full screen background image

ரம்மி – சினிமா விமர்சனம்

ரம்மி – சினிமா விமர்சனம்

சீட்டாட்டத்தில் ரம்மி மிக எளிமையானது.. அதே சமயம் சுவாரசியமானது.. சூதாட்டத்தில் ரம்மி தரும் போதையை ஒத்த சீட்டு, ரெண்டு சீட்டுகூட தராது.. அந்த 13 சீட்டுகளை விதம்விதமாக கலர், கலராக தேர்வு செய்து பொறுக்கியெடுப்பதற்குத்தான் எத்தனை எத்தனை சாமர்த்தியம் வேண்டும்..? ராணியை எதிர்பார்த்திருப்பவன் கையில் திடீரென்று ஜோக்கரே கிடைத்துவிட்டால் அவன் அதிர்ஷ்டக்காரன் என்கிற ரம்மி ஆட்டம் போலவே இதிலும் எதிர்பாராதவிதமாக படம் முடிகிறது. அதான் ரம்மின்னு பேர் வைச்சுட்டாங்க போலிருக்கு..!

காதல் என்றாலே வெறுப்பாகும் அளவுக்கு கோபமான ஊர் அது. ஆனால் ஊரில் இருக்கும் ஊர்த்தலைக்கட்டு ஜோ மல்லூரிக்கு மட்டும்தான் இது பிடிக்காது என்று காட்டுகிறார்கள். ஊர், சிவகங்கை பக்கத்தில் இருக்கும் பூலாங்குறிச்சி. இதன் அருகில் இருக்கும் கல்லூரிக்கு படிப்பதற்காக வடகாட்டில் இருந்து சக்தி என்கிற இனிகோ பிரபாகரும், திண்டுக்கல்லில் இருந்து ஜோஸப் என்கிற விஜய் சேதுபதியும் வருகிறார்கள். இருவரும் அறைத் தோழர்களாகின்றனர்..!

பார்த்த மாத்திரத்திலேயே காதல் என்கிற டிரெண்ட்டுக்கேற்றாற்போல் மீனாட்சியை பார்த்தவுடனேயே சக்திக்கு காதல் பிறக்கிறது. இதே மீனாட்சிக்காகவே சையதும் அதே கல்லூரியில், அதே வகுப்பில் படிக்க வருகிறான். அவனுடன் ஏற்பட்ட சின்ன தகராறில் சையதை கல்லூரியைவிட்டு வெளியே அனுப்புகிறார்கள். சக்தியையும், ஜோஸப்பையும் விடுதியைவிட்டு வெளியே அனுப்புகிறார்கள்.

அதே ஊர்க்காரரான அருணாச்சலம் என்கிற சூரியின் உதவியோடு பூலாங்குறிச்சியில் வீடு எடுத்து தங்கிப் படிக்கிறார்கள் இருவரும். கூடவே மீனாட்சியுடனான காதலை வளர்த்துக் கொள்கிறான் சக்தி. ஜோஸப்புக்கு, ஜோ மல்லூரியின் மகளான சொர்ணத்துக்கும் காதல் தீயாய் பற்றிக் கொள்கிறது..

விஷயம் லீக்காகி ஒரு கட்டத்தில் ஜோஸப்பும், சொர்ணமும் எஸ்கேப்பாகிறார்கள். ஆனாலும் தேடிப் பிடித்து ஜோஸப்பை தீர்த்துவிட்டு, சொர்ணத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இப்போது சக்தி-மீனாட்சியும் மாட்டிக் கொள்ள.. இவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கதை..?

இது போன்ற கதையில் இது 1001-வது கதைதான் என்றாலும் ட்ரீட்மெண்ட்டில் வித்தியாசப்படுத்திரலாம் என்று சொல்லியே தயாரிப்பாளர்களை பிடித்திருப்பார் போலிருக்கிறது.. ஏதோ திகில் கலந்த காதல் கதை என்று சொல்லியே விளம்பரப்படுத்தினார்கள்.. அவ்வப்போது கேமிராவால் பயமறுத்தினாலும்.. அடுத்தது என்ன என்று பெருவாரியான ரசிகர்களால் நிச்சயமாக ஊகிக்க முடிந்த கதை இது.

