Selli Cinemas நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர்.செல்வக்குமார், ராம்பிரசாத் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
படத்தில் சரண், பிருத்வி, கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, ஆய்ரா, நீரஜா, தென்னவன், தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – நிரன் சந்தர், இசை, பாடல்கள் – ஷபிர், படத் தொகுப்பு – ஹரிஹரன், சண்டை இயக்கம் – கோட்டீ, நடன இயக்கம் – ஷெரீப், சதீஷ், சாண்டி, ஒலிக் கலவை – எம்.கிதா குரப்பா, கலை இயக்கம் – ராஜூ, சிறப்பு சப்தம் – சேது, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிறுவனம் – செல்லி சினிமாஸ், தயாரிப்பாளர்கள் – ஆர்.செல்வக்குமார், ராம்பிரசாத், வெளியீடு – உருமந்தார் பிக்சர்ஸ், எழுத்து, இயக்கம் – முருகேஷ்.
‘சகா’ என்பதற்கு ‘நண்பன்’, ‘தோழன்’ என்று பொருள் கொள்ளலாம். நேரடி அர்த்தம் மலையாளத்தில் ‘தோழர்’ என்பதுதான். தோழர்களாக இருப்பவர்களின் கதை இது என்பதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள். பொருத்தமானதுதான்..!
‘சத்யா’ என்னும் சரணும், ‘கதிர்’ என்னும் ‘பக்கோடா’ பாண்டியும் நெருங்கிய நண்பர்கள். அனாதைகளாக அப்பா, அம்மா யாரென்றே தெரியவர்கள். இவர்களை சின்ன வயதிலிருந்தே வளர்த்து வருபவர் ஒரு திருநங்கை. இவர்களுக்கு அதிக இடம் அளித்து சொத்தையும் அளிக்கக் காத்திருக்கிறார் அந்த ‘அம்மா’ திருநங்கை.
இதனால் கோபப்படும் திருநங்கையின் உடன் பிறந்த சகோதரர், திருநங்கையை கொலை செய்கிறார். இந்தக் கொலையை நேரில் பார்த்துவிடும் சரணும், பாண்டியும் அவனையும் கொலை செய்துவிட்டு போலீஸில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இருவரும் இன்னமும் மேஜராகவில்லை என்பதால் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்குக் கொண்டு வந்து அடைக்கப்படுகிறார்கள். அதேஜெயிலில் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக கைதான பிருத்விராஜன், தனிக்காட்டு ராஜாவாக தனி ராஜாங்கமே நடத்திக் கொண்டிருக்கிறார்.
உள்ளேயிருக்கும் வார்டன்களுக்கு கையூட்டுக் கொடுத்து குத்துச் சண்டை போட்டியெல்லாம் நடத்துகிறார் பிருத்விராஜன். ஒரு முறை அந்தப் போட்டியில் சரணும் இறங்க பெரும் சண்டையாகிறது.
இந்தச் சண்டையின் பலனாக நண்பர்களான சரணும், பாண்டியும் தனித்தனியே பிரிக்கப்பட்டு வேறு வேறு அறைகளில் அடைக்கப்படுகிறார்கள். இப்போது ஸ்ரீராம் சிறைக்குள் வருகிறார். இவரும் பிருத்வியும் முதலில் மோதிக் கொண்டாலும் பின்பு ராசியாகிவிடுகிறார்கள்.
தனியே சென்ற பாண்டி மீண்டும் ஒரு முறை பிருத்வியிடம் போய் சண்டையிட பிருத்வி அவனை கொலை செய்துவிடுகிறார். இதனை தற்கொலை என்று சிறை நிர்வாகம் அறிவித்து கொலையை மறைக்கிறது. இதற்குள்ளாக பிருத்வி விடுதலையாகி வெளியில் சென்று விடுகிறார்.
