டிராஃபிக் ராமசாமியாக நடிக்கவிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் 

டிராஃபிக் ராமசாமியாக நடிக்கவிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் 

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நீதிக்கு தண்டனை’, ‘நான் சிகப்பு மனிதன்’ போன்ற சமூக பிரச்சனைகளை அலசிய முக்கியமான படங்களை இயக்கியவர். தற்போது இவர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார்.

அதை பற்றி அவர் கூறியபோது,  “பொதுமக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. அப்படி தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி தீர்ப்புகளையும் வாங்கி தந்தவர்.

இத்தீர்ப்புகளினால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளும், ரெளடிகளும் மற்றும் அரசியல்வாதிகளும் இவர் மீது கோபம் கொண்டு இவரை பல வகையில் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பல முறை டிராஃபிக் ராமசாமியை கொல்ல முயற்சிகளும் நடைபெற்றிருக்கிறது.

அப்படி இருந்தும் தொடர்ந்து அவர் சமூகத்திற்காக இன்றும் போராடிக் கொண்டேதான் இருக்கிறார். அந்த போராட்ட குணம் என்னை பெரிதும் கவர்ந்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்க நினைத்திருந்தேன். அது தற்போது நனவாகிவிட்டது. டிராபிக் ராமசாமி வேடத்தில் நான் நடிக்கவிருக்கிறேன்.

என் உதவி இயக்குநரும், பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே என்னை வைத்து பலரும் பாராட்டிய ‘மார்க்’ என்ற நகைச்சுவையான குறும்படத்தை இயக்கியவர்…” என்றார்.

இதை பற்றி இயக்குனர் விஜய் விக்ரம் அவர்கள் கூறுகையில், “இப்படம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதால் பல திருப்புமுனை சம்பவங்களும், திருப்பங்களும் எதார்த்தமாவே அமைந்திருக்கிறது. இந்த படம் திரைக்கு வரும்போது சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி..” என்றார்.

இப்படத்தை கிரீன் சிக்னல் பட நிறுவனம் தயாரிக்கிறது.

Our Score