இனிகோ பிரபாகர் முதல் முறையாக தனி ஹீரோவாகியிருக்கிறார். அவருக்கான கதைதான்.. கூடவே சப்போர்ட்டிங் ஆக்டராக வந்திருக்கும் விஜய்சேதுபதியை பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றும் நண்பருக்காக அந்தப் படத்தில் இடம் பெறுவது மிகப் பெரிய விஷயம்..

மிகச் சாதாரணாகவே இருவரும் ஸ்கிரீனில் அறிமுகமாகிறார்கள். ஹீரோத்தனம் இல்லை.. ஆனால் காதலர்களின் அதே வேகம்.. ஈர்ப்பு.. வேட்கை என்று அனைத்தையும் காட்டியிருக்கிறார்கள்.. சிற்சில இடங்களில் வரும் வசனங்கள் நகைக்க வைக்கின்றன. ஜோஸப்பின் காதல் உருவாகும் காட்சி அமெச்சூர்தனம்.. இப்படியா கிணத்துக்குள் குளிக்கும்போது பார்த்தவுடன் காதல் வரும்..? என்னதான் சினிமா என்றாலும் இது கொஞ்சம் ஓவரா இல்லியா..? சொர்ணம் வைத்துவிட்டுப் போன மஞ்சளை பூசி ஜோஸப் குளிக்கிறாராம்.. அட என்னவொரு சிச்சுவேஷன்..?

சொர்ணத்திற்கு ஒரு அக்கா இருக்கிறாள். இருவரும் சைக்கிளில் செல்கிறார்கள். ஜோஸப் லவ் லெட்டரை கொடுக்கிறார். அக்கா பார்த்துவிட்டு ஜோஸப்பிடம் வந்து கத்திவிட்டுப் போகிறாள். அக்காவுக்கு பிடிக்கலை.. அவளுக்குப் பொறாமை என்றெல்லாம் வேறுவேறு டயலாக்குகளில் சொல்கிறார் சொர்ணம். அந்த அக்காவின் பேக்கிரவுண்ட் என்ன..? ஏன் அவளுக்குப் பிடிக்கலை என்பதற்கெல்லாம் காட்சிகள் இல்லை. இறுதிக் காட்சியிலும் அந்த அக்காவை காணவே இல்லை..! அப்போ அந்த அக்கா நிசமாவே யாரு சாமி..?

கதை நிகழும் காலம் 1987 என்கிறார்கள். அதனால் அதற்காகவெல்லாம் பெரிய அளவுக்கு மெனக்கெடவில்லை.. ஊருக்கு ஒதுக்குப்புறமாக அரசு கல்லூரியை பிடித்துவிட்டார்கள். அரசு கல்லூரிகள் எப்போதும் ஒன்றுபோலத்தான் இருக்கும். பழமை மாறாத ஊர்.. அதே தோரணையுடன் இருக்கும் தெரு.. நடித்தவர்களின் உடைகள்.. சின்னச் சின்ன ஆர்ட் டிபார்ட்மெண்ட் பொருட்கள்.. இதுகளையெல்லாம் வைத்து ஒப்பேத்திவிட்டார்கள்..

கெளரவ கொலை என்பது இந்தக் கதைக்கு பொருத்தமா என்றும் தெரியவில்லை.. காதல் திருமணங்களை ஏன் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதையும் தெளிவாகச் சொல்லவில்லை.. அடுத்த ஊர்க்காரனுக்கு நம்மூர் பொண்ணு கேக்குதா என்றுதான் கோபப்படுகிறார்கள்.. இதில் கெளரவக் கொலை இல்லை… வேறென்ன காதலை பிடிக்காதவர்கள்ன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்..!

டி. இமானின் இசையில் பாடல்களும், பாடல்களை படமாக்கியவிதமும், அந்த லொகேஷன்களும் மிக மிக அருமை.. தேடித் தேடிப் பிடித்திருக்கிறார்கள் இடத்தை. கேமிராவின் கண்களில் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இது ஒன்றுதான் படத்தில் மிகவும் ரசிக்க வைத்த விஷயம். யுகபாரதியின் மிக எளிமையான வரிகளில் இந்தப் படத்தின் பாடல்கள் கொஞ்ச நாட்கள் ஓடுமென்று நினைக்கிறேன்..!

