“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி…” – திரையுலக பிரமுகர்களின் பாராட்டு..!

“திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி…” – திரையுலக பிரமுகர்களின் பாராட்டு..!

‘பிச்சைக்காரன்’ படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததையடுத்து மாநிலம் தாண்டியும் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இதனால் அவருடைய அடுத்த படமான ‘சைத்தான்’, ‘எமன்’ போன்றவைகளின் மீது அதிக எதிர்பார்ப்பு இரு மாநில திரையுலகத்திலும் நீடிக்கிறது.

தன்னுடைய திரைப்படங்களுக்கு  எதிர்மறையான தலைப்புகளை தேர்வு செய்து, அதன் மூலம் வெற்றி வாகையை சூடி வருவதுதான் விஜய் ஆண்டனி மீதான ஆச்சரியத்திற்கு இன்னொரு பெரிய காரணமாக இருக்கிறது.

saithan-poster-3

இதனால்தான் அவருடைய அடுத்த படமான ‘சைத்தான்’ ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோடு அமோக வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது. தெலுங்கில் ‘பெத்தலுடு’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் ‘சைத்தான்’ திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

img-63 

‘சைத்தான்’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரும் – தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் டாக்டர் கே.கணேஷ் – ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’, தயாரிப்பாளர் டி சிவா – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பாபு, தயாரிப்பாளர் ஷிபு தமீன், நடிகர் சிபிராஜ், இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேல், இயக்குநர் சசி(பிச்சைக்காரன்), இயக்குநர் ஆனந்த்(இந்தியா – பாகிஸ்தான்), இயக்குநர் நிர்மல் குமார்(சலீம்), இயக்குநர் செந்தில்குமார்(வாய்மை), விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் அருள்பதி, தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், டாக்டர் மனோஜ் பெனோ, ‘வின்வின் மீடியா’ வேணுகோபால், தயாரிப்பாளர்கள் ‘5 ஸ்டார்’ கதிரேசன், ‘ஸ்ரீகிரீன்’ சரவணன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த விழாவில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கதாநாயகன் விஜய் ஆண்டனி, கதாநாயகி அருந்ததி நாயர், கிட்டி கிருஷ்ணமூர்த்தி, நடிகை மீரா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயத், படத் தொகுப்பாளர் வீரா செந்தில் மற்றும் கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

விழாவில் முதலில் படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தின் 5 நிமிட துவக்கக் காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தின் கதை மனோதத்துவ ரீதியிலானது என்பது அந்தக் காட்சிகளை பார்த்தபோது தெரிந்தது. படத்தின் இயக்குநரான பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “இந்தப் படம் எழுத்தாளர் சுஜாதாவின் ஒரு கதையை அடிப்படையாகக் கொண்டது…” என்று சொன்னார். 

t-siva

இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, “தமிழ்த் திரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ இப்போதைக்கு விஜய் ஆண்டனிதான். ‘தன்னம்பிக்கை’ என்னும் வார்த்தைக்கே உதாரணமாக இருக்கும் அவரின் ஒட்டு மொத்த வெற்றிக்கும் முதுகெலும்பாய் இருப்பவர், அவருடைய மனைவி பாத்திமா விஜய் ஆண்டனிதான்….” என்று பாராட்டினார்.   

“விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ திரைப்படத்தை பார்த்த பிறகு, நான் அவருடைய தீவிர ரசிகனாக ஆகிவிட்டேன். அவர் தேர்ந்தெடுத்து நடித்த  ஒவ்வொரு திரைப்படமும் எனக்கு ரொம்ப பிடித்தவை. அவருடைய அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு அன்றைக்கே அவருக்கு போன் செய்து பாராட்டியிருக்கிறேன்.  தற்போது அவருடைய ‘சைத்தான்’ அவதாரத்தை காண நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்.

