ராதிகா ஜார்ஜ் சிறு வயது முதலே ட்ரம்ஸ் இசையில் ஆர்வமுடன் பயின்று வருகிறவர். லண்டன் ட்ரினிட்டி இசை கல்லூரியில் ட்ரம்மிங் இசை பயின்றுள்ள இவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.
தான் நடிக்க வந்த கதையைப் பற்றிச் சொல்கையில், “அடிப்படையில் நான் ஒரு ட்ரம்ஸ் இசைக் கலைஞர். கடந்த 13 வருடங்களாக ட்ரம்ஸ், தபேலா, கஜான், தர்புகா, கிட்டார் மற்றும் கீ போர்டு பயின்று, வாசித்து வருகிறேன். இதற்கு முன்பு நடித்ததே இல்லை. இசை சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கும் என்று நினைத்துதான் ஜேம்ஸ் சார் ஸ்டுடியோவிற்கு நானும் எனது கல்லூரி நண்பர்களும் சென்றோம். அங்கு நடிக்க சொல்லிவிட்டார்கள்…” என்கிறார் என்ஜினியரிங் பயிலும் ராதிகா.
மேலும் அவர் தொடர்கையில், “இப்படத்தில் மிகவும் அமைதியான அனைவரையும் மதிக்கும் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது எனது இயல்பான துருதுரு கதாப்பாத்திரத்திற்கு நேரெதிராய் அமைந்தது. படத்திலேயே கடைக்குட்டி நான்தான், என்னை நடிக்க வைக்க அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டனர்.
ஒரு காட்சியில் கரப்பான் பூச்சியைப் பார்த்து அலற வேண்டும். என்னை சுற்றி அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டு நடித்தனர். பல டேக்குகளுக்கு சென்ற பிறகும் எனக்கு பயந்தது போல் நடிக்க வரவில்லை. சிறிது நேரம் கழித்து ஜேம்ஸ் சார், உண்மையான கரப்பான் பூச்சியை போட்டு என்னை பயமுறுத்தி அந்தக் காட்சியை படமாக்கினார்.
இசைக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன் என்பது மிக பெருமையாகவும், மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஜேம்ஸ் வசந்தன் சார் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்…” என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் ராதிகா ஜார்ஜ்.