‘டண்டனக்கா’ பாடல் இடம் பெற்றுள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை டி.ராஜேந்தருக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்றும், அதன் பின்னர் சமரச பேச்சுவார்தை நடத்தி அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் படத்தின் தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர்கள் ஜெயம் ரவி, ஹன்சிகா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ரோமியோ ஜூலியட்.’ இத்திரைப்படத்தை நந்தகோபால் தயாரித்துள்ளார். லட்சுமணன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில், ‘டண்டனக்கா நக்கா நக்கா…’ என்ற பாடலை ரோகேஷ் என்பவர் எழுதியுள்ளார். அந்த பாடலை பிரபல இசையமைப்பாளரான அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலின் துவக்கத்தில் டி.ராஜேந்தர் பேசுவது போல அவரது குரலை மிமிக்ரி செய்திருக்கிறார்கள்.
இதனை எதிர்த்து டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அந்த மனுவில், இந்தப் பாடலுக்கு இடையே என்னுடைய தனித்துவம் வாய்ந்த என்னுடைய பேச்சுக்கள், உச்சரிப்புக்கள் கொண்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இவற்றை பயன்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. என்னுடைய வசனங்கள், பேச்சுக்களை பயன்படுத்த அவர்கள் எந்த அனுமதியும் என்னிடம் பெறவில்லை.
தற்போது இந்த ‘டண்டனக்கா’ பாடல் வெளியாகியுள்ளதால், ஊடகங்கள் பலவும் அந்த பாடலை தொடர்ந்து ஒலிப்பரப்பி வருகின்றன. இதனால், என்னுடைய நற்பெயர், நடிப்பு பாணி, வசன உச்சரிப்பு ஆகியவற்றை இழிவுப்படுத்தியுள்ளனர்.
மேலும், ரோமியோ ஜூலியட் படம் முழுவதும் என்னை பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெறலாம் என்று சந்தேகிக்கிறேன். எனவே, இந்த படம் வெளியாவதற்கு முன்பு வக்கீல் கமிஷனர் ஒருவரை நியமித்து, படத்தை பார்த்து அதில் இடம் பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள் குறித்து அறிக்கையை இந்த ஐகோர்ட்டு பெற வேண்டும். அதுவரை ‘டண்டனக்கா’ பாடலுடன், ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்…” என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார்ரான டி.ராஜேந்தர் சார்பில் வக்கீல் தியாகேஸ்வரன், தயாரிப்பாளர் சார்பில் வக்கீல் ஆர்.பரணிதரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை ஒரு வாரத்துக்குள், டி.ராஜேந்தருக்கு வசதியான நேரத்தில் பிரத்யேகமாக திரையிட்டு காட்ட வேண்டும். அப்போது, அந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் ஜெயம்ரவி ஆகியோர், டி.ராஜேந்தருடன் படத்தை பார்க்க வேண்டும்.
இந்தப் படத்தில் ஆட்சேபனைக்குரிய, கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தக் கூடிய காட்சிகள், வசனங்கள் இருந்தால், அது குறித்து இரு தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.
இந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவினை, அறிக்கையாக இந்த ஐகோர்ட்டில் இரு தரப்பினரும் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். இந்த உத்தரவினை அமல்படுத்தும் விதமாகவும், இரு தரப்பு வக்கீல்களையும் ‘சட்ட கமிஷனர்களாக நியமிக்கின்றேன்..” என்று உத்தரவிட்டுள்ளார்.