘நம்ம சிம்பு’தான் என்று சொல்லி எனக்கு அதிர்ச்சியை தந்தார்.

சிம்பு என்னுடைய வெல் விஷர். எனக்கு வாய்ப்பளித்து இந்தத் திரையுலகில் வலம் வர வைத்தவர். அவரைப் பற்றி எத்தனை நெகட்டிவ் விஷயங்கள் வெளியில் இருந்தாலும் எனக்கு எப்போதும் அவர்தான் காட்பாதர். இதில் மாற்றமே இல்லை. சிம்பு ஸார் பாடல்களை மிகச் சிறப்பாக அளித்திருக்கிறார். அவருக்கும் எனது நன்றிகள்.

நடிகர்களுக்கு வேண்டிய வசதி செய்து கொடுத்து கவனித்துக் கொள்வதில் தயாரிப்பாளர் வி.டி.வி.கணேஷ் மாதிரி சிறப்பான தயாரிப்பாளர் யாருமே இல்லை. இந்த நல்ல குணத்துக்காகவே இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். படம் அடுத்த மாதம் நிச்சயமாக திரைக்கு வருகிறது..” என்றார் உறுதியாக.