full screen background image

“இலங்கைப் பிரச்சினை பற்றித் தமிழில் படமெடுக்கப் பயம் ஏன்..?” – ஈழ எழுத்தாளர் மாத்தளை சோமு கேள்வி!

“இலங்கைப் பிரச்சினை பற்றித் தமிழில் படமெடுக்கப் பயம் ஏன்..?” – ஈழ எழுத்தாளர் மாத்தளை சோமு கேள்வி!

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் மாத்தளை  சோமு. ஈழத்து மக்கள் வாழ்வியலை, போராட்டங்களை, வலிகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்தி வருபவர்.

புலம் பெயர்ந்து வாழும் அவர் இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.   25 நூல்களுக்கும் மேல் படைத்துள்ள அவர், அண்மையில் சென்னை வந்திருந்தார். அப்போது தமிழ்த் திரையுலகம் குறித்து அவர் அளித்த பேட்டியின் சுருக்கம் இது :

உங்களுக்கும் திரைப்படத்துக்குமான தொடர்பு பற்றி..?

நான் இலங்கையில் இருந்தபோது என் சிறுவயதில் நினைவு தெரிந்து பார்த்த படம் ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’. மாத்தளையில் இருந்த தாஜ்மகால்  திரையரங்கத்துக்கு அப்பாவுடன்தான் போனேன். ஆனாலும் கூட்டத்தில் காணாமல்போய்விட்டேன். ஒலிபெருக்கியில் எல்லாம் அறிவிப்பு செய்து தேடிக் கண்டு பிடித்து அப்பாவிடம் சேர்க்கப்பட்டேன்.

சற்றே வளர்ந்த பின் பார்த்த படம் ‘மாடோல் திவா’ ஒரு தனித் தீவில் மாட்டிக் கொண்ட ஒருவனின் கதை. அதை என் 16-வது வயதில் பார்த்தேன். அது ஒரு சிங்கள மொழிப் படம். சிங்கள மொழிப் படம் எல்லாம் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருந்தார்கள். ஆனால்  ஒரு யதார்த்தமான, வாழ்வியலைக் கூறிய அப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் யதார்த்தம் தத்துவம், கலையம்சம், வாழ்க்கை எல்லாமும் இருந்தன. கலைக்கு மொழி பேதம் கூடாது என்று நினைக்க வைத்த படம் அது. 

நான் அடிப்படையில் சிவாஜி ரசிகன். நான் பார்த்தவை பெரும்பாலும் சிவாஜி படங்கள்தான். பிறகுதான் எம்.ஜி.ஆர் படங்கள் சிலவற்றை பார்த்தேன் .

பிறகு சர்வதேச அளவிலான படங்கள் பார்த்த பிறகு தமிழ்ப் படங்கள் மீதான என் மதிப்பீடு மாறியது.  சிலர் சொல்வதைப்போல சிவாஜியின் நடிப்புகூட மிகை நடிப்போ என்று எண்ண வைத்தது. இருந்தாலும் என் இளமைக் காலத்தில் என்னுள் ராஜ சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தவர் சிவாஜிதான்.  நான் விரும்பிப் பார்த்த அவரது படங்களைச் சொன்னால் ‘பாலும் பழமும்’, ‘பாச மலர்’,  ‘ஆலய மணி’, ‘திருவிளையாடல்’, ‘திருவருட் செல்வர்’,  ‘தங்கப் பதக்கம்’, ‘கெளரவம்’ எனப் பட்டியல் நீளும். இப்படி  அவர் படங்களை வெறித்தனமாகப் பார்த்த காலமுண்டு.

பிறகு பல தரப்பட்ட பலமொழிப் படங்களையும் பார்க்கத் தொடங்கினேன். ஆஸ்திரேலியா போன பிறகு மேலைநாட்டுப் படங்கள் பார்த்தேன். அங்கே ஆஸ்திரேலியாவில்  எஸ்.பி.எஸ். என்று அரசு ஒர டிவியை நடத்துகிறது. அதாவது Special Broadcasting Service  என்கிற  அத்தொலைக்காட்சியைச் சிறப்புப்  பன்னாட்டுக் கலாச்சாரச் சேவைக்காக அரசு நடத்துகிறது.