isari-ganesh-1

என்னுடைய நெருங்கிய நண்பரான ‘ஆரா சினிமாஸ்’  மகேஷ் கோவிந்தராஜ் இந்த ‘சைத்தான்’ திரைப்படத்தோடு இணைந்திருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சியை தருகிறது.  ‘சைத்தான்’ திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்….” என்று கூறினார் தயாரிப்பாளர் டாக்டர்.ஐசரி.கே.கணேஷ்.

ygm-1

அடுத்து நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில் நுட்பக் கலைஞர்களை மேடையேற்றி அவர்களை முதலில் பேச வைத்தவிதத்திற்கு எனது சல்யூட். இதுவே மிகப் பெரிய விஷயம்.

ஒரு திரைப்பட யுனிட் எப்படியிருக்கணும் என்பதற்கு இந்தப் படத்தைத்தான் நான் உதாரணமா சொல்லுவேன். படத்துக்கு எது தேவையோ அதை மட்டும்தான் எடுத்தாங்க. அதுக்கு மட்டும்தான் செலவு செஞ்சாங்க. நான்கூட இருந்து பார்த்தவரைக்கும் தயாரிப்பாளர் பாத்திமா ஆண்டனி அப்படியொரு உழைப்பாளி. அதே சமயம் கண்டிப்பான தயாரிப்பாளராகவும் இருந்தார். இப்படியிருந்தால்தான் இந்தக் காலத்துல படம் தயாரிக்க முடியும். எனக்கே இப்போ இவங்களை பார்த்து நாமளும் ஒரு படம் தயாரிக்கலாமேன்னு தோணுது. அந்த அளவுக்கு இந்தப் படத்துல நடிக்கும்போது தயாரிப்பு ஆசை எனக்கே வந்திருச்சு.

இந்தப் படம் ஒரு வித்தியாசமான கதை. படத்தோட டிரெயிலரை பார்த்தப்பவே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ரொம்ப வித்தியாசமா எடிட்டிங் செஞ்சிருக்காங்க. விஜய் ஆண்டனி ரொம்ப தன்னம்பிக்கையான மனுஷன். பாஸிட்டிவ் எனர்ஜி உள்ளவர். அவருடைய முந்தைய படங்களை போலவே இந்தப் படமும் நிச்சயம் ஜெயிக்கும்ன்னு நான் உறுதியா நம்புகிறேன்..” என்றார்.

விழாவில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “நான் ஒரு மூணு மாதம் பெட்ல இருந்தேன். ரொம்ப ஆடிட்டேன்னு நினைக்கிறேன். அதான் ஆண்டவனா பார்த்து ‘ஆடுனது போதும்.. ரெஸ்ட் எடுடா’ன்னு சொல்லி வீட்ல படுக்க வைச்சுட்டான்.

பாத்திமா வந்து ‘இந்த நிகழ்ச்சிக்கு வாங்க’ன்னு கூப்பிட்டாங்க. நான்தான் ‘உடல் நிலை சரியில்லாததால் எங்கேயும் வெளில போறதா இல்லை’ன்னு சொன்னேன். நேத்து சாயந்தரம் 6 மணிக்கு விஜய் ஆண்டனியே எனக்கு போன் செஞ்சு ‘நீங்க வந்தா நான் சந்தோஷப்படுவேன் ஸார்’ என்றார். அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் இப்போ இங்க வந்திருக்கேன். நான் வந்தால் அவருக்கு சந்தோஷம்ன்னா, இதைவிட பெரிய சந்தோஷம் எனக்கும் வேற எதுவுமில்லை.

விஜய் ஆண்டனியை நான்தான் தமிழ்ச் சினிமாவுலகத்துக்கு அறிமுகப்படுத்தினேன். அவர் என்கிட்ட வர்றதுக்கு முன்னாடியே ‘பூ’ சசிகூட ஒரு படத்துக்கு இசையமைச்சார். ஆனால் அந்தப் படம் வளரலை. அதுக்கப்புறம்தான் என்கிட்ட வந்தார்.

