எம்.கே. சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.மாதேஸ்வரன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சாந்தன்’. இந்த படத்தில் தயாரிப்பாளரான எம்.மாதேஸ்வரனே, ‘சிற்பி மாதேஸ்’ என்ற பெயரில் ஹீரோவாக அறிமுகமாகிறார். காஷிஹா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சுகுமார், மது, பெஞ்சமின், போண்டா மணி, சாரதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – உமா மகேஷ்வரன், படத் தொகுப்பு – ஹரி, இசை – ஆர்.எஸ்.ரவிபிரியன். பாடல்களை சினேகன், தூயவன், நிலா பாரதி, எஸ்.வி.ஆர்., பாமினி, மதன் ஹிமாதிரி, தமிழ் சுரேஷ் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். சாம்ராஜ் என்ற அறிமுக இயக்குனர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி இருக்கிறார்.
படத்தின் ஹீரோவான சிற்பி மாதேஷ்… சிற்பக் கலை குடும்பத்தைச் சேர்ந்தவராம். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இருக்கும் பல புதிய கோயில்களின் சிலைகளை இவரது குடும்பத்தினர்தான் செய்து கொடுத்திருக்கிறார்களாம்.
இந்தப் படத்தின் இயக்குநர் இவருடைய நண்பர் என்ற முறையில் இவரிடம் இந்தக் கதையைச் சொல்ல.. அதில் கவரப்பட்ட மாதேஷ், தானே இதை தயாரிப்பதாகச் சொல்லி களத்தில் குதித்திருக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் சாம்ராஜ் கூறுகையில், “சாந்தம்’ என்றால் அமைதி என்று பொருள். மனிதர்களுக்கு உரிய உயர்ந்த குணங்களாகிய உண்மை, ஒழுக்கம், அன்பு, கருணை, எளிமை, அடக்கம் போன்றவற்றுள் சாந்த குணமும் ஒன்று. இந்த குணத்தை மையமாகக் கொண்டுதான் இந்த ‘சாந்தன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது.
சகோதரத்துவத்தை கருவாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் இது. ரத்தப் பாசத்தின் ஆழக்கை மிக உன்னதமாக எடுத்துரைக்கும் படம் இது. இயற்கையின் எழிலமைப்பில் இதயத்தை ஈரமாக்கும் ஓர் அமைதியான திரைப்படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் இரண்டு சகோதரர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களையும், திருப்புமுனைகளையும் அற்புதமான கிராமத்து நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம்.
இவ்வுலகம் அமைதியானது. இயற்கை இவ்வுலகத்து உயிரினங்கள் அனைத்தும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்குத் தேவையான தட்பவெப்ப நிலைகளையும், சூழ்நிலைகளையும், எழிலமைப்பையும் வழங்கியுள்ளது.
இத்தகைய உலகில் வாழும் நாம், அனைத்து உயிர்களின் மீதும் அன்பு செலுத்தி சாந்தமாக வாழ்ந்தால் இவ்வுலகம் சாந்த பூமியாகத் திகழும். இவ்வாறு அமைதியை நிலைநிறுத்துவதை வலியுறுத்தும் படமாக இந்த ‘சாந்தன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
‘திருப்பாச்சி’ படத்திற்கு பின்பு நடிகர் பெஞ்சமினுக்கு இந்தப் படத்தில் குறிப்பிடத்தக்க வேடம் கிடைத்திருக்கிறது. இந்தப் படம் ரிலீஸான பிறகு பெஞ்சமின் இன்னும் கொஞ்சம் அதிகமாக பேசப்படுவார் என்பது உறுதி.
இத்திரைப்படத்துக்கு கனடாவில் வாழும் தமிழ் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ரவிபிரியன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு 6 பாடல்களை பதிவு செய்திருக்கும் ரவிபிரியன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார். மேலும், ரவிபிரியனின் பால்ய சினேகிதரான கானா பாலாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார்.