அதில் ஈரான். கொரியன் போன்ற அயல்நாட்டின்  படங்கள் ஒளிபரப்பாகும். வர்த்தக தன்மையின்றி மக்களிடம் சென்றடையாத படங்கள்  பெரும்பாலும் வெளிவரும். அதில் தமிழ்ப் படங்களே வராது. ஆனால் அதில் வந்த வேறு மொழிப் படங்கள் எல்லாம் சுடப்பட்டு தமிழ்ப் படங்களாக வரும். அதில் போடப்பட்டதாக நான் அறிந்த படம் ‘காக்கா முட்டை’ மட்டும்தான். அது எனக்கு மிகவும் பிடித்த படம்.

தற்காலத்திய தமிழ்ப் படங்கள் பற்றி:.?

தமிழில் இப்போதெல்லாம் வர்த்தக ரீதியிலான படங்கள்தான் அதிகமாக  வருகின்றன. கதாநாயகனை உயர்த்திப் பிடிக்கும் கதைகள்தான் பெரும்பாலும்  படங்களாக வருகின்றன. அதில் நடிக்கும் கதாநாயகிகள் வட நாட்டிலிருந்து வெள்ளைத்தோல் உள்ளவர்களாக, நடிகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.  தமிழ்க் கதாநாயகிககளின் நிறம்  அதுதானா..? தமிழச்சிகளின் நிறமா அது..? தமிழ்ப் பெண்களின் நிறமா அது..? தமிழ்ப் படத்தில் காட்டப்படுவது தமிழரின் வாழ்வோ,.பண்பாடோ அல்ல. வருகிற பாத்திரங்களிலும் தமிழ் ஆத்மா இல்லை.

தமிழ்ச் சினிமாவின்   நம்பிக்கையாகத் தெரிவது என்று எதைக் கூறுவீர்கள்?

முழுக்க வணிக மயமாகிப் போன தமிழ் திரையுலகில் வந்துள்ள படம்தான் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’. இன்றைய சூழலில் இப்படியும் படமெடுக்க முடியும் என்றால் அவர்களின் துணிச்சலைப் பாராட்டியே ஆகவேண்டும். நிச்சயமாக அது ஒரு மாறுபட்ட முயற்சிதான். இப்படிப்பட்ட முயற்சி இதற்கு முன்பு யோசித்திருக்க மாட்டார்கள். இதைப் பார்க்கும்போது  தமிழ்ச் சினிமாவில் நம்பிக்கை பொறி தென்படுகிறது.

தமிழ்ப் படங்கள் சீனா, ரஷ்யா போன்ற உலக நாடுகளில் வெளியாகி வசூலை அள்ளுகிறதே?

இதில் பெருமைப்பட ஒன்றுமே இல்லை. தமிழனின் கதையாக இல்லாத தமிழனின் வாழ்க்கை இல்லாத சற்றும் யதார்த்ததம் இல்லாத இந்த மாதிரியான வாத்தக ரீதியிலான திரைப்படங்கள், சினிமாக் கலைக்கு நேர்மை செய்யாதவை. இப்படிப்பட்ட  போலியான தயாரிப்புகளால் ஏமாற்றி செய்யப்படும் வியாபாரம் மனசாட்சிக்கு எதிரானது.

உலக நாடுகளில் வெளியிடுகிறார்களே தவிர விருதுகள் பரிசுகள் வாங்குகிறர்களா..?  தமிழ்த் திரைப்படங்களைப் புதிய தரத்துக்கு- உலகத் தரத்துக்கு இட்டுச் செல்லும் பணியை இப்படிப்பட்ட படங்கள் துளியும் செய்யாது. மீண்டும் சொல்கிறேன். போலியாகக் கட்டமைக்கப்படும் இவ்வகை வியாபாரப் படங்களால் வியாபாரிகளுக்கு வருகிற பணத்தைத் தவிர கலைக்கு எதுவும் நிகழப் போவதில்லை.

திரையுலகம் சார்ந்து உங்களின் ஆதங்கம்…? 

எனது ஆதங்கம் வருத்தம் என்னவென்றால் வார்த்தக ரீதியிலான படங்களின் நாயகர்கள் யாரும் நல்லவர்களாக இருப்பதில்லை. ரவுடிகளாக, அடியாட்களாக இருக்கிறார்கள். கூலிப் படை வைத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களில் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி நடிகர்கள் நடிக்கிறர்கள்.

இப்படி நடித்தே தங்களுக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, வியாபார வட்டத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதன் மூலம் ரசிகர்களிடம் நாயக வழிபாட்டை ஊக்குவிக்கிறார்கள். அதன் விளைவு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இலங்கையிலும் விளைகிறது.