சூரி, சென்றாயன்.. சுஜாதா, ராஜா, சிவக்குமார், ஜோ மல்லூரி என்று சிற்சில காட்சிகளில் முழுமையாக நடித்திருக்கிறார்கள். ஹீரோயின்களான ஐஸ்வர்யாவும், காயத்ரியும் ஓகேதான்.. காயத்ரியை இதற்கு முன்பு நடித்த படத்திலெல்லாம் சிரிக்கக்கூட அனுமதித்ததில்லை.. இதில்தான் கொஞ்சம் சிரித்திருக்கிறார்.. ஆனாலும் ஹீரோயின்னுன்னா, தமிழ்ச் சினிமா ரசிகனுக்கு இதையும் தாண்டின எதுவோ வேணும்ன்னு நினைக்கிறேன்..

ஐஸ்வர்யாவின் அறிமுகக் காட்சியே கலக்கல்தான்.. அந்தக் கண்ணுக்கு இன்னும் கொஞ்சம் மை போட்டு பாடல் காட்சிகளில் குளிர குளிர அசத்தியிருக்கிறார்.. அழகு ஒன்றை வைத்தே இங்கே குளிர் காய முடியாது.. வேறு நல்ல நடிப்புக்கான ஸ்கோப் உள்ள படங்களில் நடித்து புகழ் பெறட்டும்..

கிளைமாக்ஸ் காட்சி இப்படித்தான் இருக்குமென்று பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தொடர்ச்சியாக சினிமா பார்ப்பதையே குலத் தொழிலாக வைத்திருப்பார்கள் மட்டும் நிச்சயமாக ஊகித்திருப்பார்கள். தனது அம்மாவை ஊருக்கு போ என்று சொல்லிவிட்டு கடமையை முடிக்க அப்பா அறைக்குள் செல்வது.. பக்கத்து வீட்டு தம்பிக்கு எப்படி தெரிஞ்சதுன்னு தெரியலை.. ஆனாலும் கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்தது.. கடைசியில் அப்பாவை காட்டாமல் விட்டதுகூட நல்லதுதான்.. ஒரு மரணமும், ஒரு கொலையும் இன்னொரு காதலை வாழ வைக்கிறது என்பதைச் சொல்லி முடித்து விடை கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் முதல் காட்சிக்கே இளசுகள் முதல் பல்லு போன கிழடுகள்வரையிலும் விஜய் சேதுபதிக்காக தியேட்டரில் காத்திருந்து பார்த்ததை நேரில் பார்த்த அதிர்ச்சி இன்னமும் எனது கண்களில் இருக்கிறது.. ஆனால் இந்தப் படத்திற்கு முதல் நாளில் கிடைத்த ரெஸ்பான்ஸை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாகிவிட்டது. எப்படி சில மாதங்களுக்குள் இப்படியொரு வீழ்ச்சி..? படத்தின் விளம்பரம் குறைவா..? அல்லது விஜய் சேதுபதி கெஸ்ட் ரோல் என்பது அத்தனை பேருக்கும் தெரிந்துவிட்டதா என்றும் தெரியவில்லை.. இருந்தாலும் விஜய் சேதுபதிக்கு இங்கே எதுவுமே இல்லை. நம்பி வந்திருந்தால் இதனைவிட மோசமான ரிசல்ட்டாக வந்திருக்கும். நல்லவேளையாக தப்பித்தார்கள்..!

ஒரு தயாரிப்பு நிர்வாகியாக.. நட்சத்திரங்களின் மேனேஜராக.. பல்வேறு பணிகளைச் செய்துவிட்டு இப்போது இந்த இயக்குநர் வேடத்தைத் தரித்திருக்கும் பாலகிருஷ்ணன் ஸார்.. அடுத்த படத்தில் திரைக்கதையும், நேர்த்தியிலும் நம்மை அசத்துவார் என்று நம்புவோமாக..!

Our ScoreLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *