ஒயிட் லேம்ப் புரொடக்சன் தயாரிப்பில் மற்றும் எஸ்.பி.ராமநாதனின் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’.
இந்தப் படத்தில் அபி சரவணன் கதாநாயகனாக நடிக்க, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி இந்த படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத் தொகுப்பை செய்திருக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். புதுமுக இயக்குநரான ஆண்டனி சாமி இந்தப் படத்தினை இயக்கியுள்ளார்.
ஏற்கெனவே வெளியான இந்த படத்தின் டிரைலர் திரையுலத்தினர் மட்டுமன்றி சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டிரெயிலரில் ‘தாழ்த்தப்பட்ட ஒருவரை தாழ்த்தப்பட்டவர் என்பதற்காகவே கொலை செய்த குற்றத்திற்காக’ என தொடங்கும் காட்சிகளைப் பார்த்து இந்தப் படம் ‘பரியேறும் பெருமாள்’, ‘காலா’, ‘ஜெய் பீம்’ வரிசையில் நிச்சயமாக இடம் பெறும் என்று படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 4-ம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது..!