full screen background image

எஸ்.ஏ.சந்திரசேகர் யூ டியூப்பில் சொல்லப் போகும் உண்மைகள்

எஸ்.ஏ.சந்திரசேகர் யூ டியூப்பில் சொல்லப் போகும் உண்மைகள்

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ.சந்திரசேகர் புதிதாக யூ டியூப் சேனலைத் துவக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

இதுவரையிலும் 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக 2019-ம் ஆண்டில் ‘கேப் மாரி’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

அதன் பின்பு விஜய் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக்கும் முயற்சியில் இறங்கி தோல்வியடைந்தார். இதனால் விஜய்யுடன் அவருக்குப் பேச்சுவார்த்தையும் இ்ல்லாமல் போனது. தற்போது ‘மாநாடு’ படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் நடித்திருக்கிறார் எஸ்.ஏ.சி.

இந்த நிலையில் தானும் காலத்திற்கேற்றாற்போல் மாறுவதாகச் சொல்லி யூடியூப் சேனலைத் துவக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி.

இது குறித்து அவர் பேசும்போது, “இந்தக் கொரோனா வைரஸ் பிரச்சனையால் திரையுலகம் இருண்டு போய் கிடக்கிறது. என்னை நான் எப்பொழுதுமே புத்துயிராக வைக்க படங்கள் மூலம் என் ரசிகர்களுடனும், மக்களுடனும் பேசி வந்தேன். இனி என்னுடைய யூ டியூப் சேனல் மூலமாகப் பேசப் போகிறேன்.

நான் இதுவரையிலும் 70 படங்களை இயக்கியிருக்கிறேன். திரையுலகில் இன்றைக்கு உச்சத்தில் இருக்கும் பலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு என் வாழ்க்கை ஒரு பாடமாக இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இந்த யூ டியூப் சேனல் என்னும் புது முயற்சியில் நான் இறங்கியிருக்கிறேன். என் சேனல் மூலமாக பல உண்மைகளை போட்டுடைக்கப் போகிறேன்…” என்றார்.

எஸ்.ஏ.சி. கடைசியான வரிகளில் சொல்லியிருக்கும் “பல உண்மைகளை போட்டுடைக்கப் போகிறேன்” என்பதுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அது எந்த வகையான உண்மை.. விஜய் ரசிகர் மன்றம் சம்பந்தமானதா.. அல்லது மகன் விஜய்க்கும் தனக்குமான நட்பு பற்றியதா என்பது பற்றி விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

Our Score