அப்போ நான் ‘சுக்ரன்’ படம் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரேயொரு பாடலுக்கு டியூன் போட்டு காட்டினார். எனக்குப் பிடிச்சிருந்தது. உடனேயே ‘நீதான் இந்தப் படத்துக்கு மியூஸிஸ் டைரக்டர்’ன்னு சொல்லி புக் செஞ்சேன். அதுக்கப்புறம் அவர் பெரிய, பெரிய நடிகர்களின் படங்களுக்கெல்லாம் இசையமைத்து இப்போ பெரிய ஆளாயிட்டாரு. அப்படியே நடிகராவும் மாறிட்டாரு.. அதுலேயும் எனக்கு ரொம்ப சந்தோஷம்.

அவருக்கு ‘விஜய் ஆண்டனி’ன்ற பெயரைகூட நான்தான் வைச்சேன். அதை அவர் மறந்திருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். ‘சுக்ரன்’ படத்தப்போ ‘உங்க பெயர் என்ன?’ன்னு கேட்டேன்.  ‘அக்கினி’ன்னு சொன்னார். அக்கினின்னா நெருப்பு. அதை பெயரா வைக்குறது எனக்கு சரின்னு படலை. ‘உங்க நிஜ பெயர் என்ன?’ன்னு கேட்டேன். ‘விஜய் ஆண்டனி’ன்னாரு.

‘அந்தோணி’ன்றதைத்தான் ‘ஆண்டனி’ன்னு எல்லாரும் சொல்றாங்க. ‘அந்தோணி’தான் கடல் தெய்வம். கடற்கரையோர ஊர்களில் எல்லாம் ‘அந்தோணியார் ஆலயம்’ன்னு கோவில் நிச்சயமா இருக்கு. அந்த தெய்வத்தின் அருள் இருந்தால்தான், கடலுக்குள் போயிட்டு உயிரோட திரும்ப முடியும். அப்படியொரு சக்தி படைத்தது அந்த தெய்வம்.

‘இதுவே நல்லாத்தான இருக்கு. நல்ல பெயரை உங்க பெற்றோர்கள் வைச்சிருக்காங்க. இதையேன் வேணாங்குறீங்க. இதையே வைச்சுக்குங்க..’ என்றேன். அவரும் சட்டென்று யோசிக்காமல் ஒத்துக்கிட்டாரு.

அவர்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அவருடைய தன்னம்பிக்கைதான். ரொம்ப பாஸிட்டிவ்வான மனிதர். எப்பவும் பாஸிட்டிவ்வாகத்தான் பேசுவார். நெகட்டிவ் வார்த்தைகளே அவர் வாயிலிருந்து வராது. “இப்போ ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறேன்.. நிச்சயம் ஜெயிப்பேன் ஸார்..” என்றார். ஜெயிச்சுட்டார். அதுதான் விஜய் ஆண்டனி.

இவர் நடித்த படங்களின் தலைப்புகளெல்லாம்  எதிர்மறையாக இருந்தாலும், அந்த படங்களின் கதைகள் அனைத்துமே ரசிகர்களின் மனதை தொடுற மாதிரிதான் இருக்கு. அதனால்தான் தொடர்ச்சியா ஹிட் கொடுத்துக்கிட்டேயிருக்காரு. இப்போ தமிழ்நாடு தாண்டி ஆந்திராவிலும் அவர் ஹிட்டான ஹீரோவா வலம் வருவதை பார்த்தால், இன்னும் சந்தோஷமா இருக்கு.

என்னுடைய மகன் விஜயின் வளர்ச்சியை கண்டு நான் எப்படி சந்தோஷப்படுறனோ, அதேபோல்தான் விஜய் ஆண்டனியின் வளர்ச்சியையும் கண்டும் நான் சந்தோஷப்படுறேன்…” என்று உற்சாகமாக கூறி வாழ்த்தினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Our Score