இந்த நாயக வழிபாட்டு நோய் இலங்கைவரை பரவி விட்டது. யாழ்ப்பாணத்தில்கூட விஜய்யின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறான். இது மிகவும் ஆரோக்கியமற்ற அபத்தான போக்கு. இப்படிப்பட்ட தனி நபர் வழிபாட்டை வளர்த்துவிட்டுப் படங்களை ஓடவிட்டு அரசியலுக்கு வரவும் நினைக்கிறார்கள். எந்தப் பொறுப்பும் கவலையும் இல்லாமல் அடுத்த முதல்வர் தாங்கள்தான் என்கிற கனவில் மிதக்கிறார்கள். 

வெளிநாட்டு வியாபாரம் என்று கூறி முழு வர்த்தகமாகிவிட்ட சினிமாவில் தரம் மிகவும் குறைந்து விடடது. தங்க மயில் விருதுகள் வாங்கி ஒரு காலத்தில் தரமாக இருந்த மலையாளத் திரையுலகமும்கூட இன்று கெட்டுப் போய்விட்டது. துபாய், அரேபிய நாடுகளின் வியாபாரத்தை முன் வைத்து  முற்றிலும் வணிக மயமாகி விட்டது.

மேலைநாடுகளிலும்கூட சினிமா நட்சத்திரங்களுக்கு மவுசு உண்டு.  ஆனால் கட் அவுட், பூமாலை, பாலாபிஷேகம் எல்லாம் அங்கு இருக்காது. இப்படிப்படட்ட வெறித்தனமான முட்டாள்தனமான கூட்டம் அங்கில்லை. ரஜினி படம் பார்க்க காசு கொடுக்காத பெற்றோரை மகன் தாக்கினான் என்றெல்லாம் செய்திகளைப் படித்து வேதனைப்பட்டேன்.

நீ சினிமா பார்க்க பெற்றோரைத் துன்புறுத்தலாமா? வெளிநாடுகளில் இதற்கெல்லாம் அப்பா அம்மா காசு கொடுக்க மாட்டார்கள். தானே பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டு சம்பாதித்துதான் அங்கு படிக்க வேண்டும்; படம் பார்க்க வேண்டும் .

இலங்கைப் பிரச்சினையைப் படமாக எடுப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்..?

இலங்கைப் பிரச்சினையைப் படமாக எடுப்பது பற்றி நான் எதிர்க்க மாட்டேன் வரவேற்கவே செய்வேன். எம்மக்களும் அப்படியே வரவேற்கவே செய்வார்கள். இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட யூதர்களுக்காக இன்னும்  ஆங்கிலப் படங்கள் வருகின்றன. அவைகளஅ உலகளவில் கவனிக்கப்படுகின்றன. யூத  இனத்துப் படைப்பாளிகளுக்கு அந்த இன உணர்வு இருக்கிறது. தமிழ்ப் படைப்பாளிகளுக்கு அந்த உணர்வும் இல்லை; துணிவும் இல்லை. 

தங்கள் இனத்தின் கதை, தங்கள் வாழ்க்கைக் கதை என்றாவது திரையில் வருமா என்று உலகத் தமிழ்ச் சமூகம் காத்துக் கொண்டு கிடக்கிறது. அதன் மூலம்  ஈழம் மீது சர்வதேசப் பார்வை படுமா என  ஏங்கிக் கொண்டிருக்கிறது புலம் பெயர்ந்து வாழும் தமிழுலகம்.

இலங்கையில் சொல்லப்படாத, வாசிக்கப்படாத கதைகள் ஏராளமுண்டு. நான்கூட எம்மக்கள் குறித்துக்  `கண்டிச் சீமை’ என்று நாவல் எழுதியிருக்கிறேன். 400 பக்கங்கள் கொண்டது.   

அப்படி யாராவது முயன்றால்கூட  எதிர்த்து அரசியல் செய்கிறார்களே…?

ஏதோ ஒன்றிரண்டு பேர் முயன்றார்கள். இதில் அரசியலுக்கு இடம் தராமல் எடுக்கலாம். இலங்கை யுத்தத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்ட துயரம் பெரும் துயரம். இதைப் பற்றி எத்தனையோ படங்கள் எடுக்கலாம். எவ்வளவு கதைகள் நம்மிடம் இருக்கின்றன. அதை எடுக்காமல் வெளிநாட்டுப் படங்களைச் சுட்டு எடுப்பது ஏன்…?

