full screen background image

சகலகலாவல்லவன் – சினிமா விமர்சனம்

சகலகலாவல்லவன் – சினிமா விமர்சனம்

காமெடியில் துவங்கி ஆக்சன் ரூட்டில் பயணித்துக் கொண்டிருந்த இயக்குநர் சுராஜ் தன்னுடைய கடைசி இரண்டு ஆக்சன் படங்களும் சரிவர ஓடாததால், மீண்டும் பழைய காமெடி லைனுக்கே வந்துவிட்டார்.

முதல் பாதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிரிப்பலைகள் இருந்தாலும், இரண்டாம் பாதியில் சேர்த்து வைத்து வெளுத்திருக்கிறார் காமெடியில்.. தான் இன்னமும் பழைய பார்மில் இருப்பதை நிரூபித்தேவிட்டார் இயக்குநர் சுராஜ். வாழ்த்துகள்.

தென்காசிபட்டணத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் பிரபு. இவருடைய மகன் ஜெயம் ரவி. அப்பா வழியிலேயே கட்சியின் தொண்டனாக இருக்கிறார். அதே ஊரில் இருக்கும் சூரியின் குடும்பத்திற்கும் இவர்களுக்கும் ஆகாது. மூன்று தலைமுறையாக பரம்பரைப் பகை.

இந்த நேரத்தில் சூரியின் அத்தை மகளான அஞ்சலியை பார்த்தவுடன் ஜெயம் ரவிக்கு லவ்வாகிறது. இந்த லவ்வை வளர்த்தெடுக்க விரும்பி சூரியின் வீட்டிற்குள் சென்று சமாதானம் பேசி அவர்களை கூல் செய்கிறார் ஜெயம் ரவி. தனது காதலையும் தொடர்ந்து வளர்க்கிறார். அடுத்து வரும் தேர்தலில் சூரியை  எதிர்த்து நிற்கப் போவதில்லை என்று சத்தியமும் செய்கிறார்.

அதே நஏரம் பிரபுவின் தங்கை கணவரான ராதாரவி தனது மகள் திரிஷாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் சூரிக்கு ஒன் சைட் லவ்வு.. ஆனால் இந்த நேரத்தில் திரிஷாவுக்கும், இன்ஸ்பெக்டர் ஜான் விஜய்க்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டி சென்னைக்கு செல்லும் ஜெயம் ரவியும், சூரியும் தங்களால் ஆன அனைத்து வழிகளையும் செய்கிறார்கள். பலனில்லை.

ஆனால் விதி வேறு மாதிரி விளையாட.. போலி என்கவுண்டரில் ஆட்களை கொலை செய்த குற்றத்திற்காக மணமேடையிலேயே ஜான் விஜய் கைதசாகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையில் உடனே ஜெயம் ரவியே மாப்பிள்ளையாகிவிடுகிறார். இதனால் ஒரே நேரத்தில் சூரி மற்றும் அஞ்சலியின் கோபத்திற்கும் ஆளாகிறார் ஜெயம் ரவி.

சென்னைக்கு வந்து குடியேறுகிறார்கள் தம்பதிகள். ஆனால் திரிஷாவிற்கு ஜெயம ரவியைப் பிடிக்கவில்லை. அவருடன் வாழ மறுக்கிறார். டைவர்ஸ் கேட்கிறார். தன் ஊருக்கு வந்து தன்னுடன் ஒரு மாதம் இருந்தால் டைவர்ஸ் ஒப்பந்த்த்தில் கையெழுத்திடுவதாக சொல்கிறார் ஜெயம் ரவி. டைவர்ஸ்தான் வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் த்ரிஷா இதற்கு ஒத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார்.

அங்கே சூரியும், அஞ்சலியும் ஜெயம் ரவியை பழி வாங்கக் காத்திருக்க.. இந்த நேரத்தில் ஊர் வந்து சேர்கிறார்கள் தம்பதிகள். அடுத்து என்ன நடந்தது..? டைவர்ஸ் ஆகி பிரிந்தார்களா..? அல்லது சேர்ந்தார்களா..? என்பதுதான் மிச்சம், மீதிக் கதை.

ஜெயம் ரவியின் நடிப்புக்கு நிறையவே தீனி போட்டிருக்கிறார் இயக்குநர். இவரும் சூரியும் நடிப்பில் ஒருவரையொருவர் போட்டி போட்டிக் கொண்டு நடித்திருக்கிறார்கள். தங்களால் முடிந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். டைவர்ஸ் கேட்கும் திரிஷாவிடம் அமைதியாக தன் கருத்தைச் சொல்லுமிடம்.. அப்பாவிடம் தான் வாழ்க்கையையே தொலைத்துவிட்டதாக உருக்கமாகச் சொல்லும் இடங்கள் என்று சிலவற்றில்தான் மிதமான நடிப்பை காட்ட வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

மீதமான காட்சிகளெல்லாம் எகத்தாளம், காமெடி, ஏமாற்றம், புலம்பல் என்று அனைத்தையும் கலந்து அடித்திருக்கிறார் ஜெயம் ரவி. அவருடைய ரசிகர்களுக்கு இது நிச்சயம் பிடித்திருக்கும். உடன் நடித்திருக்கும் சூரி, விவேக், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அஞ்சலி, த்ரிஷா இவர்களால் காட்சிகளும் வேகமாக நகர்வதால் ஜெயம் ரவிக்கு இது சற்று ரிலாக்ஸான வேடம்தான்.

