‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘பில்லா’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்த்தன் முதன்முதலாக இந்தியில் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
கார்கில் போரை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த ஷெர்ஷா படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ரா, பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ரா எனும் ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்தப் படத்தை தர்மா புரோடக்சன்ஸ் மற்றும் காஷ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் தனது டிவீட்டர் தளத்தில் இந்தப் படத்தின் குழுவினரை மனதாரா பாராட்டியிருக்கிறார்.

கமல்ஹாசன் தனது டிவீட்டர் பதிவில், “சிறு வயது முதலே இந்திய ராணுவம் தொடர்பாக வெளியான சில படங்கள் என்னை ரொம்பவே எரிச்சல் அடைய செய்தது. தவறான கோணத்திலேயே நம்முடைய இந்திய ராணுவத்தை சில இயக்குநர்கள் சித்தரித்து படமாக்கி வந்தனர். அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் ‘ஷெர்ஷா’ படம் இந்திய ராணுவத்தின் உண்மையான தியாகத்தை திரையில் செதுக்கியுள்ளது. இந்திய ராணுவத்தினரின் சுயநலமற்ற தியாகத்தை இந்த படத்தின் மூலம் காட்டியிருக்கும்விதத்தைப் பார்த்து என் மார்பு பெருமையால் விரிவடைந்தது…” என்று கூறியுள்ளார்.
அவரின் இந்த வாழ்த்து ‘ஷெர்ஷா’ படக் குழுவினருக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை அளித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் கமல்ஹாசனின் அந்த பாராட்டு ட்வீட்டுக்கு கீழே நன்றி கூறியுள்ளார். மேலும் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானி உள்ளிட்டோரும் கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளனர்.