10 கோடி செலவு செய்திருந்தால்கூட இத்தனை விளம்பரம் இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்காது.
நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்தப் படத்தின் தலைப்பு இதுதான் என்று அறிவித்த உடனேயே தலைப்பைக் கண்டித்தும், ஆதரித்தும் இணையத்தில் எழுதிக் குவித்துவிட்டார்கள்.
“சபாஷ் நாயுடு’ என்கிற அந்தத் தலைப்பில் இருக்கும் ‘நாயுடு’ என்கிற வார்த்தை மேலும், மேலும் சாதியின உணர்வை ஊக்குவிப்பது போலவே இருக்கிறது. பெரியாரின் வழி நடப்பவன் என்று சொல்லிக் கொள்ளும் நடிகர் கமல்ஹாசன் இப்படி செய்வது நியாயமா..? தலைப்பை உடனேயே மாற்ற வேண்டும்” என்று கோரி பலரும் எழுதியிருக்கிறார்கள்.
நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசனிடம் இது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “என் பெயருக்கு பின்னால் சாதி பெயர் இல்லை. எனது குழந்தைகள் பெயரிலும் சாதி இல்லை. ஆனால் பலர் தங்கள் பெயரில் சாதியை சேர்த்துள்ளனர். தெரு, சாலைகளிலும் சாதி பெயர்கள் உள்ளன. முதலில், நீங்கள் வசிக்கிற தெருவில் இருக்கிற சாதி பெயரை எடுங்க. அதுக்கப்புறம் இதைப் பார்க்கலாம். மது வேண்டாம் என்று படம் எடுத்தால்கூட கட்டாயம் மதுவை காட்டிதான் ஆக வேண்டும். இதுவும் அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான்.
உங்களுக்கு எப்படி ஒரு கேரக்டர் பிடிக்குதோ, அதேபோல் எனக்கு இந்த தலைப்பு பிடித்திருக்கிறது. அதனால் இந்த தலைப்பை வைத்திருக்கிறேன். நான் எதற்காக இந்த பெயரை வைத்து இருக்கிறேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்..” என்றார்.
அவர் மேலும் படம் பற்றிப் பேசுகையில், “இந்த ‘சபாஷ் நாயுடு’ ஒரு நகைச்சுவை திரைப்படம். நகைச்சுவை என்றாலும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்றும் சொல்லலாம். நகைச்சுவை, திகில் கதையம்சம் உள்ள படமாக ‘சபாஷ் நாயுடு’ தயாராகிறது. இந்தப் படத்துக்கு நான் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கேன். நான் படித்த விஷயங்கள், பார்த்த மனிதர்களின் பாதிப்புகள் கதையில் இருக்கும்.
இயக்குநர் ராஜீவ் குமார் எனது நீண்ட நாள் நண்பர். பல வருடங்களுக்கு முன்பு அவருடைய இயக்கத்தில் ‘சாணக்யன்’ என்ற படத்தில் நடித்தேன். அதன் பின்பு மீண்டும் சேர்ந்து படம் செய்ய வேண்டும் என்று நினைத்தும் தள்ளித் தள்ளி போய்விட்டது. இப்போதுதான் சரியான சமயமாக அமைந்திருக்கிறது என்பதால் அவர் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.
இளையராஜா இசையமைக்கிறார். இதில் எனக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சுருதிஹாசன் எனது மகளாகவே நடிக்கிறார். மேலும் ஸ்வரூப் சுக்லா, பிரம்மானந்தம், ஆனந்த் மகாதேவன், பாரத் டபோல்கர், பரிதா ஜலால், சித்திக், மனு நாராயணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
எனது இன்னொரு மகளான அக்ஷரா ஹாசன் இந்தப் படத்தில் எங்களுக்கு உதவியாக உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். வரும் மே 16-ம் தேதி அமெரிக்காவில் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஜூலை மத்தியில் படப்பிடிப்பை முடித்துவிட எண்ணியுள்ளோம்.
‘தசாவதாரம்’ படத்தில் நான் நடித்த ‘பல்ராம் நாயுடு’ என்ற கதாபாத்திரத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் படத்தில் நடிக்கிறேன். அதற்காக அந்தப் படத்தின் தொடர்ச்சி இது என்று கருத வேண்டாம். அது வேறு.. இது வேறு.. இதில் பல்ராம் நாயுடு ‘ரா’ உளவுத் துறை உயரதிகாரியாக வருகிறார்..” என்றார்.
இசை – இளையராஜா, ஒளிப்பதிவு – ஜெய கிருஷ்ணா கும்மாடி, படத்தொகுப்பு – ஜேம்ஸ் ஜோஸப், ஒலி வடிவமைப்பாளர் – குணால் ராஜன், உடை வடிவமைப்பு – கவுதமி, தெலுங்கு வசனம் – சஷாங் மெளலி, ஹிந்தி வசனம் – ஸ்வரூப் சுக்லா, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.மூர்த்தி, பி.ஆர்.ஓ. – டைமண்ட் பாபு, டிஸைனர் – குமார், தயாரிப்பு -லைகா நிறுவனம் – சுபாஷ்கரன், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – எஸ்.சந்திரஹாசன், கமல்ஹாசன், இணை தயாரிப்பு – ராஜேஷ் எம்.செல்வா, கதை, திரைக்கதை, வசனம் – கமல்ஹாசன், இயக்கம் – டி.கே.ராஜீவ்குமார்.
தலைப்பு இத்தனை சர்ச்சையானாலும் கமல்ஹாசன் முதலில் இந்தப் படத்திற்கு வைத்திருந்த பெயர் வேறாம். இசைஞானி இளையராஜாதான் கதையைக் கேட்டுவிட்டு “இந்தக் கதைக்கு இந்தப் பெயர்தான் பொருத்தமாக இருக்கும்..” என்று கூறினாராம்.
ஆகவே தோழர்களே.. உங்களுடைய கண்டனக் கனைகளை தயவு செய்து இசைஞானி பக்கம் திருப்புங்கள்..! போதிய விளக்கம் கிடைக்க வாய்ப்புண்டு..!