இலங்கை  மண்ணில் லட்சக்கணக்கான கதைகள் உள்ளன.  அதைத்தான் பயந்து கொண்டு எடுக்கவில்லை.  தமிழகத்தில் அண்மையில் அவர்கள் அருகில் சந்தித்த கஜா புயல் பற்றி, அது கொடுத்த துயரம் பற்றிச் சினிமா எடுக்கலாமே? ஏன் எடுக்கவில்லை? எடுப்பார்களா..?

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இடப் பெயர்வு பற்றி பாலா ‘பரதேசி’ எடுத்தார்.. அதில் அரசியலா இருந்தது..?

சிரியப் போர் பற்றி, ஆப்கன் போர் பற்றி அமெரிக்காக்காரன் படம் எடுக்கிறான். அதில் அரசியல் இல்லை. எந்தக் கட்சியும் இல்லை.  யாருடைய கொடியும் இல்லை. மக்களின் வலியும் வாழ்க்கையும் மட்டுமே இருக்கும்.

அதேபோல இலங்கைப் பிரச்சினையில் அரசியலுக்கு  அப்பாற்பட்டு சித்தாந்தம் கொடிகளுக்கு இடமின்றி மக்களின் போராட்டங்களையும், துயரங்களையும், வேதனைகளையும், கண்ணீரையும், வலிகளையும் எடுக்கலாம்.

அரசியல் கலவாது மக்களுக்காகப் படமெடுக்கலாம். அப்படி எடுத்தால் உலகின் கவனத்துக்கு நம் மக்கள் நிலையைக் கொண்டு செல்ல முடியும். அப்படி எடுக்க முடியாமல் ஏதோ இரண்டு வரி வசனத்தை படத்தில் வைத்து விட்டு  பெரியதாகப் பேசிக் கொள்கிறார்கள். இலங்கை மக்களுக்கு ஏதோ செய்துவிட்டதைப்போல ஏமாற்றுகிறார்கள். 

நீங்கள் எழுத்தாளராக இருப்பதால் இக்கேள்வி. எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் சினிமாவில் வசனம் எழுத வந்துள்ளது பற்றி..? 

இதைப் பெரிய வளர்ச்சியாகக் கருத முடியாது. ஒரு காலத்தில் கதாசிரியர், வசனகர்த்தாக்களுக்கு மதிப்பு இருந்தது. அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி,  திருவாரூர் தங்கராசு ஆகியோர் செல்வாக்காக இருந்தார்கள். பிறகு பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் இருந்தார்கள். தொடர்ந்து பாரதிராஜா, பாக்யராஜ் வந்தார்கள். பின்பு படிப்படியாக சினிமா நடிகர்கள் கையில் போய்விட்டது.

இன்றைய வர்த்தக சூழலில் சினிமா முழுக்க, முழுக்க நடிகர்கள் கையில்  உள்ளது. இந்நிலையில் தாங்கள்தான் பெரிய இலக்கியவாதிகள்–பெரிய படைப்பாளிகள் என்பவர்கள் தொழிலுக்காக பணத்துக்காக எழுதுகிறார்கள். கேட்டால் அது வேறு இது வேறு என்கிறார்கள்.

படங்களில் இவர்கள் எழுதியவை மூன்றாம் தர நாலாம் தர வசனங்கள்தான். எழுதிய படங்களில் அப்படி என்ன இலக்கியம் படைத்தார்கள்..? யாருக்கோ முதுகு சொறிந்துவிட எழுதுகிறார்கள். இதில் என்ன தாங்கள் பெரிய படைப்பாளிகள் என்று   ஆவேசம்..?

எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்றபோது ரஜினி தன் வீட்டுக்கு அவரை அழைத்துப் பாராட்டினார். இது என்ன மரியாதை? மிகவும் கேவலமாக இருக்கிறது. இதுதானா ஒரு படைப்பாளிக்குக் கொடுக்கப்படும் மரியாதை.?

பாராட்டு பெறுபவர் மேடையில் இருந்தால் பாராட்டலாம் மற்ற நேரங்களில் பாராட்ட வேண்டுமென்றால் நேரில் சென்று பாராட்டுவதே முறை. மரபு. மரியாதை. இது அவமரியாதையல்லவா..? ராமகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்றல்லவா ரஜினி பாராட்டியிருக்க வேண்டும்..?  வெளியே செல்ல முடியாமல் ரஜினி என்ன நோய்வாய்ப்பட்டா கிடக்கிறார்..?

தமிழ்த் திரைப்படங்களின் திருட்டு விசிடி வருவதற்கும் இணையத்தில் வருவதற்கும் இலங்கைத் தமிழர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுவது பற்றி..?

