full screen background image

ரூம் பாய் – சினிமா விமர்சனம்

ரூம் பாய் –  சினிமா விமர்சனம்

.சி.எம். சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்திருக்கும் இந்த ரூம் பாய்’ படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.

இதில் நாயகன்  சி.நிகில் (சஞ்சய்), நாயகி ஹர்ஷா (நிஷா), இமான் அண்ணாச்சி (சன்னி ஃபன்னி அண்ணாச்சி), பிர்லா போஸ் (சந்துரு), யூடியூப் புகழ் காத்து கருப்பு கலை (பிச்சாண்டி), இன்ஸ்டா புகழ் கற்பகம் (சுமதி), கவிதா விஜயன் (இனியா), சமீர் (ஜேம்ஸ் ஜாகிரியா), சிட்டி ராஜா (டிபிடி குணா), அருண்ராஜா (வில்லன்), பிரபாகர் (இன்பதுரை), கேரளா பெஹமின் (ஷாலினி) ஆகியோர் நடிக்க… இவர்களுடன் மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஒளிப்பதிவு – சி.பாரதி ராஜன் டிஎஃப்டி, பாடல்கள் – சூரியமூர்த்தி, இசை – வேலன் சகாதேவன், படத் தொகுப்பு – டி.வி.மீனாட்சி சுந்தர், நடனம் – தினா, ஸ்டண்ட் – கார்த்திக் வர்மன், உடைகள் – வளையாபதி, தயாரிப்பு மேலாளர் – முத்துக்குமார், தயாரிப்பு ஒருங்கிணைப்பா​ளர் – ஏ.சக்தி, தயாரிப்பு மேற்பார்வை – ஆர்.முரளி, பத்திரிக்கை தொடர்பு – புவன் செல்வராஜ்.

ஒரு பழி வாங்கும் கதையை ரொம்பவும் நாசுக்காகவும், அதே சமயம் கொஞ்சம் சஸ்பென்ஸ், திரில்லராகவும் உருவாக்கி இருக்கிறார்கள்.

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்து வெளியில் வருகிறார் ஹீரோ நிகில்.  அவருக்கென்று குடும்பம் எதுவும் இல்லாததால் அவரே தன்னுடைய  பிழைப்பை பார்க்க வேண்டி இருக்கிறது. இதனால் நிகிலின் நண்பன் ஏலகிரியில் ஒரு ஹோட்டலில் வேலை பார்ப்பது தெரிந்து அங்கே சென்று தானும் வேலை தேடிக் கொள்வதாக சொல்லி ஏலகிரி வந்து சேர்கிறார் நிகில்.

ஒரு ஹோட்டலில் வேலை செய்யும்பொழுது அங்கே ஏற்பட்ட சண்டையினால் நண்பனுடன் சேர்ந்து நிகிலும் வெளியேற்றப்படுகிறார். இப்போது அதே ஏலகிரியில் வேறொரு ஹோட்டலில் நண்பன் காத்து கருப்பு கலையுடன் வேலைக்கு சேர்கிறார்.

புதிதாக சேர்ந்த ஹோட்டலில் கெடுபிடி அதிகமாக உள்ளது. அந்த ஹோட்டலின் மேனேஜர் மிகவும் மரியாதைக் குறைவாக அவர்களை நடத்துகிறார். இதனால் அந்த மேனேஜர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஹீரோ.

அதே நேரம் நிகில் வெளியில் வந்த சிறார் சீர்திருத்த பள்ளியின் வார்டன் பிரபாகரனை 4 நாட்களாகக் காணவில்லை என்று போலீசுக்கு புகார் வருகிறது.

போலீஸ் விசாரணையில் அந்த விடுதியில் அவருடன் மிக நெருங்கிய நட்பில் நிகில் இருந்தது தெரிய வருகிறது. இப்பொழுது போலீசார் நிக்கலை தேடி அலைகிறார்கள்.

அதே சமயம் நிகில் வேலை செய்த ஹோட்டலில் நடந்த ஒரு அசம்பாவிதத்தில் ஹோட்டல் மேனேஜர் படுகொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்காகவும் நிகில் தேடப்படுகிறார்.

அப்படி இருந்தும் அந்த ஏலகிரி விட்டு வெளியேறாமல் அந்த ஹோட்டல் அருகிலேயே சுற்றி வருகிறார்கள் ஹீரோவும் அவருடைய நண்பனும்.

நிகில் எப்படி இந்த சிச்சுவேஷனல் மாட்டிக் கொண்டார். அவர் அந்த விடுதியை ஏன் சுற்றி சுற்றி வருகிறார். அவருக்கும் அந்த சீர்திருத்த பள்ளியின் வார்டன் இன்பதுரையின் கொலைக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடைதான் இந்தப் படம்.

அறிமுக நடிகரான நிகில் 20 வயது வாலிபன் உடைய கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இயக்குநர் என்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்திருக்கிறார் போலிருக்கிறது. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக நடித்திருக்கலாம்.

ஆனால், இயக்குநர் போதும் என்று சொல்லிவிட்டார் போலும்! கொஞ்சம் நடனத்திலும் தேறி இருக்கிறார், சண்டை காட்சியில் பரபர என்று பறந்து பறந்து தாக்கியிருக்கிறார். ஒரு அறிமுக ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் இவருக்கு உண்டு என்பதால் அடுத்தடுத்த படங்களில் எப்படி ஜெயிக்கிறார் என்று பார்ப்போம்.