தனது நண்பனின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க சபதமெடுக்கிறார் சரண். கிஷோருக்கு தனது காதலியைப் பார்த்து “ஐ லவ் யூ” சொல்லி காதலை உறுதிப்படுத்த வேண்டும் என்று பேராசை. இதற்காகவே சிறையிலிருந்து தப்பிக்க எண்ணுகிறார்கள் சரணும், கிஷோரும். இதையறியும் ஸ்ரீராம் “என்னையும் இந்தக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்…” என்கிறார்.
கிளம்பிய நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் ராம் மாட்டிக் கொள்ள.. சரணும், கிஷோரும் தப்பித்து ஓடுகிறார்கள். இரண்டு இளம் குற்றவாளிகள் தப்பித்துவிட்டார்கள் என்பதையறிந்த சீர்த்திருத்தப் பள்ளியின் கண்காணிப்பாளர் எப்படியாவது காதும், காதும் வைத்தாற்போல் பையன்களைப் பிடிக்க நினைக்கிறார். இதற்கு ஜெயிலர் தீனா, தான் தயார் என்று சொல்லி தேடத் துவங்குகிறார்.
தப்பித்து ஓடியவர்கள் தாங்கள் நினைத்ததை சாதித்தார்களா..? அல்லது மீண்டும் பிடிபட்டார்களா..? என்பதுதான் இந்த ‘சகா’ படத்தின் திரைக்கதை.
நடிகர்களில் சரண், பிருத்வி, கிஷோர், ஸ்ரீராம், பாண்டி ஐந்து பேருக்கும் சம அளவிலேயே திரைக்கதையை அமைத்திருக்கிறார். சரண், ‘வட சென்னை’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தம்பியாக நடித்தவர். நண்பனுக்காக உயிரையே கொடுப்பேன் என்னும் கேரக்டர்.
மிகச் சரியான கேரக்டர்கள் கிடைத்தால் தமிழ்ச் சினிமாவில் இவருக்கு ஒரு நல்ல இடம் கிடைக்க வாய்ப்புண்டு. பழி வாங்கும் கதைதானே என்றாலும் இவரது நடிப்பு காட்சிகளைப் பார்க்க வைத்திருக்கிறது.
இதேபோல் கிஷோரின் கதையில் ஒரு உயிர்ப்பு இருக்கிறது. சரணை காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு தனது காதலியின் வீட்டுக்கு தீனாவையும், தென்னவனையும் கூட்டி வந்து காதலியிடம் “ஐ லவ் யூ” சொல்லும் காட்சியில் உருக்கமாக நடித்திருக்கிறார். சிம்ப்ளி சூப்பர்ப். இந்தக் காட்சியையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
நண்பனுக்காக உயிரைவிடும் பாண்டியும் ஒரு சோகத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறார். இறுக்கமான முகத்தோடு ஹீரோவா, வில்லனா என்பதே தெரியாமல் கிளைமாக்ஸில் ஒரு டிவிஸ்ட்டுக்கு இடம் பிடித்திருக்கும் ஸ்ரீராமும் கவனத்தை ஈர்க்கிறார்.
வில்லன் கேரக்டருக்கு கொஞ்சமும் பொருத்தமே இல்லாத முகத்துடன் இருக்கும் பிருத்விக்கு வில்லன் கேரக்டரை கொடுத்திருக்கிறார்கள். சப்பையாக இருக்கிறது.
நாயகிகளில் நீரஜா குறிப்பிடும் அளவுக்கு நடித்திருக்கிறார். இன்னொரு நாயகியான ஆயிரா பாடல் காட்சியில் அழகாய் வந்து போகிறார். நடிக்கும் அளவுக்கு படத்தில் இவருக்கான ஸ்கோப் இல்லை.
ஜெயிலராக சாய் தீனா மிரட்டுகிறார். அவரது முரட்டு உருவமும், அவர் காட்டும் முக பாவனைகளும், அவரது இரக்கமில்லாத சுபாவமும், இப்படியொரு அதிகாரி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்துவிடக் கூடாதென நமது மனம் பதைபதைக்கிறது.
