full screen background image

போலி மதுபானங்களை அடித்து நொறுக்கப் போகும் ‘போக்கிரி மன்னன்’

போலி மதுபானங்களை அடித்து நொறுக்கப் போகும் ‘போக்கிரி மன்னன்’

‘ஏழுமலை’ படத்தில் துவங்கி இப்போதைய ‘புலி’ படம் வரையிலும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடனம் அமைத்திருக்கும் நடன இயக்குநர் ஸ்ரீதர் முதல்முறையாக வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

Pokkiri Mannan Movie Stills (15)

கர்நாடகாவைச் சேர்ந்த புதிய தயாரிப்பாளரான ரமேஷ் ரெட்டி தனது ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். படத்தின் பெயர் ‘போக்கிரி மன்னன்’. இந்தப் படத்தில் ஸ்ரீதருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த ஸ்பூதி என்ற ஹீரோயின் அறிமுகமாகியிருக்கிறார். மேலும் சிங்கம்புலி, மயில்சாமி போன்ற பெரும் தலைகளும் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சினிடெக் சூரி , இசை – ஏ.டி.இந்திரவர்மன், பாடல்கள் – இந்திரவர்மன், சிவகாசி ஸ்ரீதர், கவி மாதேஷ், எடிட்டிங் – பகத்சிங், கலை இயக்கம் – ஈ.சங்கர், சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், வினோத், பி.ஆர்.ஓ. – நிகில், எழுதி, இயக்கியிருப்பவர் ராகவ் மாதேஷ். RSSS Pictures சார்பில் எஸ்.தணிகைவேல் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்.

Pokkiri Mannan Movie Stills (11)

நடன இயக்குநராகப் பணியாற்றிய ஸ்ரீதர், சில திரைப்படங்களில்  நடனக் காட்சிகளில் நடன நடிகராக தலையைக் காட்டியிருக்கிறார். இத்திரைப்படத்தில்  அவர் நடிக்க வந்ததே ஒரு அதிர்ஷ்டம்தானாம். படத்தில் நடன அமைப்பு பற்றி பேச வந்த இயக்குநர் ஸ்ரீதரை பார்த்தவுடன் தான் தேர்வு செய்து வைத்திருந்த கதைக்கு அவரே  பொருத்தமாக இருப்பார் என்றெண்ணி நடிக்க்க் கேட்டுக் கொண்டாராம்.

Pokkiri Mannan Movie Stills (6)

இது பற்றி பேசிய நடிகர் ஸ்ரீதர், “ஆனாலும் உடனேயே நான் ஒத்துக்கலை. எங்கப்பா ஒரு நாடக நடிகர். ‘பேபி ஆர்ட்டிஸ்ட்’ என்ற பெயரில் ஒரு நாடக குழுவையே வைத்து நடத்தி வந்தார். சிறு வயதில் அவருடைய நாடகத்தில் நடித்த அனுபவமும் எனக்குண்டு. ஆனாலம் எனக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பதுதான் ஆசையே. அந்த ஆசைக்காக வந்த இடத்தில் ஒரு முறை ச்சும்மா குழுவோடு சேர்ந்து நடனமாட போய் அதுவும் லைக்காகி பின்பு அதுவே தொடர் கதையாகிவிட்டது.

இந்தப் பட வாய்ப்பு வந்தவுடன் அதனை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டேன். ஒரு படம்தானே.. நடித்து பார்ப்போம். கிளிக்காகும்னு நினைக்கிறேன். எனக்கு பொருத்தமான கேரக்டர்தான். ஊருக்குள்ள எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் ஊரைச் சுற்றி வரும் ஒருவனுக்கு ஏற்படும் சில சம்பவங்களும் அதனைத் தொடர்ந்த சம்பவங்களும்தான் இந்தப் படத்தின் கதை. இதுல நானே நடனத்தையும் அமைத்துள்ளேன். அடுத்து எனது பார்வை இயக்குநராவதில் இருக்கிறது. நிச்சயம் ஒரு படத்தை விரைவில் இயக்குவேன்…” என்றார் நம்பிக்கையாக.

 Pokkiri Mannan Movie Stills (5)

படம் பற்றி பேசிய இயக்குநர் ராகவ் மாதேஷ், “இந்தப் படம் ஒரு சின்ன கிராமத்துல கள்ளத்தனமாகத் தயாரிக்கப்படும் போலி மதுவால் ஏற்படும் பிரச்சினைகளை சொல்கிறது. ஹீரோ தற்செயலா அதில் மாட்டிக் கொண்டு, பின்னர் அந்தப் பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுகிறார் என்பதுதான் கதை. இதுக்கு இடையில் இவருக்கு காதலும் உண்டு. சிங்கம்புலி, மயில்சாமியுடன் படம் முழுவதும் வருவது போன்ற காமெடி காட்சிகளும் உண்டு. முழுக்க, முழுக்க பொழுது போக்கு படம்தான். ஆனால் கடைசியாக ஒரு சின்ன மெஸேஜ் வைத்திருக்கிறோம். அது சஸ்பென்ஸ்..” என்றார்.

இதுல எனனங்க சஸ்பென்ஸ் இருக்கப் போவுது..?

‘கள்ளச் சரக்கு குடிக்காதீங்க. நல்ல சரக்காவே குடிங்க’ன்னுதானே..?

Our Score