சூரியை ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ என்று இந்தப் படத்திற்கு பின்பு சொல்வார்கள் என்று ஆரூடம் சொல்லியிருக்கிறார் ஜெயம் ரவி. அந்த அளவுக்கு இல்லையென்றாலும் மற்றவர்களை போல கடியெல்லாம் இல்லாமல்.. கதைக்கு ஏற்றாற்போல், கேரக்டருக்கு ஏற்றாற்போல் வசனத்தை தெள்ளத் தெளிவாக்கி காமெடியாக்கியிருக்கிறார் சூரி. வடிவேலு மாதிரி தன் உடம்பை பல காட்சிகளில் புண்ணாக்கி நம்மை சிரிக்க வைக்கிறார். இந்த ஒரு பார்முலா இருந்தாலே போதும்.. கோடம்பாக்கத்தில் பொழைச்சுக்கலாம்.

20 நிமிடங்களே ஆனாலும் விவேக் கலக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவருடைய போர்ஷனில் இருக்கும் சஸ்பென்ஸும், அது தொடர்பான வசனங்களும், செல் முருகனின் டைமிங் காமெடியும் அந்த 20 நிமிடங்களையும் நொடியில் கடக்கச் செய்துவிட்டது.

இடைவேளைக்கு பின்பு காமெடி கலாட்டாவே நடந்திருப்பது நான் கடவுள் ராஜேந்திரனாலும்தான். அடிப்பதற்காக தனக்கு பதிலாக ரோபட்டை செட்டப் செய்து வைத்திருப்பதும், கமிஷனருடனான மீட்டிங்கில் பொறுமையிழந்து போய் கத்திக் குவிப்பது.. தன் கல்யாண நாள் இரவன்று விடிய விடிய போனில் அறிவுரை சொல்கின்ற காட்சிகளில் நான் ஸ்டாப் காமெடி. வயிற்று வலியே வரும் அளவுக்கு சிரிக்க வைத்திருக்கிறார் ராஜேந்திரன். வெல்டன் இயக்குநர் ஸார்..

அஞ்சலி குண்டு தர்ப்பூசணி போல பூசியிருக்கிறார். கொஞ்சம் உடம்பை குறைத்தால் நல்லது. கேரக்டருக்கு ஏற்றாற்போல் கவர்ச்சியும் காட்டியிருக்கிறார். கொஞ்சூண்டு நடிக்கவும செய்திருக்கிறார். அந்தக் கொஞ்சலில் மற்றவர்களிடம் வரவில்லையே என்பதால் அஞ்சலியை இதில் மிஞ்ச ஆளில்லைதான்..

த்ரிஷாவுக்கு மெச்சூர்டான கேரக்டர். முகத்தில் வயது கூடி வருவது தெரிகிறது. இதற்குள்ளாக அம்மணி ரிட்டையர்ட்மெண்ட் வாங்கினால் நல்லதுதான்.  ‘நான் கடவுள்’ ராஜேந்திரனிடம் போனிலேயே மாறி மாறி சண்டையிடுவதிலும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சவுண்டு விட்டு ஜெயம் ரவியை லாக்கப்பில் வைக்கும்படி சொல்லிவிட்டுப் போகும்போது கோபத்தைக் கொட்டியிருக்கிறார். ரசிக்க வைத்திருக்கிறார் சில காட்சிகளில்.  தமிழ்ச் சினிமாவுக்கே உரித்தான கிளைமாக்ஸ் என்பதால் சப்பென்று முடியும் அந்த டிவிஸ்ட்டினால் பெரிய அளவுக்கு த்ரிஷாவால் ஸ்கோர் செய்ய முடியவில்லை என்பதும் உண்மை.

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் பளிச்சென்று தெரிகிறது. ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சிகளில் ஹீரோ, ஹீரோயினைவிட பதிவாக்கம் அழகாக இருக்கிறது. கேமிரா புண்ணியத்தால் பல ஷாட்டுகள் ரசிக்க வைக்கின்றன.

தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவுக்கு இருக்கின்றன. ‘பல்பு வாங்கிட்டேன் மச்சான்’ பாடல் இன்றைய தர வரிசையில் ஓரிடத்தைப் பிடித்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் கொஞ்சமாக காமெடிக்காக விட்டுக் கொடுத்தமைக்காக தமனுக்கு நமது நன்றிகள்.

முன்பே சொன்னதுபோல முதற் பாதியில் கொஞ்சம் சோர்வாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்புதான் படத்தை வெளியில் பெரிதும் பேச வைத்திருக்கிறது.  

லாஜிக்கெல்லம் பார்க்காமல்.. முழுக்க முழுக்க பொழுது போக்கு என்ற ஒற்றை நோக்கத்தோடு களத்தில் குதித்து ஜெயித்திருக்கிறார் இயக்குநர் சுராஜ். இனி இந்தப் பயணத்தையே இவர் தொடரட்டும் என்று வாழ்த்துகிறோம்.

Our Score