இதேபோல் வார்டன் தென்னவன்.. நயமாகப் பேசியே நயவஞ்சகம் செய்யும் பாதகன் என்னும் கேரக்டருக்கேற்றவாறு நடித்திருக்கிறார்.
ஸ்ரீராமின் அக்காவாக நடித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணாவின் கதாபாத்திரம் நன்றாக இருந்தாலும், அந்தக் கிளைக் கதை அவ்வளவு அழுத்தமாக மனதில் பதியவில்லை.
நிரன் சந்தரின் ஒளிப்பதிவில் பல ஸ்டைலிஷான ஷாட்டுக்கள் நிரம்பியிருக்கின்றன. ஷபீரின் இசையில், ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ பாடல் படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அடையாளம். சரணும், ஆய்ராவும் இந்தப் பாடல் காட்சியில் மிக அழகாக இருந்தனர்.
நட்புக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற பழைய கதையை இதில் மீண்டும் புதிதாக தோண்டியெடுத்திருக்கிறார்கள்.
பழைய கதைதான் என்றாலும் சின்னச் சின்னத் திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாகப் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.
பெட் கட்டி குத்துச் சண்டை போடுவது, சிறையிலையே கொலை செய்வது.. என்று ஒரு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் என்னவெல்லாம் நடக்கக் கூடாததோ அதையெல்லாம் படத்தில் காட்சிகளாக வைத்திருக்கிறார்கள்.
இதன் மூலமாக, தவறு செய்பவர்கள் ஜெயிலுக்கு போனாலும் சுதந்திரமாக வாழலாம்.. கெத்து காட்டலாம் என்கிற மாய எண்ணத்தை இத்திரைப்படம் தோற்றுவித்திருக்கிறது.
எந்தவித லாஜிக்கும் பார்க்காமல் சிறுவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.. இதைத்தான் செய்வார்கள் என்று இயக்குநர் தன் பார்வையில் படத்தைக் கொண்டு போயிருக்கிறார்.
சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி பற்றிய காட்சிகள் முற்றிலும் நம்ப முடியாதவை. லாஜிக் எல்லை மீறல் உடையவை. எந்த சிறுவர் சீர்த்திருத்த ஜெயில் அதிகாரியிடமும் துப்பாக்கி இருக்கவே இருக்காது. அங்கிருந்து ஒருவர் தப்பித்துப் போனால் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் செய்ய வேண்டும். அந்தக் காவல் நிலைய போலீஸார்தான் தேடுதல் வேட்டையைத் தொடர வேண்டும். தப்பியோடியவர்களைப் பிடிக்க வேண்டும். பிடிபட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திரும்பவும் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்குக் கொண்டு வர வேண்டும். இதுதான் நடைமுறை.
இதனை முற்றிலும் உடைப்பதுபோல சீர்த்திருத்தப் பள்ளியின் ஜெயிலரான சாய் தீனாவே தப்பியோடியவர்களைத் தேடுவதை போலவும், இதற்கு வார்டன் தென்னவன் துணை போவது போலவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இதைவிட காமெடி வார்டன் தென்னவனே.. ஜெயிலர் சாய் தீனாவின் துப்பாக்கியால் கிஷோரைச் சுட்டுக் கொல்கிறாராம். நல்லாயிருக்குய்யா திரைக்கதை..?!
இப்போ போலீஸ் வந்து விசாரித்தால் யாருடைய துப்பாக்கி..? யார் சுடச் சொன்னது..? ஜெயிலர் துப்பாக்கி வைத்திருப்பாரா..? இதையெல்லாம் கேட்க மாட்டாங்களாக்கும்..! இயக்குநர் ரொம்ப சிந்திச்சிட்டாரு போலிருக்கு..!
இருந்தாலும் இயக்குதல் வேலையை சரியாகவே செய்திருக்கிறார் இயக்குநர். அதில் தவறில்லை. எழுத்துப் பணியில்தான் குறைபாடு. அடுத்தப் படத்தில் திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம்.