இதை நான் வன்மையாக மறுக்கிறேன்; கண்டிக்கிறேன். உண்மையைச் சொன்னால் தமிழ்நாட்டிலிருந்துகூட யாராவது சிலர் இதன் பின்னணியில் இருக்கலாம். பன்னாட்டுக் கரங்கள் இதன் பின்புலத்தில் இருக்கும். எங்கோ யாரோ இலங்கைக்காரன் ஒருவன் அதில் இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக இலங்கைக்காரன்தான் செய்கிறான் என்பதை ஏற்க முடியாது.

தமிழ்த் திரையுலகின் வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் இலங்கைத் தமிழர்களைச் சார்ந்து உள்ளது. அவர்கள்  தாங்கள் உழைப்பதில்  வரும் வருமானத்தில் கேளிக்கைக்காக  என்றால்  பெரும்பாலும் திரைப்படத்துக்கே அதிகம் செலவிடுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் ஒரு டாக்டர் இருக்கிறார் அவர் பாகிஸ்தான்காரர். அவர் பல மொழிகள், குறிப்பாக தமிழ் சினிமாக்களின் திருட்டு விசிடியை விநியோகித்து வருகிறார். அவரை ஒன்றுமே செய்ய முடியாது. சுதந்திரமாக இது நடக்கிறது. தமிழ்நாட்டில்தான் இப்படித் திருட்டு விசிடி கூச்சல் கேட்கிறது. ஆனால் வெள்ளைக்காரர்களிடம் இந்தப் பிரச்சினை இல்லை. அதற்கான வழியைக் கண்டு பிடித்துச் செயல்படுத்தி வருகிறார்கள். அதனால் எங்காவது ஆங்கிலப் படம்  இப்படி வருவது கண்டுபிடிக்கப்பட்டால்  தண்டிக்கப்படுவார்கள். பெரும் தொகையை நஷ்ட ஈடாக வசூலிப்பார்கள்.

இதன் கரம் மலேசியாவில்கூட இருக்கிறது. அங்கிருந்துதான் படம் வந்த இரண்டாவது வாரமே சிடி வருவதாகச் சொல்கிறார்கள் திருட்டு விசிடியை 2 டாலர்களுக்குத் தருகிறார்கள். ‘பேட்ட’ படம் வந்து 3 டாலருக்கு விற்றார்கள். இது தமிழ் நாட்டிலும் நடக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின்  வணிகம் 200 கோடி 500 கோடி என்கிறார்கள் ஆனால் திருட்டு விசிடியை ஒழிக்க எதுவுமே செலவு செய்வது கிடையாது. இதுவரை இதற்காக, இதைத் தடுக்க எவ்வளவு செலவு செய்து இருக்கிறார்கள்..?

இதற்கு என்னதான் தீர்வு..?

வெள்ளைக்காரர்கள் செய்வதைப்போல இதைக் கண்காணிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். படம் வெளியாகும் ஒவ்வொரு நாட்டிலும் இந்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அங்கெல்லாம் படத்தின் உரிமையைப் பதிவு செய்து சட்டப் பூர்வமான பாதுகாப்பு செய்ய வேண்டும். அப்படிச் செய்து விட்டோம் என்றால் இதை மீறும்போது தண்டிக்க முடியும்.

இங்கு  உள்ளதைப் போல பல நாடுகளிலும் கையூட்டு கொடுத்து சரிக்கட்டட இயலாது. எனவே தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கென ஒரு நிறுவனத்தைத் துவக்கி இதை முறைப்படுத்தி தடுக்கலாம் அதைவிட்டுவிட்டு வெறுமனே கத்திக் கொண்டிருந்தால் எந்தப் பயனும் ஏற்படாது.

ஆஸ்திரேலியாவில்  `2.0`, மற்றும்  `பேட்ட`  படங்களின் தியேட்டர் டிக்கெட்டுக்களை முதல் வாரம் 25 டாலருக்கு  அதாவது 1500  ரூபாய்க்கு விற்றார்கள். 2-வது வாரம் 15 டாலருக்கு விற்றார்கள். 3-வது வாரம் 10 டாலர் விற்றார்கள் . அதே படம் திருட்டு விசிடியில் 2 டாலருக்கு விற்கிறது. ஆனாலும் பலரும் திரையரங்கம் சென்றே படம் பார்க்கிறார்கள். முடியாத சிலரே வி.சி.டி.யில் பார்க்கிறார்கள்…” என்றார். 

 

Our Score