full screen background image

“யார் அந்த ஜெயலட்சுமி..?” – சஸ்பென்ஸை கூட்டும் ‘சைத்தான்’ படம்..!

“யார் அந்த ஜெயலட்சுமி..?” – சஸ்பென்ஸை கூட்டும் ‘சைத்தான்’ படம்..!

கிரேக்க வரலாற்றின்படி ‘மம்மோன்'(பேராசை), ‘அசிமோடெஸ்'(காமம்), ‘லேவியதன்'(பொறாமை)  ஆகிய மூன்றும்தான், துஷ்ட தேவதைகளில் மிக வலிமையான சைத்தான்களாக கருதப்படுகிறது. ஆனால் அந்த மூன்றுக்கும் வழிகாட்டியாக திகழ்வது லூசிபர்(கர்வம்) என்னும் சைத்தான்.

தற்போது இவைகள் அனைத்தையும்விட புதிய ‘சைத்தான்’ விஜய் ஆண்டனிதான் அதிக பயத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அந்த சைத்தானை கட்டுப்படுத்தும் ஒரே சக்தி, மற்றொரு ‘சைத்தான்’னாகிய  இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு மட்டும்தான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.  

சென்னை லயோலா கல்லூரியில் இயக்கம் சார்ந்த படிப்பை முடித்து விட்டு, தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்’ திரைப்படத்தில், இயக்குநர் வெற்றிமாறனுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.  

நெசவாளர்கள், மீனவர்கள், கொடைக்கானல் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோரின் உடல்களை மீட்டு வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாறு, பொம்மலாட்டம் ஆகியவற்றை பற்றி அவர் எடுத்த  ஆவண படங்கள் அனைத்தும், திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

“ஒரு சிறந்த திரைப்படத்திற்கு ஆணிவேர், ஓர் சிறந்த நடிகர். ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடிப்பதே அந்த சிறந்த நடிகரின் தனித்துவமான சிறப்பம்சம். அவர்தான் விஜய் ஆண்டனி சார். நடிப்பு என்றால் ‘சைத்தான்’ ஆக மாறக் கூடியவர் அவர். என்னுடைய முதல் படத்திலேயே அவருடன் இணைந்து பணியாற்றியதை நினைத்து எனக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

‘சைத்தான்’ படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை சுவாரசியத்தின் உச்சிக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரெயிலரை பார்த்த ரசிகப் பெருமக்கள் பலரும் யார் அந்த ஜெயலட்சுமி என்று தங்களுக்குள் கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் எங்களுக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி. ஜெயலட்சுமி என்கிற அந்தப் பெயருக்கும், சைத்தானுக்கும் என்ன தொடர்பு.. எல்லாம் சஸ்பென்ஸாக இருக்கிறதே என்று சினிமா ரசிகர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ‘ஜெயலட்சுமி’ யார் என்பதை தெரிந்து கொள்ள ரிலீஸ்வரையிலும் காத்திருக்கத்தான் வேண்டும்….” என்று சஸ்பென்ஸுடன் கூறுகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

Our Score