ஹீரோயின் என்ற பெயரில் நடித்திருக்கும் வர்ஷாவுக்கு அதிகமான காட்சிகள் இல்லை. அந்த ஹோட்டலுக்கு வந்த வேகத்தில் ஹீரோ மீது காதலில் விழுந்து பின்பு சத்தம் இல்லாமல் வெளியேறுகிறார். ஆனாலும் ஒரு பாடல் காட்சிகள் தன்னுடைய அழகை காட்டிவிட்டு சென்று இருக்கிறார்.

சீர்த்திருத்த பள்ளியின் வார்டனான பிரபாகரன் மிரட்டலான வகையில் நடித்திருக்கிறார். மெயின் வில்லனாக நடித்திருக்கும் அருண் ராஜாவும் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மேலும் இமான் அண்ணாச்சி மூன்று சீன்களில் மட்டுமே தலையை காட்டி இருக்கிறார். குணச்சித்திர நடிப்பில் நடித்திருக்கும் பிர்லா போஸ் மற்றும் கற்பகம், கவிதா விஜயன், சமித் செட்டி, பெஹமின் என்று படத்தில் தலை காட்டிய அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடித்திருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர மீதி அத்தனை பேரும் புதுமுகமாக இருப்பது ஒரு சிறப்புதான்.

தொழில் நுட்பத்திலும் இந்த படம் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஸ்ரீபாரதிராஜன் ஏலகிரியின் அழகையும், அதன் சுற்றுப்புறங்களையும்  மிக அழகாக படமாக்கியிருக்கிறார். ஆனாலும், படத்தின் பிற்பகுதியில் முக்கால்வாசி காட்சிகள் அந்த ஹோட்டலுக்குள்ளும், ஹோட்டலின் சுற்றுப்புறத்திலுமே நடைபெற்றிருப்பதால் நமக்கு கொஞ்சம் போர் அடிக்கிறது.

இசையமைப்பாளர் வேலன் சகாதேவனின் இசை ஓகேதான். மூன்று பாடல்களையும் அழகாக இசைத்திருக்கிறார். அதிலும் பட்டர்ஃபிளை கண்ட அரிசி’ என்ற பாடலின் வரிகள் முழுவதும் காதில் மிக எளிதாக விடுகின்றன. அந்த அளவுக்கு சப்தத்தை குறைத்து விட்டு வார்த்தைகளை மிக எளிமையாக்கி இருக்கிறார்கள், பாடலை எழுதியவர்களுக்கும், இசையமைத்தவருக்கும் நமது பாராட்டுக்கள். இதிலும் இளையராஜாவின் பாடல்களை 30 செகண்ட்டுகள் மட்டுமே பயன்படுத்தி இருப்பதால் தப்பித்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

ஒரு சாதாரண காமெடி கலந்த கமர்சியல் படம் என்கின்ற எண்ணத்தை முதல் பாதியில் கொடுத்துவிட்டு பின்பகுதியில் போலீஸாரின் தேடுதல் வேட்டையினால் சஸ்பென்ஸ், திரில்லராக இந்தப் படம் உருமாறிவிட்டது. அதற்கேற்ப படத்தினை படத் தொகுப்பு செய்திருக்கும் படத் தொகுப்பாளர் மீனாட்சி சுந்தருக்கு நமது பாராட்டுக்கள்.

ஹீரோ நிகிலின் சொந்த வாழ்க்கையில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு கொடூரம்தான் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் மூல காரணம் என்று இரண்டாம் பாதியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

அந்த சம்பவம் என்ன? எதனால் இது நடந்தது என்பதை கொஞ்சம் சஸ்பென்ஸாகவே வைத்திருந்து கிளைமாக்லில்தான் அதை விடுவிக்கிறார் இயக்குநர். இந்த அளவுக்கு இந்தப் படத்தில் இருக்கும் இயக்குநரின் சுவையான திரைக்கதைக்காக அவரையும் நாம் பாராட்டுகிறோம்.

ஒரு உண்மைச் சம்பவத்தைத்தான் இந்தப் படத்தில் படமாக்கியிருக்கிறோம் என்று இயக்குநர் ஜெகன் ராயன் சொல்லி இருந்தார்.

அந்த உண்மை கதையையும் கொஞ்சம் திரைப்படத்திற்காக மாற்றி சஸ்பென்ஸ், திரில்லராக கொடுத்து கடைசிவரை படத்தை பார்க்க வைத்திருக்கிறார்.

இந்தப் படம் சின்ன பட்ஜெட் படம் என்பது தெளிவாக தெரியும் அளவுக்கு காட்சிகளும், விசாரணைகளும் சென்றாலும்.. ஏன் இந்த கொலைகள்.. ஏன் இந்த சம்பவங்கள்.. என்கின்ற சஸ்பென்சை மட்டும் கடைசிவரையிலும் அழகாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

ஹோட்டலில் தங்கும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதை வைத்தே அவர்களிடம் பணம் பறிக்கும் ஒரு கும்பலும் இடையில் நுழைந்து கதையை நகர்த்த.. ஒரு க்ரைம் திரில்லர் கதையில் எப்படி திரைக்கதை அமைக்க வேண்டுமோ அதே போல கச்சிதமாக அமைத்து பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன்.

ரூம் பாய்’ என்ற இந்த படம் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம் என்கிற அளவுக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ஜெகன் ராஜ் அடுத்தடுத்த படங்களில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

RATING : 3 / 5

Our Score